தமிழினப் படுகொலை ஆரம்பம்
22.05.1958ஆம் திகதி தொடரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த 500ற்கும் மேற்பட்ட தமிழர்களை சிங்களக் காடையர்கள் தாக்கி இனக்கலவரத்தை ஆரம்பித்தனர். அப்போதைய சிறீலங்காப் பிரதமர் எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவினது குண்டர்களாலும், சிங்களக் காவல்துறையினராலும் தமிழர்களது வீடுகள், உடமைகள் யாவும் அழிக்கப்பட்டன. 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படனர்
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள்
யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிலையில்மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலுக்கென வந்திருந்த அமைச்சர்களான காமினி திசநாயக்கா மற்றும் சிறில் மத்தியு முதலானவர்கள் தலைமையிலான சிங்களக் காடையர்களால் தமிழ் மக்களின் பண்பாட்டு அறிவுப்பெட்டகம் 1981 மே மாதம் 31ஆம் திகதி தீமூட்டி எரிக்கப்பட்டது. தென்னாசியாவிலேயே அதிக நூல்களைக் கொண்டதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பண்டைய நூல்களையும் ஏட்டுச்சுவடிகளையும் கொண்ட அழகிய அரிய கலைக் கருவூலம் எரியூட்டி, சிங்களத்தின் எண்ணம் தமிழின அழிப்பு ஒன்றையே நோக்காகக் கொண்டது என்பதைப் புலப்படுத்தினர்.
கந்தர்மடம் வாக்குச்சாவடித் தாக்குதல்
18.05.1983 அன்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் போது கந்தர்மடம் தேர்தல் சாவடியில் கூட்டுக்காவலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீதும், பொலிசார் மீதும் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 10நிமிட அதிரடித் தாக்குதலில் இராணுவக் கோப்ரல் ஜெயவர்த்தனா கொல்லப்பட்டான். ஒரு இராணுவக் கோப்ரலும், 2 பெலிசாரும் காயமுற்றனர்.
லெப்டினன் சீலனைக் காட்டிக் கொடுத்த பொலிஸ் அதிகாரி அழிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தாக்குதலணித் தளபதியான லெப்டினன் சீலனின் மறைவிற்குக் காரணமாக விளங்கிய இனத்துரோகி பொன்னையா சுப்பிரமணியம் மீசாலையில் வைத்து 04.05.1984 அன்று விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்.

வல்வெட்டித்துறைப் படுகொலை
09.05.1985 அன்று வல்வெட்டித்துறை நகர்ப்பகுதியை சுற்றி வளைத்த சிறீலங்காப் படைகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50 பொது மக்கள், பொது நூல்நிலையத்தினுள் அடைத்து வைக்கப்பட்டு குண்டுவைத்துக் கொல்லப்பட்டனர். தெருக்களில் வைத்தும் பொதுமக்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர். எல்லாமாக 90 பொதுமக்கள் ஜே.ஆரின் ஆயுதப்படைகளால் படுகொலைசெய்யபட்டனர்
மன்னார் பொலிஸ் நிலையத் தகர்ப்பு
10.05.1985 தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலணிகளால் மன்னார் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. வெற்றிகரமாக நடந்து முடிந்த இத்தாக்குதலின் போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் 7கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. பெருமளவிலான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பல பொலிசார் கொல்லப்பட்டனர்.
சிங்களப் படைஅதிகாரி மேஜர் சிறிலால் மெண்டிஸ் பலி
12.05.1985 அன்று உடுப்பிட்டி பேரூந்து நிலையத்தினுள் தமிழின அழிப்பிற்கென தயாராக இருந்த சிங்களப்படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எறிகுண்டுத் தாக்குதலில் மேஜர் சிறிலால் மெண்டிஸ் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.
வவுனியாவில் இந்திய சிறையுடைப்பு
01.05.1989 அன்று வவுனியாவில் இந்தியப் படையின் சிறையை உடைத்து போராளிகளும் பொதுமக்களுமாக 42 பேர் தப்பினர். இச்சிறையுடைப்பு நடவடிக்கையில் இரு போராளிகள் உட்பட நான்கு தேசத்தின் புதல்வர்கள் வீரச்சாவடைந்தனர்.
அபித்தா கப்பல் அழிப்பு
கடலில் பல போராளிகளினது அழிவுக்கும், பல பொதுமக்களது அவல இறப்பிற்கும் காரணமாக இருந்த அபித்தா கட்டளைக்கப்பல் 04.05.1991 அன்று கடற்கரும்புலிகள் கப்டன் ஜெயந்தனாலும், கப்டன் சிதம்பரத்தாலும் அழிக்கப்பட்டது.
ராஜீவ் கொல்லப்பட்டார்
8000 தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி வைத்த இந்தியப் பிரதமர் ராஜீவ காந்தி 21.05.1991 அன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இவரது படைகளால் தமிழீழத்தின் பல கோடிப் பெறுமானமுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டன, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் மானமிழக்கப்பட்டனர்.
தமிழீழ வைப்பகம் ஆரம்பம்

23.05.1994 அன்று தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புக்களில் ஒன்றான தமிழீழ வைப்பகம் திறந்து வைக்கப்பட்டது.
ஓயாத அலைகள்-3 மே மாதத்தில் நகர்ந்த பாதை

10.05.2000 அன்று நாவற்குழிப் பாலம் மீட்கப்பட்டது. 11.05.2000 அன்று தென்மராட்சிக் கோட்டத்தில் கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு படைத் தளங்கள் கைப்பற்றப்பட்டன. யாழ் மாநகரை நோக்கிய நகர்வில் அரியாலைப் பிரதேசம், கொழும்புத்துறை இறங்குதுறைப் பகுதி கைப்பற்றப்பட்டது. 16.05.2001 அன்று தச்சன்தோப்பு நாவற்குழிப் பகுதி படைமுகாம்கள் தகர்க்கப்பட்டன. ஓயாத அலைகள்-3 படையணிகளால் கைதடிச்சந்தியில் அமைந்திருந்த இராணுவத் தளம் விடுவிக்கப்பட்டது. 20.05.2000 ஓயாத அலைகள்-03 படையணிகளால் தென்மராட்சியின் தலைநகர் சாவகச்சேரி மீட்கப்பட்டது.