காலையில் வீட்டைவிட்டுக் கிளம்பி வழக்கம்போல, இன்றும் தோல்வியைச் சுமந்தபடிதான் வந்திருக்கிறேன்.

நெஞ்சில் கனக்கும் துயரைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

என் முயற்சி பலிதமாகாததால் மனதில் ஏமாற்றமும் விரக்தியுமே நிறைந்துபோயுள்ளது. வயிறுவேறு புகைந்து பசியெடுக்கிறது.

வீட்டில் ஆறஅமர இருந்து வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுப் பலநாட்களாகிவிட்டன.

பசியை மறந்து தூக்கம் கெட்டுப்போன நாட்களே எங்களுக்கு மீதியாகித் தொடர்கின்றன.

எத்தனை நாட்கள்தான் இப்படி....?

வீட்டுக்கு வந்தும் அவளைத் தேடுகிறேன்.

கண்மணி... கண்மணி எங்கே போயிருப்பாள்?

தனக்கு ஆறுதல் தேடி அயலவரிடம் போயிருப்பாள் என மனம் எண்ணிக்கொள்கிறது. கூடத்தின் உள்ளே காலடியெடுத்து சேட்டைக்கழற்றி சுவரில் மாட்டிவிட்டுத் திரும்புகிறேன்.

இருளில்....அங்கே கண்மணி தூணில் சாய்ந்து யோசனையில் ஆழ்ந்தபடி இருக்கிறாள்.

முன்னரெல்லாம் நான் வெளியே போனால் என் வரவுக்காக வாசல்வரை வந்து காத்து இருப்பவள். என்னை வரவேற்பதில் அக மகிழ்ந்து போயிருப்பவள்.

இப்போது.... அந்தச் சம்பிரதாயமெல்லாம் அவசியமற்றுப் போய்விட்டது அவளுக்கு. சமீப நாட்களாக அவளது நடவடிக்கைகள் அர்த்தமிழந்து வருவதாக எனக்குப்படுகிறது.

என்னிடம் முகம் மலர்த்திப்பேசி எத்தனை நாட்களாகிவிட்டன.

ஆரம்பத்தில், செய்தியறிந்து உறவினர்கள், நண்பர்கள், அயலவர்களென நிறையப்பேர் அனுதாபம் தெரிவிக்க வந்துபோயினர்.

இப்போ அவர்களின் வரவும் அருகி விட்டது.

கடைசிவரை அவளுக்கு ஆறுதலளிக்க என்னைவிட்டால் யார் இருக்கிறார்கள்.

நித்திய சோகத்தில் தவித்து என்னவாக மாறிவிட்டாள். நன்றாக உடல் நலிந்து விட்டாள். பாவம், எப்படி, அவளுக்கு ஆறுதல் கூறுவது.....?

கண்மணி எனக்கு வாழ்க்கைப்பட்டதிலிருந்து, அப்படியென்ன சுகத்தைக் கண்டாள்.
மத்தியதரக்குடும்ப வாழ்வின் நெருக்கடிகளை என்னுடன் பகிர்ந்து வந்திருக்கிறாள். எனது அற்ப சம்பளத்தில் போதாமைகளைச் சரிக்கட்டி வாழப்பழகியிருந்தாள். இந்த முப்பத்தைந்து வருட தாம்பத்தியத்தின் பேறு அந்த மகன் ஒருத்தன்தான். எங்கள் வாழ்வின் பிடிப்பே அவனாக இருக்கையில்.....

அவனைப் பறிகொடுத்துவிட்டு வாழ்வது......

எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்....?

இடம்பெயர்ந்துபோய் வடமராட்சியில் தெரிந்தவர் வீட்டில் ஒதுங்கி, வீடு காணி சொத்து என்ற நினைப்பில் மீளவும் வந்து குடியேறியபோதுதான் அந்தத் துயரம் எங்களுக்கு நேரிட்டது.

கண்மணி என்னிடம் அடிக்கடி குறைப்படுவதுபோல.... சனத்தோடு சனமாக வன்னிக்குப் போயிருந்தால் மகனைக் காப்பாற்றியிருக்கலாமோ...?

அந்த நப்பாசை மேலெழ, கண்களில் திரைகட்டிய நீரைக் கையினால் அழுத்தித்துடைத்துக் கொள்கிறேன்.

பெற்றவர்கள் எங்கள் கண்முன் நடந்த அக்கொடிய சம்பவத்தை மறந்துவிட்டு எப்படி நிம்மதியாக...? அன்று ஜீவனடங்கிப் போன எமது வாழ்வு சோபை இழந்துவிட்டது. எங்கள் மனங்களும் இருள் மண்டிப் போய் சூனியமாகிவிட்டன.

சிதைந்தபோன வாழ்வைச் சீர்செய்யச் சொந்த இடத்தில் வந்து குடியேறியது எங்கள் தப்பா.....?

அன்று..... அந்த மனம் வெறுக்கும் நாளில்.....

ஊர் அடங்கிப்போயிருந்தவேளை, நாய்களின் குரைப்பொலி மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. வீட்டில் தாயும் பிள்ளையும் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

கேற்றைத்தட்டி உள்ளே வந்தவர்கள் கதவைத்திறக்கும்படியும், வீட்டைச் சோதனையிட வேண்டுமெனவும் அதட்டி உள்ளே வந்தனர். இறுதியில் எதுவும் கிடைக்காமையால், மகனை மட்டும் விசாரணைக்காக கூட்டிச்செல்லவேண்டுமெனப் பிடிவாதமாக நின்றார்கள்.

அவன் பாடசாலையில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன் என்பதற்கு ஆதாரங்களைக் காட்டினோம். ஏதுமறியாத எங்கள் பிள்ளையை விட்டு விடும் படி மன்றாடினோம்.

அவர்கள் மசிவதாகத் தெரியவில்லை. பிள்ளையை எப்படியும் தங்களுடன் கொண்டு செல்வதில்தான் உறுதியாக நின்றனர்.

பிள்ளையை ஒன்றும் செய்யவேண்டாமெனக் கையெடுத்துக் கும்பிட்டோம்.

அவர்களின் முகத்தில் எந்த இசைவையும் காணமுடியவில்லை. தங்களது முடிவை மாற்றவில்லை.

எங்களைப் பிரியமன மில்லாமல் அழுதுகொண்டு போனவனைத், தன்னைக் காலையில் புங்கன்குளம் முகாமில் வந்து பார்க்கும்படி கூறிச் சென்றவனை இன்றுவரை தேடி அலுத்துவிட்டோம்.

எல்லாம் நேற்று நடந்ததுபோல, நினைவுத்தடத்தில் மீண்டுவர, இதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது.

அவனில் மிகுந்த வாஞ்சைகாட்டி வளர்த்த கண்மணியால் இதை எப்படித் தாங்கிக் கொள்ள இயலும்.

மகனில் எவ்வளவு நம்பிக்கையை வளர்த்துவிட்டிருந்தோம். கடைசியவரை எங்களுக்குத் துணையிருப்பான் என எத்தனை கற்பனைகளை வளர்த்திருந்தோம்.

அந்த இனிமையான வாழ்வின் சோபிதங்களை நடுஇரவில் பறிகொடுப்பதென்பது......

அவனுடன் வாழ்ந்த இனியபொழுதுகள் இனியும் மீளமாட்டாதா என்ற ஏக்கம் என்னுள் கிளர்கிறது. துயரத்தால் மனம் வெதும்ப அவனது அறையைப் பார்க்கிறேன்.

அதுவும் எங்கள் மனம் போல வெறிச்சுக்கிடக்கிறது.

மேசையில் அவனது புத்தகங்கள் பரவிக்கிடக்கின்றன. அவன்கூடவே இருக்கும் சிறிய வானொலி தீண்டுவாராற்றுக் கிடக்கிறது. ஆசையுடன் வாங்கி மேசையை அலங்கரித்த பூச்செண்டு சரிந்துபோய்..... அவன் அடிக்கடி விரும்பி அணிந்து அழகுபார்க்கும் அந்த நீலநிற ரீசேட், கறுப்பு ஜீன்ஸ் இன்னும் அதேயிடத்தில்.....

அவற்றையெல்லாம் ஒருமுறை ஆசைதீரத் தொட்டுப்பார்க்க மனம் அவாவுகின்றது.

கண்மணி கூடத்தில் இருந்து என்னை அவதானித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.

அவளுக்கு என்ன பதில் சொல்வது?.....

இன்றுவரை பிள்ளையைப் பற்றித் தகவல் எதுவும் இல்லை.

நகரிலுள்ள முகாம்கள், காவலரண்கள், பொலிஸ் நிலையம் என நாயாய் அலைந்தும் கண்டபயன் ஒன்றுமில்லை.

 

இன்றும்கூட செஞ்சிலுவைச் சங்கத்துக்கு மனுக்க கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். முன்னர் போல அல்ல. இப்போது என்னுள் அவநம்பிக்கையே வலுத்துவருகின்றது.

இந்நிலையில்.... அவனை.... கண்மணியை... எப்படித் தேற்றுவது....?

என் வார்த்தைகளையும் அவள் நம்ப மறுத்து வருவதாகப்படுகிறது.

முன்னர், மகன் எங்களுடன் இருந்த வேளை, அவனுக்கு ஏழரைச்சனியன் தோஷம் ஆரம்பித்துவிட்டதெனக் கூறி, தன்னை ஓறுத்து எத்தனை விரதங்கள் இருந்திருக்கிறாள்.

சனியனுக்குச் சாந்தி செய்யவேண்டுமென கோவில் கோவிலாகப் போய் வந்திருக்கிறாள்.

இறுதியில், எல்லாமே பயனற்றுப் போய்.... வெறுப்பைத்தருகிறது. உடல் வேறு அடித்துப்போட்டதுபோல அசதியாக இருக்கின்றது.

மேசையிலிருந்த தண்ணீரை அருந்திவிட்டுக் கட்டிலில் வந்து சாய்கிறேன்.

பிள்ளையைப் பற்றி ஏதும் தகவல் கொண்டு வந்திருப்பேன் என எண்ணி அருகில் வந்து நிற்கிறாள்.

அவளின் முகத்தை எதிர்கொள்ளும் துணிவு எனக்கு வரவில்லை. எனது இயலாமையை எப்படி அவளிடம் இயம்புவது?

விசும்பியபடி என்னைப் பார்க்கும் அவளில் இரக்கம் மேலிடுகிறது.

கண்மணியுடன் மனம்விட்டுப்பேசி, இதயத்திலிருந்து எழும் துயரத்தை அவளுடன் பகிர்ந்து, ஆரத்தழுவி ஆறுதல் கூறவேண்டும் என மனம் உந்துகிறது.

பின்னர் சமநிலைக்கு மீண்டு,

“கண்மணி.....கண்மணி....எனக்கு பசிக்குது. சாப்பிட எதும்...?”

சூழ்நிலையிலிருந்து நழுவும் பிரயத்தனத்துடன் கேட்கிறேன்.

என்னை ஒருமுறை பரிவுடன் பார்த்து விட்டுக் கண்களத் துடைத்தபடி சமையலறைக்குள் செல்கிறாள்.

பின்தொடர்ந்து சென்று கீழே அமர்கிறேன்.

ஆக்கிவைத்ததைக் கோப்பையில் போட்டு நான் சாப்பிடுவதைப பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

“கண்மணி.... நீ சாப்பிட்டியா...?”

“.......”

என்னிடம் குற்றவுணர்வு அரும்புகிறது. அவள் என்னிடம் ஏதோ கேட்க விழைவதும் தயங்குவதுமாக இருக்கிறாள்.

“இண்டைக்குப் பேப்பர் பார்த்தனீங்களோ.....?”

நீண்ட மௌனம் கலைத்து கேட்கிறாள்.

“இல்லையப்பா...ஏன்....?

“கிழக்கரியாலையிலை ஒரு கிணத்துக்கை எலும்புக்கூடுகள் கிடக்குதாம்.....?

“யார் சொன்னது...?”

“பரஞ்சோதியக்கா வந்து சொன்னவ...”

“......”

“அவங்கள் பிடிச்சுக்கொண்டுபோன பிள்ளையளின்ரையாம், அதில எங்கட பிள்ளையோட பிடிச்ச விதானைப்பொடியன்ரையுமாம்.......”

“.......”

“அதுதான்..... சிறாப்பர் சிவலிங்கத்தாற்ரை மகன்”

“;....”

நான் சாப்பிட்டபடி அவள் சொல்வதை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

அவளிருக்கும் நிலையில் இச்செய்தி அவளை மோசமாகப் பாதிக்கும் என்பதால், அலட்சியமாகக் கூறுகிறேன். “பேப்பரில் வாறதெல்லாம் உண்மையே.......”

“ஓ நீங்கள் இப்ப வர வர எனக்கு ஒண்டும் சொல்லுறேல்லை”

எனச்சொல்லியபடி மீன்குழப்பை ஊற்றுகிறாள்.

இடையில் நீண்ட பெருமூச்சொன்றை விட்டுவிட்டு,

“என்ரை பிள்ளை இப்ப என்ன சாப்பிடுகுதோ.....? பட்டினிதான் கிடக்குதோ.....?

பெற்றவளின் ஆதங்கம் என்னையும் உறுத்துகிறது. அவளை ஏறிட்டுப்பார்க்க இயலாமல் எழுந்து சென்று கட்டிலில் சாய்கிறேன்.

அவளுக்கும் என் இயலாமை புரிந்திருக்க வேண்டும். அதற்குமேல் எதுவும் பேசாமல், அருகில் வெறுந்தரையில் படுக்கின்றாள்.

பிள்ளை இவ்வேளை என்னவானனோ என்ற தவிப்பில் கணமும் அவன் நினைவில் உருகி வருகிறாள் சமீப நாட்களாக.....

இரவில் அடிக்கடி கனவுகண்டு பதறியடித்து எழுவதும், ஓ... வென்று நீண்டநேரம் அழுவதும், நித்திரையின்றித் தவிப்பதுமாகத் தான் அவளது பொழுதுகள் கழிகின்றன.

நானும் நன்றாகக் கண்ணயர்ந்து போயிருந்தவேளை... நடுநிசியில்.....

அப்படித்தான் ஏதோ கனவுகண்டிருக்க வேண்டும்.

“ஐயோ.... ஐயோ... என்ரை பிள்ளையைக் கொண்டுபோறாங்கள்.....”

அவளது அலறல் என்னைத் திடுக்கிட வைக்க அதிர்ந்துபோகிறேன். கீழே அருகில் படுத்திருந்தவளை உற்றுப்பார்க்கிறேன்.

முகம் ஒளியிழந்து விகாரமாய்...

கண்கள் செம்மை பாரித்து வெறித்தபடி.....

வார்த்தைகள் பிசிறுதட்டிக் குழம்பியபடி.....

உடல் பலவீனமாய் நடுங்கியபடி....
அவள் சுயத்தை இழந்துவிட்டது தெரிகிறது.

“கண்மணி.... கண்மணி...;”

ஆதரவாக அழைத்தபடி அவள் கைகளைப் பற்றுகிறேன். கைகளை வெடுக்கெனப் பறித்துக்கொள்கிறாள்.

அவளது உடலசைவில் ஒரு மிரட்சி, வேகம் தெரிகிறது.

கலைந்து கிடந்த கூந்தலை அப்படியே அலையவிட்டுவிட்டு, சேலையை அள்ளித் தூக்கிப்பிடித்தபடி வெளியே ஓட எத்தனிக்கிறாள்.

“கண்மணி..... கண்மணி. எங்கே....”

இன்னொருமுறை அதட்டுகிறேன்.

அவள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை.
பிள்ளையைத் தேடித் தெருவில் இறங்கத் துணிந்துவிட்டாள்.

அவளில் ஓர் தர்மாவேசம் வெளிப்படுகிறது.

பிள்ளையைப் பறிகொடுத்த கவலை அவளுக்கு.

இருவரையும இழந்துவிட்ட சோகத்தில் நான் தவித்து நிற்கிறேன்.

மு. அநாதரட்சகன்