கவிதை

- போராளி காந்தா

 

என்றும் என் பிரியமுள்ள அக்காவிற்கு - இனி
ஒரு போதும் உங்கள் இயல்பை
குழப்பமாட்டேன்
நீங்கள் நீங்களாக.....
உங்கள் பாதையில் நடவுங்கள்.

ஊரில் உயிரை வைத்துக் கொண்டு.
அன்னிய மண்ணிலே உடலுடன் உலவும் - உன்
அன்புத் தம்பியின் திருமுகம்

அக்கா எப்படியிருக்கிறாய் - உன் ஆசை மகளுடன்........
அன்னிய தேசம் வா. வாவென்று அடிக்கடி எழுதினேன்.
நான் அங்கு வந்த பின் தான்
அனைத்தும் அறிந்து கொண்டேன். - இங்கு
ஆண்டுகளைத் தான் உருட்டி ஓட்டியுள்ளேன்
ஆனபடி எதையும் இங்கு கண்டதில்லைப் போ

திரைகடல் கடந்து வந்திங்கு
திரவியம் தேடி உழைத்து.
அப்பாவின் சுமை குறைத்தேன்.
எல்லாம் இப்போ வெறுமையாய்
எங்கோ..... எதற்கென்று கிடக்கிறதே.

உங்கள் உள்ளங்களை புரியவில்லை.
உள்ளார்ந்த நிலைமைகளை அறியவில்லை.
ஓடிவா என்றேன் இப்படியிருக்காதே
உறுப்பர் வேறுலகம்
உனக்காவும் விரிந்து கிடக்கிறதென்று
உண்மை உலகு இதுவென்றேன்.
எழுதியும் தொலைபேசியில் பேசியும்
ஏனோ துயரப்படுத்தி விட்டேன்.
அதற்காய் முதலில் மன்னித்து விடு

உன்னிடம் வந்தே
உண்மையில் சொல்கிறேன்
உன்னத பிறவிகள் நீங்கள்தான்.
அக்கா மீண்டும் மன்னித்துவிடு
என்னிடம் வந்திடு என்று
உன் இருப்பை குழப்பியதற்கு.

எப்படி இருக்கிறான் உன்
அருமை மகன்.........
மாமா மாமாவென்று
மகிழ்ச்சி பொங்க குதித்தானே

அவனிடம் இருந்து கூட - நான்
ஆயிரம் விடயங்களை
அள்ளி எடுத்து வந்துள்ளேன்.
அவன் வயதில் நான்
அறியாத பருவத்தினனாய் திரிந்தேன்.

அடுத்தது இப்படி வருமென்று
எப்படி விளக்கினான் தெரியுமா
என்னதான் இருந்தாலும்
அவன் புலிக்குப் பிறந்தவனல்லவா
அசலாய் அவன் வளர்ச்சி
அவன் அருகில் இருப்பதற்கு
ஆசையாகத்தான் இருக்கிறது.

ஈர்பத்தாண்டில் எத்தனை மாற்றம்.
உங்களோடு வந்திருந்த ஒருமாதமும்
ஓராயிரம் விடயங்களை
கண்டு கொண்டேன்.

நாங்கள் எல்லோரும் ஒன்றாய்
ஓர் இடத்திற்கு சென்றோமே – அன்று
ஓடிச் சென்று உன் மகன் -- என்
கைகளை இழுத்து
“இதற்குள் தான் எங்கட அப்பா” என்றானே
இங்கு நீங்கள் ஏன் வரமறுத்தீர்கள் - என்று
அப்போது தான் உறைத்தது.
அடுத்தது கொஞ்சம் தள்ளி
மாமா 'இதுக்குள்ளதான் மாமி" என்று
என் உலகையும் அதில் உனர்த்தினானே
எப்படி இவற்றை மறந்து
இங்கு வாழ்வது என்றே புரியவில்லை

இவ்வேளை இப்படி எல்லாம் எண்ணவில்லை
எப்படி இருக்கிறீர்களோ
என்றுதான் ஓடி வந்தேன்.
கண்டேன் மண்ணின் மகிமையை
எதை எவ்வாறு சொல்வது.

அக்கா என் வாழ்வில் என்றும்
கிடைக்காத அதிஷ்டத்தை கண்டேன்
அதிகம் மகிழ்ந்த நாள்
வாழ்வில் அதுதான் -- எங்கள்
தலைவனைக் கண்டேன்.

தேசமே உன்னை பிரியேன்
இனி பிரிந்தாலும் தாங்கேன்
உன்னடியில் உனக்காய் சாவேன்
என்று என் உள்ளம்
உண்மையாய் உறுதி எடுத்துக் கொண்டது.

ஒருமாதத்தில் என் உள்ளம் இப்படி என்றால்
எப்படி இருப்பீர்கள் என்று புரிகிறது.
அக்கா ஒன்று மறந்து விட்டேன்
இங்கு வருவதற்கு முதல் நாள்தான் அறிந்தேன்
என் அத்தான் உன் கணவரின்.
தங்கை மகன் பிறந்து ஓர் மாதத்தில்
தொட்டிலில் கிடத்தும்
வைபவம் வந்தாலும் - அப்போ
தாய் மாமன் மண்ணுக்குள் என்றதும்
மாமி நீ இருக்கிறாய் என்று.....

கைம் பென் என்றாலும் - அவள்
கையால்தான் தொட்டிலில்
இடவேண்டும் என்றதும் அதை நீயே
செய்தாயாமே
நெஞ்சு கனக்கிறது.
ஆண் மகன் நானிருக்க நீதானே
அப்பாவிற்கு கொள்ளி வைத்தாய்
எப்படி நீ இங்கு வருவாய்
எல்லாம் புரிகிறது.

அக்கா எங்கள் மாமா வீடு சென்றேன்
இப்போ நன்றாக மாறிவிட்டார்கள்.
மாமி கூட பயிற்சி எடுததத்தாகச் சொன்னார்.
சின்ன வயதில் எனக்கென்று
சொல்லி வைத்த பூம்பாவையின்
கல்லறைக்குச் சென்றாயா என்று மாமா கேட்டார்
- அவள்
நல்ல கெட்டிக்காரியென தலைவருடன்
எடுத்துக்கொண்ட படமும் காட்டி
பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.

எனக்கேதோ எங்கள் பூமி
எங்களுக்கு மிக விரைவாய் வேணும்
என்ற எண்ணமே நித்திரைக்கு போக முன்
நித்தம் வருகிறது

வேறு என்ன அக்கா - இனி
ஒரு போதும் உங்கள் இயல்பை
குழப்பமாட்டேன்
நீங்கள் நீங்களாக.....
உங்கள் பாதையில் நடவுங்கள்.
மீண்டும் மறுமடலில் சந்திப்போம்.

போராளி காந்தா.