கவி நாடகம்
இனிதான உறவைப் பேணுவீர்

தமிழகத்தில் மிக மோசமான அளவிற்கு மாமியார் மருமகள் பிரச்சனைகள் தலை
தூக்கி ஆடுகின்றன. மாமியார் கொடுமை தாங்காது தம்மையே தீமூட்டி எரித்து தற்கொலை செய்துகொண்ட பெண்களின் கதைகளும் ஏராளம்.
நம்ம ஊர்களிலும் மாமியார் மருமகள் இடையே ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் ஆங்காங்கு நிகழ்ந்து வருகின்றன. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களிடையேயும் ஆங்காங்கே இடம்பெறும் மாமியார்-மருமகள் சண்டைகள் நமது கலாச்சாரத்தின் வேதனைக்குரிய நிகழ்வாகிவிட்டது.
இந்நிகழ்வினை நாட்டுப்பாடலின் பின்னணியோடு இழையோடவிட்டிருக்கிறேன். பாரிசுக்கு வெளியே ஒரு தனிவீடு. அந்த வீட்டில்.. தாய் - மகன் - மருமகள் ஒரு குழந்தை குழந்தையின்பேறுபார்ப்பதற்கே மகன் தனது தாயை பிரான்சுக்கு கூப்பிடுகிறான். தாயார் வந்து இரண்டுவருடங்கள் கடந்துவிட்டன. குழந்தையையும், வீட்டையும் பராமரித்ததிலும் அவள் களைத்துப்போய்விட்டாள். வேறு பல உளவியல் காரணங்களாலும், நாட்டைப் பிரிந்த துயராலும், சிறை போன்ற வாழ்வாலும் அவள் நலிந்து போய்விட்டாள்.
மருமகளோ வேலைக்கும் போவதில்லை வீட்டிலும் பணியெதுவும் ஆற்றுவதில்லை எதற்கெடுத்தாலும் மாமியாரைக் குறை கூறியபடி இருப்பாள்.
இந்தநேரத்தில் ஒரு நாள் தாய் விடிந்ததும்.
வெகுநேரமாகியும் எழுந்திராத மருமகளைப் பார்த்து மனம் நொந்து பாடுகிறாள்.
மாமி:-
வெள்ளிக்கிழமையடி
விடிந்ததொரு நாளுமடி
பூலோகங்கள் எழுந்திருச்சு
பூவோ மலர்ந்திருச்சு
எழுந்திரடி மகளே மகளே
குளிச்சுமுழுகப் போவனடி
குசினிகிடக்கும் கிடயப்பாரடி
குழந்தையழுவதைக் கேளடி
மகாராணி மகளாட்டமோடி
மாபாவி எழுந்திரனடி....
மருமகளுக்கு கோபம் வந்துவிட்டது. முகத்தை 'உம்" மெண்டு வைத்துக்கொண்டாள்.
ஊமைமனத்தால் உசுப்பினாள் எரிபார்வையால் நோக்கினாள்.
மருமகள்:-
ஊரில் கிடந்து
ஊனற்று உசிர்போறவள
உயிர்வதையன் செல்லடியில்
தொலைந்துபோறவள
உந்த வீட்டுவேலை செய்யத்தானடி
உசிரோடு இங்கே எடுத்தமடி
வம்பை விலைக்குவாங்குகிறாயே
உன்னை என்னசெய்யுறேன் பாரணை!
கர்வம் தலைக்கேறிவிட்டது.
வீட்டிற்குள் மட்டுமரியாதையற்று தலையைச் சிலிப்பிவிட்டபடி அங்குமிங்குமாக நடந்தபின் செற்றியில் கால்மேல் கால்போட்டபடி இருந்தாள். மனமுருகிய மாமிக்கு மரியாதைக் கேடாகிவிட்டுது இருந்தும் துணிவோடு.
மாமி:-
என்ன கோலமடி இது
அடிச்சான் புடிச்சானாடி?
அழுதுட வைச்சானாடி?
அல்லலுற்ற சீமையிலே
பூப்போல வைச்சானடி உன்ன
என் மகனே என் மகனே
இந்த வரிகளைக்கேட்டதும் மேலும் கொதிப்படைந்தாள் மருமகள். வாய்க்கொழுப்பு பிதுங்கியதால் விழுந்த வரிகள்.
மருமகள்:-
என்ர சொந்தக் காசிலவந்தநான்
என்ர சொந்தக் காலில நிக்கிறனான்
என் பிறப்புகள் வாங்கித்தந்தவீட்டில இருக்கிறன்நான்
நாளுக்கொரு சண்டைபோடுறீயே?
தாயின் சர்வாங்கம் அனைத்தும் நடுங்கத் தொடங்கியது. கண்ணீர் பெருக்கெடுத்தோட செய்வதறியாது நின்றுகொண்டாள்.
அவளோ தாயின் மீது குற்றத்தைப் பலவிதமாகச் சுமத்தத் துடித்தாள்.இந்நேரம் அவள் கணவன் உள்ளே வருகிறான்.
அவன்கோலம் கண்டதும் அரவனைப்புப் பாடல் எழுந்தன.
மகன்:-
காலைக் கருங்குயிலே
வாடியிருப்ப தேனடி?
தாயாரிடம் போக
தாகமோ பெண்மயிலே
பாரிஸ் கடைத்தெருவுக்குப்
போகவேகமோ துணைமயிலே
போட்ட நகைகளுக்கு
புதுநகைகள் வேண்டுமோ கண்மயிலே
வீட்டைப்புள்ளையைப் பார்க்கத்தான்
ஆளிருக்கடி உனக்கென்ன
கவலையடி சொல்லடி என்னுயிரே?
இக்கொஞ்சலில் மிஞ்சியவள் கெஞ்சுகிறாள்.
இந்நேரத்தில்தான் ஆளை மடக்கவேண்டும்.கண்ணீரை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டவள் வேண்டினாள்.
மருமகள்:-
கட்டில் வீட்டிறங்கிக்
காரியங்கள் பார்க்காதே
மெத்தைய விட்டிறங்கி
வேலை ஒன்றும் செய்யாதே
என்றெனக்குச் சொன்னாயே!
என்அத்தான் என்னை உன் தாய்
தினம் தினம் அழவைக்கிறா!
உண்மையத்தான் நான் சொல்லுறேன்.
இந்த வரிகளைக் கேட்டதும் அவன் திரும்பித் தாயைப் பார்த்து எதையோ கேட்டுவிட முனையும்போது அவள்-அவன் நாடியைப் பிடித்துத் திருப்பியபடி என்னை முதலில் பாரென்றாள், பின் அன்பான அதட்டலோடு
மருமகள்:-
மாமி படுத்துறது
மட்டிலே அடங்கவில்லை
மாமியின் வாய்த்துடுக்கு
கொஞ்சமும் பொறுக்கவில்லை
நாகரீகமற்ற நாய்க்குரைப்பு
நானிருக்க முடியவில்லை
சாமியிடம் வேண்டிவிட்டேன்
ஊர் உறவோட அனுப்பிவிடு
உதை நீ செய்யாட்டி
உவளை நீ மறந்துவிடு...!
இவ்வளவையும் கேட்டுநின்ற தாயின் உள்ளத்து வேதனையைச் சொல்லவும் வார்த்தையற்றுப் போச்சு.
நெருப்பில் மிதித்த கோரனியத்தைக் கொப்புளிக்கின்றாள் தாய்.
மாமி:-
ஒன்றுக்கும் அஞ்சாத -என்
மன்னவரை விட்டுவந்தேன்
ஒன்றுக்கும் அஞ்சாத -என்
நாட்டவரை விட்டுவந்தேன்
ஒன்றுக்கும் அஞ்சாத -என்
மாவீரரை விட்டுவந்தேன்
கால்வயிற்றுக் கஞ்சி குடித்தாலும்
மாவீரரை பராமரிப்பதில் போற உசிரை
இங்கு கொண்டு வந்தேனே
இந்த பரிசுகேடு எனக்கு வேணுமா?
தேனுறைந்த பாவினைப்போல் -என்
தித்திக்கும் நற்பிறப்பினை விட்டுவந்தேன்
திசைதப்பி விட்டேன்; -என்
உசத்திப் பிறப்பையே விட்டுவந்தேன்
கேளடா என்மவனே
கெட்டழிவாள் பேசுறதை
பாரடா என்மவனே
பாரழிவாள் பாடுறதை
இந்நேரம் மகன் மங்கலான கவலைச்சிரிப்போடு பாடுகிறான், மருமகள், குலுங்கிச், குலுங்கிச், சிரிக்கிறாள், தாய் தலையிலடித்து அழுகிறாள்.
மகன்:-
நவ்வாப் பழந்தான் -அம்மா
நான்தின்னும் சக்கரைதான்
கொவ்வாப் பழத்தை அம்மா
கொண்ட அணைத்திருக்கலாகாதோ?
இதைக்கேட்ட மருமகள் சிரிப்பின் திமிரோடு தொடுக்கிறாள் வேதனையின் அம்புதனை,
தாய் செய்வதறியாது மூச்சற்று நிற்கிறா......
மருமகள்:-
முன்னரைப்போல்
நினைக்காத மாமி
அந்தநாள் போல இப்ப
அதட்டாதே மாமி
மூச்சுநிற்கும் முன்னமே
ஓடிச்சேர் ஊரோட மாமி
இருபக்க அம்புகளின் தைப்பில் இதயம் செய்வதறியாது, ரோசத்தையும் - பாசத்தையும் நேசமற்ற கோலத்தையும் வந்தமண்ணில், இவர்கள் ஆடும் வேசத்தையும் இப்படியே போனால் இக்குடும்பம் எங்கே போய்முடியும் என்ற வேதனையின் விளிம்பில் நின்றபடி நெக்குருகினாள், அவள் பெற்ற குழந்தை தாய் வளர்த்ததால் நன்றியோடு தாவுது... தாய் சுமந்த பெற்றபுள்ள அவள்வயிறிற்றில் ஏறி மிதிக்குது.
மாமி:-
போடி போடி சிறுக்கி
போறவழி தெரியுமடி சிறுக்கி
உன்திமிர், அடங்குமடி சிறுக்கி
திரும்பி ஒருமுறை மகனை வெறிச்சுப் பார்த்துவிட்டு வெட்கம் கெட்டவனே எனும் ஏச்சோடு ஏறிய தொனியில்
உவள்கட்டும் சேலையை
உளுத்தனே நீகட்டித்திரியடா
இனசனத்தோட சாவதிலே
ஆளான என்உசிரும் மேலடா
பட்டால்தான் அறிவு வருமோடா
கெட்டால்தான் தெளிவு வருமோடா
போடி... போடா... என்னூர்
போய்ச்சேரும் ஞானம் வந்ததடா
கஞ்சி கூழ் குடிச்சாலும் -என்
புழுதிமண் போல் நாடில்லைப் போடா
செத்தாலும் என்பிணத்தை நீ பார்க்க வர வேணாமடா
கண்ணீர் மாரிமழையானது, தனித்துவிடப்பட்ட நடுக்கத்தில் தொகுத்துவி்டப்பட்ட பாடல், தாயின் இத்தொனி அடங்கும்முன், தாய் ஊர்போய்ச் சேர்ந்தாள். விவாகரத்துக்கும் போனது, இன்றும் மருமகள் போன்றவரின் கர்வம் அடங்கிவிட்டதா? அதுவும் கேள்விக்குறிதான்? புலம்பெயர்நதோரே 'இனிதான உறவைப் பேணுவீர்" அழியாத நம் மரபைக் காண்பீர். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் நாம் கட்டிக்காக்கப்பட வேண்டிய கட்டாயக் கடமைகளில் இவையும் ஒன்றாகும்.
-மா.கி. கிறிஸ்ரியன்
|