மீள்நோக்கல்

மூன்றாண்டு போர்நிறுத்தம்:
தேசியமுரண்பாடுகளில் போரற்றசூழலின் தாக்கம்


நாதன்

 

இலங்கைத்தீவின் இனச்சிக்கலிற்கான போர்நிறுத்த உடன்பாடு 4வது ஆண்டில் கால்பதித்துள்ளது. இந்தப் போரற்ற பயணம் இன்னமும் எதுவரை தொடரும் என்கின்ற நிச்சயமற்ற கேள்விகள் மீள தீர்க்கமாக எம்முன் எழுந்துள்ள சூழலில் இந்த உடன்பாடு சிங்கள பேரினவாதத்திற்கும், தமிழ் தேசிய விடுதலை எழுச்சிக்கும் இடையேயான பெருமுரண்பாட்டில் எத்தகைய தாக்கத்தை செய்துள்ளது என்பது பற்றிய மீள்பார்வை முக்கியமானதாகவுள்ளது.

இந்த போர்நிறுத்த உடன்பாட்டின் அடிப்படையாகத் திகழ்வது படைவலுச்சமநிலை. சிங்கள தமிழ் தேசங்களிற்கு இடையே நிலவுகின்ற படைவலுச்சமநிலையை ஏற்று, கட்டுப்பாட்டுப் பகுதிகளை வரைவு செய்து இரு தேசத்தின் தலைவர்களும் இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டில் 2002 பெப்ரவரியில் கைச்சாத்திட்டனர். இந்த உடன்பாடு தமிழ் மக்களின் இயல்புவாழ்வு மீள உருவாகுவதற்கான அடிப்படைகளை ஏற்றுக் கொண்டது. படைகள் மக்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேறுவதற்கான அட்டவணைகள், தமிழ்கூலிப்படைகளின் ஆயுதங்களைக் களைவதற்கான அட்டவணை எனப் பல கட்டங்களை வகுத்து தயாரிக்கப்பட்டது. அனைத்துலகினதும் ஆதரவைப் பெற்றதாகவும் விளங்கியது.

இந்த வலுவான உடன்பாட்டின் அடிப்படையில் 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரு உதவிவழங்கும் மாநாடுகள் கூட்டப்பட்டன. சில சிவில்நிர்வாக, இராணுவ கூட்டு முயற்சிகள் பரீசீலிக்கப்பட்டன. புலிகளினால் இடைக்கால தன்னாட்சி அதிகாரத்திற்கான வரைவு சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், இறுதியில் 2004ம் ஆண்டின் கடைசிப் பகுதியில் தமிழ் சிங்கள தேசங்களுக்கு இடையேயான உறவு சிக்கலுற்று முரண்பாடுகள் மலையென எழுந்து நிற்பது வெளிப்படையானதாகியது.

சுனாமி ஏற்படுத்திய பேரழிவு இந்த மிக முரண்பாடான நிலவரத்தில் சற்று பதட்டு தணிப்பை மேற்கொள்ளும் என நோர்வேயாலும், அனைத்துலக தரப்பினரால் எதிர்பார்க்கப்பட்டது. இரு தரப்பினரும் இணைந்து ஒரு பொதுவான கட்டமைப்பின் கீழ் செயற்படுவதற்கான வழிமுறைகளை ஒரு சிக்கல் தவிர்ப்புக்கான வியூகமாக முன்வைத்து நோர்வே மற்றும் சர்வதேச தரப்புக்கள் மிக முனைப்பான முயற்சிகளை முன்னெடுத்தன. எனினும், சிறீலங்காவின் தலைமைப்பொறுப்பில் உள்ள உறைந்து போன இனவாத நோக்குக் கொண்ட சக்திகளின் விட்டுக்கொடுப்பற்ற போக்கு நிலைமையை மீள பதட்டத்திற்குள்ளாக்கியுள்ளது.

இந்தப் புறச்சூழலின் ஊடாக ஆழ நோக்கின் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் சிங்கள உறவு எத்தகைய தாக்கத்திற்குள்ளாகியது என்பதை கணித்துக் கொள்ளலாம்.

அடிப்படையில், புலிகளின் பெரும் சமர்க்கள வெற்றிகளின் பின்னரே சிங்கள இனவாத அமைப்பை போர்நிறுத்தம் எனும் உடன்பாட்டிற்குள் சர்வதேச சமூகம் கட்டிப்போட்டது. அந்த போர்நிறுத்த உடன்பாட்டை சிங்களதரப்பில் ஏற்றுக் கொண்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தமிழர்களின் விடுதலைப் போர் கொண்டுள்ள வீச்சைக் குறைத்து, சிங்களத்திற்கு சார்பான சர்வதேச பொறிமுறை ஒன்றினுள் புலிகளை விழுத்தி ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சிங்கள மேலாதிக்க நலன்களைப் பேணும் சிறீலங்காவினுள் தமிழர்களை நிரந்தரமாகக் கட்டிப் போடும் நோக்கைக் கொண்டிருந்தார். அவரின் இந்த வியூகத்தின் பின்னணியில் அனைத்துலக வல்லாதிக்கங்கள் தத்தமது நலன்கள் அடிப்படையில் நிலைகொள்ள முயன்றன. மறுபுறம், சந்திரிகா தலைமையிலான சிங்கள பேரினவாத தரப்பு இதே அணுகுமுறையினுள் புலிகளை முடக்கி வைத்துக் கொண்டு கடும்போக்கான கொள்கைகள் மூலம் புலிகளை ஓரங்கட்டி ஒழித்துக் கட்டலாம் என நம்பியது. எனினும் இந்த சக்திகளின் நுட்பமான வியூகம் சிங்கள அமைப்பினுள் நிலவும் கடுமையான முரண்பாடுகள் மற்றும் பலவீனம், விரிசல் என்பனவற்றால் முழுமையான இலக்கைச் சென்றடையும் வரையில் காத்திருக்கும் பக்குவத்தை கொடுக்கவில்லை.
புதிய சிங்கள கடும்தேசியவாத (இனவாத) சக்தியான ஜெவிபி இந்த இணக்க முயற்சிகளை தனது அரசியல் செல்வாக்கை விரிவாக்குவதற்கான சந்தர்ப்பமாகப் பாவித்தது. சிங்கள உறுமய, பிக்குக்கள் அமைப்பு என்பன போன்ற சிறுசிறு இனவாத அமைப்புக்கள் தோற்றம் பெற்று, இந்தச் போர்நிறுத்த காலத்தில் இலங்கைத்தீவின் இனச்சிக்கல் தீர்வுக்கான நிகழ்வுகளின் மைய இயக்கத்தை நோக்கி நகர்ந்தன.

சிங்கள தரப்பில் மிகமிகச் சிறிதளவான சனநாயக முற்போக்குச் சக்திகளே போர்நிறுத்த உடன்பாட்டினை உண்மையான இணக்த்தீர்வு முயற்சியாக ஏற்றுக் கொண்டன.

இதுவே உண்மையில், போர்நிறுத்தம் சிங்கள அமைப்பில் ஏற்படுத்திய தாக்கமாக வெளிப்படுகின்றது. இதுவே போர்நிறுத்த உடன்பாட்டின் நோக்கிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வியாகும்.

சிங்கள அமைப்பு இதனை உண்மையான தீர்வுக்கான வாய்ப்பாக பாவிக்க முற்படவில்லை என்கின்ற கேள்வி மிக தீவிரமான அரசியல், சமூக, பொருளாதார, இராணுவ பரிமாணங்கள் ஊடாக வாசிக்கப்பட வேண்டியது. சுருக்கமாக விபரிப்பின், தமிழ் மக்களிற்கு எதிரான போர் சிங்கள தேசத்தின் இயல்பை உடைத்து, முறித்து மிக பலவீனமானதாக உருவாக்கி வைத்துள்ளது. அவர்களின் இன்றைய அரசியல், சமூக, பொருளாதார பார்வைகள் இந்த இனவாதப் போரின் தளத்திலிருந்து எழுந்தனவாகவே உலாவிவருகின்றன. அவர்கள் தமிழ் தேசிய இனத்தின் தேசிய சுதந்திரம், சுயநிர்ணய உரிமை, தன்னாடசி அதிகாரங்கள் என்பனவற்றையெல்லாம் தங்களின் சொத்து சுகங்களை சூறையாடும் விடயங்களாகவே புரிந்து வைத்துள்ளனர். இராணுவமே இந்த பலவீனமான அமைப்பை தூக்கிப் பிடித்து வைத்துள்ளது அல்லது இந்த அமைப்பின் பிரதான வலுவாக திகழ்கின்றது. 1999 முதல் 2001வரைப் புலிகள் ஏற்படுத்திய தொடர் போர்க்கள தோல்விகள் இந்த பிரதான ஆதார தளமான இராணுவத்தை பாதித்த போது செயலிழந்த நிலையில் சிங்கள தேசம் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டது. போர்நிறுத்தம் வழங்கிய கால அவகாசம் இந்த இராணுவ ஆதாரத்தை வலுப்பெற வைப்பதற்கான முழு முயற்சிகளும் முடுக்கிவிடப்பட்டது. சில சர்வதேச, பிராந்திய சக்திகளின் நலன்சார் அரசியல், இராஐதந்திர, இராணுவ நடவடிக்கைகள் இந்த இராணுவ வலுப்படுத்தலுக்கு உதவின.

இன்று சிங்கள தேசம் தன் இராணுவம் வலுப்பெற்றுவிட்டதாக ஊகிக்கத் தொடங்குகையில் போர்நிறுத்த உடன்பாட்டினை தமது இறைமைக்கான அச்சுறுத்தலாகவும், புலிகளுக்கான வாய்ப்பாகவும் விபரிக்க தொடங்கியுள்ளன.
மறுபுறம், நெருக்கடியான பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டுச் சூழலில் சிங்கள தேசத்தினால் சாதாரண சனநாயகப் பண்புகளுடனும், பிற தேசிய இனங்கள் பற்றிய புரிதலுடனும் செயற்பட முடியாது என்பது விஞ்ஞானபூர்வமான உண்மையாகும். இதுவே பொதுவாக ஒடுக்குமுறை செய்யும் தேசங்களின் இயல்பான சூழலுமாகும்.

இன்றைய சிங்கள இனவாத அமைப்பு முன்னிலும் மிகஆழமாக இனவாத அரசியல் மயப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் கைக்கொண்ட மிக நாசுக்கான தேசிய இனவாத அரசியலை இன்றைய Nஐவிபி மற்றும் சிங்கள உறுமய போன்ற குழுக்களும், இனவாத சிங்கள ஊடகங்களும் சமூகத்தின் அடிமட்டம்வரை எடுத்துச் சென்று விசாலப்படுத்தி வருகின்றது.
இறுதியான ஆய்வில், சிங்கள இனவாதமானது தமிழர்களின் நீதியான சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான நிலைக்கு எதிரான திசையிலேயே பயணிக்கின்றது.

தமிழ் தேசிய இனமானது இந்த போர்நிறுத்த இடைவெளியூடாக சற்று மனிதாபிமான உதவிகளைப் பெற்றும், சர்வதேச உறவாடல்களுக்கான வாய்ப்புக்களைப் பெற்றும் தன் கோரிக்கைகளை வலுப்படுத்தி வருகின்றது. இங்கு தமிழர்களிடம் விட்டுக் கொடுப்பதற்கும், சமரசம் செய்வதற்குமான எதுவும் கிடையாது. எனவே, தமிழர்கள் தமது நிலையில் நின்றவாறு சிங்கள இனவாதம் தணிவு பெற்று அல்லது ஞானம் பெற்று தமது அரசியல் உரிமைகளை அங்கீகரிப்பதற்கான வாய்ப்புக்களை இந்த போர்நிறுத்தம் ஊடாக வழங்கினார்கள். மறுபுறம், இந்த வாய்ப்புக்கள் நிராகரிக்கப்பட்டு மீளவொரு போர் உருவாகுமாயின் அதற்கு முகம் கொடுக்கும் துணிவான படைக்கட்டுமானப் பணிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த இணக்க முயற்சிகளை முன்னின்று முன்னெடுக்கம் தரப்புக்களான நோர்வே, ஐரோப்பிய சமூகம் மற்றும் அமெரிக்கா போன்றன சிங்கள ஆளும் வர்க்கம் மீதான பொருளாதார அழுத்தம என்ற தடி, இராணுவ உதவிகள் என்ற பெயரிலான கயிறு என்பன ஊடாகவும், சிறியளவிலான அரசியல் அழுத்தம் ஊடாகவும் சிங்கள அமைப்பைப் பீடித்துள்ள இனவாத புற்றுநோயை குணப்படுத்தலாம் என நம்பியிருந்தன. மறுபுறம், தமிழ் மக்களின் விடுதலை எழுச்சியை தணித்து, தவிர்த்து அவர்களின் தேசிய இனஅடையாளங்களை நடைமுறையில் சிறுபான்மை வரைமுறைக்குள் கொண்டு சென்று சிங்கள அமைப்புடனான இடைவெளியை குறைக்கும் முயற்சியினையும் நம்பிச் செயற்பட்டன. இவ்வுத்தி காரணமாகவே கடந்த 3 வருட கால இணக்க முயற்சிகளின் போது அரசியல், இராஐதந்திர, பொருளாதார விடயங்களில் தமிழர் தரப்பிற்கான உண்மையான சமவாய்ப்பையும், அந்தஸ்தையும் தரமறுத்தன. இந்த சமிக்கையை சிங்கள இனவாத சக்திகள் சரியாகவே புரிந்து கொண்டன.
சர்வதேச சக்திகளின் இந்த தவறான புரிதலும், செயற்பாடுகளும் போர்நிறுத்த உடன்பாடு இன்று அனுபவிக்கும் பின்னடைவுகளுக்கு காரணங்களாகிவிட்டன.
முடிவாக, இந்த போர்நிறுத்தம் நிலவிய மூன்று ஆண்டு காலப்பகுதியானது சிங்கள - தமிழர் முரண்பாடுகள் பற்றிய விவாதங்களில் சிங்கள இனவாத சக்திகளையும் மையத்துக்கு இழுத்து வந்துள்ளது!.