தேசியத்தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து

மேதகு. வே. பிரபாகரன் அவர்கள்
.........................................................

கரும்புலி வீரர்களின் தோற்றமும், தற்கொலைப் படையாக அவர்களின் வளர்ச்சியும் எழுச்சியும், மிகவும் நுட்பமான அவர்களின் போர்ச் சாதனைகளும் எமது போராட்டத்தின் ஒரு வரலாற்றுத் தேவையாகவே எழுந்தது.

நாம் இன அழிவை எதிர்கொள்ளும் ஒரு சிறிய தேசிய சமுதாயம். எமக்கு குரல் கொடுக்கவோ, கை கொடுக்கவோ உலகில் எவரும் இல்லை. நாம் தனித்து நிற்கிறோம். எமது சொந்தக் கால்களில் நிலைத்து நிற்கிறோம். பலம் வாய்ந்த எதிரிகள் எம்மைச் சூழ்ந்து நிற்கிறார்கள். எம்மை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டு நிற்கிறார்கள். முழு உலகமுமே ஒன்று திரண்டு எமது எதிரிகளுக்கு முண்டுகொடுத்து வருகிறது. இந்த இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலையில் நிர்க்கதியாக நிற்கும் ஒரு மக்கள் சமூகம் என்ற ரீதியில், நாம் எம்மாலான சகல வழிகளையும் கையாண்டு, எமது சக்திகள் அனைத்தையும் பிரயோகித்து ஒரு தற்காப்புப் போரை நிகழ்த்தவேண்டும். இந்தத் தேவையை, நிர்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. அல்லாத பட்சத்தில் நாம் இனவாரியாக அழிந்துபோவதைத் தவிர்க்க முடியாது.

பலவீனமான எமது மக்களின் மிகவும் பலம்வாய்ந்த ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன். கரும்புலிகள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள், எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.

கரும்புலிகள் வித்தியாசமானவர்கள், அபூர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும் பஞ்சுபோன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மக்கள் நேயம் படைத்தவர்கள்.

இந்த உலகில் வாழும் மனிதன் ஒவ்வொருவனும் எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே காதலிக்கிறான். உயிர் வாழவேண்டும் என்று துடிக்கிறான். மனிதன் உயிரை நேசிப்பதால், உயிர்வாழ விரும்புவதால், உயிர் அற்றுப்போகும் சாவு என்ற இல்லாமை நிலைக்கு பயப்படுகிறான். இது மனித இயல்பு. இயற்கையின் நியதி.

ஆனால் ஒரு கரும்புலிவீரன் தன்னை விட தனது இலச்சியத்தையே காதலிக்கிறான். தனது உயிரைவிட தான் வரித்துக் கொண்ட குறிக்கோளையே நேசிக்கிறான். அந்தக் குறிக்கோளை அடைவதற்கு தன்னை அழிக்கவும் அவன் தயாராக இருக்கிறான். அந்தக் குறிக்கோள் அவனது சுயத்திற்கு அப்பால் நிற்கும் மற்றவர்களின் நலன் பற்றியது; நல்வாழ்வு பற்றியது. மற்றவர்கள் இன்புற்று இருக்கவேண்டும் என்பதற்காக தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீக துறவறம். அந்தத் தெய்வீக பிறவிகள்தான் கரும்புலிகள்.

தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்தைத் தழுவிக்கொள்ளும் ஒவ்வொருவனும் முதலில் தன்னை விடுதலை செய்து கொள்ள வேண்டும். தனது மனவுலக ஆசைகளிலிருந்தும், அச்சங்களிலிருந்தும் தன்னை விடுதலை செய்துகொள்ளபவன்தான் உண்மையில் விடுதலை வீரன் என்ற தகைமையைப் பெறமுடியும். மனமானது பயங்களிலிருந்து விடுதலை துணிவு பிறக்கிறது. இந்த மனவியில் உண்மையை நான் ஆரம்பத்திலிருந்தே எமது போராளிகளுக்கு எடுத்துரைத்து வருகிறேன்.

பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன்இ உறுதிக்கு எதிரி. மனித பயங்களுக்கு எல்லாம் மூலமானது மரணபயம். இந்த மரணபயத்தைக் கொன்றுவிடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன்தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகிறான்.

கரும்புலிகள் பயத்தின் வேர்களைப் பிடுங்கி எறிந்தவர்கள். சாவு அவர்களிடம் சரணடைந்து விடுகிறது. மரணத்தின் நாளை அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சாவு பற்றி சிந்திப்பதில்லை. தம்மை அழிக்கும் அந்த இறுதிக் கணத்திலும் தமது இலக்கை அழிக்கும் நோக்கிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பர். இலட்சிய உறுதியில் அவர்கள் இரும்பு மனிதர்கள்.

“கரும்புலி” என்ற சொற்பதத்தில் கருமையை மனோதிடத்திற்கும், உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகிறோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்பாடாத, பூடகமான, இரகசியமான தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே “கரும்புலி” என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும் ஆழமான படிவமாக அமையப்பெற்றிருக்கிறது.

இந்த இரகசியத்தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலாதரமானது. ஆளுக்கும் பெயருக்கும் அப்பால், அந்த தனிமனித தனித்துவத்திற்கு அப்பால், செயற்பாடே இங்கு முதன்மை பெறுகிறது. மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே ஒரு போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகிறது.

பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ்பெற்று வாழும்.

மனித தியாகத்தின் இமயத்தை தொட்டு விட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று மனித விடிவை நோக்கி நகரும் உந்துசக்கியாக அவர்களை ஆட்டிக்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தைத் தீர்க்க எதையும் செய்வதற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களை அரவணைத்து விடையளிக்கும்போது இனம் புரியாத உணர்வுகளால் எனது ஆன்மா நடுங்கும்.

ஒரு புனித யாத்திரையில் அவர்கள் போனார்கள். கண்ணீர் வடித்து நிற்கும் எமது மக்களுக்கு ஒரு புதிய வாழ்வு பிறக்கும் என்ற அசையாத நம்பிக்கையில் அந்தத் தியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அந்த புனிதர்களை எண்ணும் பொழுதெல்லாம் எனது நெஞ்சு புல்லரிக்கும்.

கரும்புலி வீரர்கள் பற்றி இன்று முழு உலகமும் பேசுகிறது, அவர்களது மகத்தான தியாகத்தைக் கண்டு மலைத்துப் போய் நிற்கிறது. பூகம்ப அதிர்வாகக் குமுறும் எமது போராட்டத்தின் உக்கிரத்தை உலக சமுதாயத்திற்கு உயர்த்தியவர்கள் கரும்புலிகளே.

..................................................................................................
தமிழீழ தேசியத்தலைவர்
மேதகு வே.பிரபாகரன் அவர்கள்

05.07.1993 அன்று, கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையைக் இங்கு பிரசுரிக்கிறோம்.