தலைவாசல்

படுகுழியில் வீழ்ந்த பேரினவாதம்

தான் வைத்த பொறியில் தானே வீழ்ந்த கதையாகச் சிங்களப் பேரினவாதத்தின் அண்மைக்கால வரலாறு அமைகின்றது. தனிச்சிங்களச் சட்டம் இயற்றப்பட்டு அரை நூற்றாண்டு சென்றுவிட்போதும் தனது தவற்றை உணர்ந்து தானாகவே திருந்தும் நிலையில் சிங்களப் பேரினவாதம் இன்றும் இல்லை. வரலாற்றுத் தவறுகள் திருத்தப்படுவதுதான் உலக வழமை, இதற்குச் சிறிலங்கா விதிவிலக்காக அமைகின்றது. தமிழர்களுக்கு உரிமைகள் வழங்கக்கூடாது, அவர்களுடைய வாழ் நிலங்களை குடியேற்றி அபகரிக்கவேண்டும், ஒரேயொரு மதம் மாத்திரம் இருக்கவேண்டும் என்று மும்முனை கொண்ட சிங்களப் பேரினவாதம் தலைவிரித்தாடுகின்றது. ஐம்பது வருட குருதி தோய்ந்த வரலாற்றிற்கு தனிச் சிங்களச் சட்டம் எப்படி அடிகோரியதோ அதேபோல் இப்போது பாராளுமன்றத்தில் புகுத்தப்படவிருக்கும் மத மாற்றச் சட்ட நகல் இருக்கின்றது. இதன் விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும். ஏற்கனவே சிறிலங்கா அரசியல் சாசனத்தின் ஒன்பதாம் சரத்து “இது சிங்கள பௌத்த நாடு” என்று பிரகடனம் செய்கின்றது. மத மாற்றச் சட்டம் அமுலுக்கு வந்தால் கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாம் மதங்கள் முடக்கப்பட்டுவிடும். இது சர்வதேச அரங்கில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும், அது பற்றி சிங்கள அரசியல்வாதிகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

குழியில் வீழ்ந்தவன், தான் வீழ்ந்து கிடக்கும் குழியை மென்மேலும் ஆழமாக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஒரு படியாக சுனாமிப் பொதுக் கட்மைப்பு சம்பந்தமான ஆவணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அது முடிவல்ல, பிரச்சனைகளின் ஆரம்பம். அரசியல்வாதிகளாக மாறியுள்ள புத்த பிக்குகளும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் காவலரான ஜே.வீ.பீ யினரும் பொது கட்டமைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர். அது அரசியல் சாசனத்திற்கு முரணானது, இலங்கையின் இறைமைக்கும் பாதகமானது என்றெல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு கூறுகின்றது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றி, அவர்கள் எந்த இனத்தவராக இருந்தாலும் பரவாயில்லை, ஒருவரும் கவலைப்படுவதாக இல்லை. பேரினவாதம் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது எதிர்கால அரசியல் இலாபம் பற்றியே கணக்கெடுக்கின்றது. தாம் வீழ்ந்தகுழியை ஆழமாக்குவதுதான் அவர்கள் திட்டமாக இருக்கின்றது.

உலக சமுதாயத்தின் கடும் அழுத்தம் காரணமாகச் சந்திரிக்கா சுனாமிப் பொதுக்கட்டமைப்பில் கைச்சாத்திடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதற்கு இப்போது புதுப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பொதுக்கட்டமைப்பின் புதியபெயர் புரியாத புதிராக இருந்தாலும் (பீ-ரொம்ஸ்) விசயம் ஒன்றுதான். இப்போது இருக்கும் குழப்ப நிலை சந்திரிகாவுக்குச் சாதகமாக இருக்கிறது. இழுத்தடிப்பு உபாயத்தைத் தாராளமாகக் கையாளும் அவருக்கு நீதிமன்றம் விசாரணைகள் கை கொடுக்கும் என்பது உறுதி. இப்போது சந்திரிகாவுக்கு உலக அரங்கில் நல்ல வரவேற்பு இருக்கிற்து. தகப்பனைக் கொன்ற பிக்குகள் என்னை கொல்லப் போகிறார்கள் என்ற குரலை அவர் கண்டியில் நடந்த கடன்வழங்கும் நாடுகள் மாநாட்டில் எழுப்பினார். எது வரினும் ஒப்பமிடுவேன் என்று அவர் சூளுரைத்தார். அவரைப் பொறுத்தளவில் அந்தளவும் போதும். பொதுக் கட்டமைப்பில் சொல்லப்பட்ட மூன்று தட்டு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கம் பற்றிய பேச்சையே காணோம். பொதுக் கட்டமைப்பும் ஒரு கண்துடைப்புத்தான் என்று சொல்லத் தோன்றுகிறது.