
மனோன்மணி சண்முகதாஸ்
வானத்திலே நட்சத்திரங்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கையில் மாணிக்கவாசகர் இருளை வெறித்துப்பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பனங்கூடலும இருளுக்குள்ளே முற்றாகவே மூடிக்கிடந்தது. சுவர்க் கோழியின் சத்தம் அந்த விரிந்த மௌனத்துக்கிடையே காதுகளை ஓங்கி அறைந்து எரிச்சலூட்டிற்று. அது எதிரே தெரிந்தால் பெருவிரலால் நசிக்க வேண்டும் போல மனதினுள்ளே மூர்க்கம் கொதித்தது. பிறகு தன்னை அமைதிக்குக் கொண்டுவர முயன்றான். பத்மாவின் முகமும் குரலும் மனவெளியில் தோன்றி ஒலித்தன. கனிவான முகம், நேசம் இழைந்த குரல், பத்மா அடிக்கடி சொல்லுவாள்: “எதுக்கும் அடிக்கடி கடுமையாகக் கோபப்படாதேங்க….”
அவளை நினைத்தபோது கோபம் மெல்லவே மங்கிப்போய் வேதனையும் மனதிலே பரவிற்று. அந்தக் கம்பீரமான உருவம் எதிரே நடந்து வருவதுபோலத் தோன்றிற்று. அணிவகுப்பில் ஒத்திசைவாக நடப்பது போல ஆளுமைசெறிந்த நடை.
மாணிக்கவாசகரும் அவளும் ஒன்றாகவே படித்தானர். ஓன்றிரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தான் அவர்கள் ஒருவரை ஒருவர் முந்தி முதலாமிடத்துக்கு வருவர். ஆவள் முதலாமிடத்துக்கு வந்தால் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. இரண்டு நாட்களுக்கு அவளோடு எதுவுமே கதைக்கமாட்டான். வேண்டுமென்று ஒதுங்கிகொள்ளுவான்.அவள் இயல்பாகக் கதைக்க வரும்போதெல்லாம் வெடுக்கென்று எரிந்து விழுவான். அப்போதும் பத்மா அவனைச் சினக்கவே மாட்டாள். பரிவோடு அவனைப் பார்ப்பாள். கண்களில் மலர்ந்த புன்னகை இருக்கும். மறுநாள், அதற்கு மறுநாள் அவனைப் பார்க்கிறபோது அதே பரிவோடும் புன்னகையோடும் எதிர்கொள்வாள். முன்னர் எதுவுமே நடக்காததுபோல நடக்கும் அவளைப் பார்க்கிறபோது தன்னையிட்டு அவன் அவமானமடைவான். ஏதாவது அதைப்பற்றி சொல்ல வாயெடுத்தால் “சரி சரி இப்ப அந்தக் கதையை விட்டிடுங்க” என்று குறிக்கிட்டுக் கூறி, அவன் வார்த்தைகளைத் தொடரவிடாமல் வேறெங்கோ கவனத்தை இழுத்து செல்வாள். அந்த வளரிளம் பருவத்திலேயே அவனுக்கு அவள் சொல்லுதற்கரிய அற்புதமாகப் பட்டாள்.
தற்செயலாக ஒருநாள் பத்மாவின் வீட்டிற்கு அவன் சென்றான். வீடு ஒரே பரபரப்பாக இருந்தது. உள்ளே போகலாமா, திரும்பலாமா என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது அவளது குரல் தான் அவனை உள்ளே அழைத்தது. “வீட்டுக்கு வந்திட்டு ஏன் திரும்பிப்போறியள்? உள்ளே வாருங்க…” பதில் பேசாமல் அவன் உள்ளே சென்றபோது பத்மாவின் அக்கா சரோஜினி தடுமாறிய குரலிலே, “தம்பி, பத்மாவினுடைய வேலையைப் பாருங்க, ஒரு நாகபாம்பைக் கையாலை பிடிச்சு நிலத்தில தூக்கி அடிச்சுக் கொன்று இருக்கிறா….. அங்கை பாரும்…..” என்றாள்.
மணிக்கவாசகர் திகைத்து தடுமாறிப்போனான். சுவர் ஓரமாக தலைசிந்து உடல் சிதைந்து சிதறிப் போய்க் கிடக்கும் பெரிய நாகபம்பு, அதைப் பார்த்தபோதே உடம்பு புல்லரித்துச் சிலிர்த்தத. சட்டென்று பார்வையை அந்த இடத்திலிருந்து தூக்கிய போதிலும், மனத்திற்குள் தலைநசிந்து உடல்சிதைந்து சிதறிபோய்க் கிடக்கின்ற அந்தக் கோரம் மட்டும் அழுத்தமாகப் பதிந்துபோய்விட்டத.
“என்ன கடுமையான யோசனை?”
பத்மாவின் குரல் அவனைச் சுயத்திற்குக் கொண்டு வர எதிரே நின்ற அவளைப் பார்த்தான்.
“என்ன வேலை செய்திருக்கிறியள்?”
அச்சம் படிந்திருந்த அவனது வார்த்தைகளைக் கேட்டு அவளது முகத்தில் புன்னகை.
அவனே தொடர்ந்தான்:
“சரியான விஷப்பாம்புபோல இருக்குது கடிச்சிருந்தால் என்ன செய்திருப்பியள், இப்படிச் செய்யப் பயமே இல்லையோ?
“அதுதானே, அதைக்கேளும் தம்பி….”
குறுக்கிட்டாள் சரோஜினி.
நீண்டிருந் ஒற்றைப் பின்னலை, தோளிலிருந்து பின்னே தள்ளிவிட்டவாறு அவர்களைப் பார்த்தாள் பத்மா.
“பாருங்க, நான் வீட்டுக்குள்ள வந்தபோது தடுக்குப் பாயிலை குழந்தை சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்தது. அதுக்குப பக்கத்திலை இந்தப் பாம்பு படம் விரிச்சு ஆடிக்கொண்டிருந்தது. கொஞ்சநேரம் விட்டிருந்தாலும் அது குழந்தையைக் கொத்தியிருக்கும். எனக்கு அப்போ குழந்தையைக் காப்பாத்துறதுதான் முக்கியமாகத் தெரிஞ்சுது. பாம்பை ஆபத்தில்லாமல் பிடிக்கவேணுமென்டால் கழுத்திலை பிடிச்சு தூக்கி எறிய வேணும், இல்லையென்றால் வாலைப் பிடிச்சுதூக்கி நல்லா இறுக்கிச் சுற்றிவிட்டு தூரமாய் எறிய வேணுமென்ற எங்கேயோ படிச்சது நினைவிலை வந்தது, உடனே பாம்பை வால் நுனியிலை பிடிச்சுத் தூக்கி எறிஞ்சிட்டன், அவ்வளவுதான் எனக்குத் தெரியும்…..”
அவள் சொன்னதிற்கு என்ன கூறவெதென்றே மாணிக்கவாசகருக்குத் தோன்றவில்லை. பத்மா ஒவ்வொரு வி~யத்தையும் தீர்க்கமாக யோசனை செய்தபிறகே செய்கிறாளென அவன் எண்ணினான். பல சந்தர்ப்பங்களில் இதை அவன் வெகு நுணுக்கமாகவே கவனித்து வந்திருக்கிறான். அவளைப் பற்றிய அபிப்பிராயம் மேலும் மேலும் அவனது மனதிNலு அதிகரித்து வந்தது.
மழை சோனாவாரியாகப் பெய்துகொண்டிருந்த ஐப்பசி வெள்ளியொன்றின்போது அந்தச் செய்தியை அவன் கேள்விப்பட்டு மனம் உடைந்து போனான். பத்மா, தான் இயக்கத்தில் சேரப்போவதாக் கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணமற்போய்விட்டாள்.
ஒரு மாத்தின் முன் அவளின் உறவுப் பெண் ஒருத்தி வெறிபிடித்த சிப்பாய்களால் மூர்க்கதனமாகப் பாலியால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின் குப்பைக் குழியொன்றினுள் தூக்கி வீசப்பட்டிருந்தாள். கழுத்துச் சிதைந்த நிலையிலே அவளின் சடலம் கண்டெடுக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டாள். பத்மா அந்தப் பெண்ணின் பிறந்தநாளுக்கு வழங்கிய பாதசரங்களை வைத்தே அவள் அடையாளத்தினைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
அதன் பிறகு ஒரு வாரமாக அவள் கல்லூரிக்கு வரவில்லை. பின்னர் வந்தவளின் முகத்தில் மலர்ச்சி முற்றாகவே கருகிப்போயிருந்தது. பார்வை எங்கோ வெறிச்சோடிற்று. இரண்டொரு வார்த்தைகளைப் பேசுவதே அபூர்வமாயிருந்தது. இப்படியான நிலையின் தொடர்ச்சியல் அவள் காணமற்பேன செய்தி வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.மனதினுள் சொல்ல முடியாததோர் வெற்றிடம் விரிந்து.
நீண்ட நாட்களுக்குப் பிறகு முல்லைத்தீவுச் சமரில் அவள் ஒற்றைக்காலினை இழந்தாள் என் வந்த செய்தியினைக் கேள்விபட்டு அவன் முற்றாகவே மனம் ஒடிந்துபோனான். ஒற்றைக் காலை இழந்த அந்தக் கம்பீரத்தைக் கற்பனை செய்து பார்க்கவே அவனது மனம் நொந்து வலித்தது.
நேற்றுக் கிடைத்த செய்தி அவனது மனதிலே திகைப்பையும், பயத்தையும், இனம்தெரியாத மகிழ்சியையும் உண்டாக்கிற்று. இங்கே வந்து இந்த இருளிடையே உட்கார்ந்திருக்கிறான்.
சுவர்க்கோழி இன்னமும் சத்தமிட்டது.
திடீரென்று இடியும், மின்னலும், பனங்கூடலுள் மின்னல் வெளிச்சத்தை அள்ளிக் கொட்டிற்று. அவன் அவசரமாக எழுந்து உள்ளே சென்றான்.
நாளைக்கு தன்னுடைய வீட்டிற்று வரவிருக்கும் பத்மாவின் முகம் மட்டும் அவனது கண்களிலும் வந்தது. அவன் வெளிக்கதவை மூடிவிட்டு உள்ளே சென்றபோது மின்னற் கொடியொன்று சட்டென வேர்களைப் பரப்பி வெளிச்ச ஊற்றினைக் காணும் திக்கெல்லாம் அள்ளி எற்றியது. இடியோசை நெஞ்சசை அச்சம் கொள்ளவைத்ததுத் தொடர்ச்சியாக உறுமிற்று காற்று ஊளையிட்டுக் கூத்தாடிற்று. இதே போன்ற நாளொன்றின் போதுதான் பத்மா கடிதம் எழுதி வைத்துவிட்டுக் காணாமற்போனாள். இப்படியான கால நிலைக்குள் பத்மா எப்படித்தான் இயங்கப் போகிறாளோ என்ற நினைவு பாரமான மின்னலைப்போல அவனது நெஞ்சத்துக்குள்ளே குதித்து வீழ்ந்தது.
வாசற் பக்கமாக உள்ளே நுழையப் போனவனை அந்தக் கலகலப்பான சிரிப்பு,கொஞ்சம் நில் என்று கூறி நிறுத்திற்று. பத்மாவின் சிரிப்பு அது. வெளியே நின்ற ஹொண்டா மோட்டர் சைக்கிளை பார்த்தான்.
“ஏன் வெளியிலை நிக்கிறியள்? உள்ளுக்குள்ளை வாருங்கேவன்…”
கம்பீரமான நடையோடு அவனை அழைத்தவாறு வாசற் பக்கம் வந்த பத்மாவைக் கண்டதும் திகைத்துத் திடுக்கிட்டுப் போய்விட்டான். மாணிக்கவாசகர்.
நீண்ட தலைமுடியை ‘கிராப்பாக’ வெட்டி மேலே சேர்ட் போன்ற பிளவ்சும், நீண்ட பாவாடை வடிவத்துச் சட்டையும் அணிந்து அதே கம்பீரமும் பெருமிதமுமாய் நின்றாள் பத்மா.
அவளை அவன் மேலும் கீழுமாகப் பார்த்தான். அவனது மனம் பிடரியினைச் சொறிந்துகொண்டு சந்தேகத்துள் அழுங்கிற்று. இப்போது உண்மையாகவே தலையைச் சொறிந்துகொண்டான்.
அவள் முன்னே நடந்தவள், திரும்பி அவனைப் பார்த்தாள்.
“எப்படி இருக்கிறியள்?”
“இருக்கிறன்…..”
அவனைப் பரிவோடு ஏறிட்டாள்.
“ஏன் சோர்ந்துபோய்க் கதைக்கிறியள்”.
வெறுமையாகச் சிரித்தான் மாணிக்கவாசகர்.
“சொல்லுங்க….”
“பொறுங்க… நான் இப்போ உங்களுக்கு ஒருவரை அறிமுகப்படுத்துகிறன்…..”
“யார்….?”
“தியாகு இங்கை ஒருக்கால் வாருங்க….”
இடதுபுற அறையிலிருந்து இளைஞன் ஒருவன் வெளியே வந்தான். கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். வலதுகை முற்றாக இல்லை சேர்ட்கை தொங்கியது.
« பத்மா..... யார் இது?”
“தியாகு இவர் சின்ன வயதிலையிருந்து என்னோடு ஒன்றாகப் படித்தவர், பெரிய உத்தியோகம் பார்க்க வேணுமென்று விருப்பப்பட்டவர், நாட்டு நிலமையாலை அது முடியல்லை... இந்தக் கவலையோடையே இருக்கிறார்.....
இளநகை தியாகுவின் முகத்தில் படர அவன் மெல்லத் தலையை ஆட்டிக்கொண்டான்.
“இவரைப்பற்றிச் சொல்லுறன், இயக்கப்போராளி, களத்திலை இரண்டு கண்களையும் ஒற்றைக் கையையும் பறிகொடுத்தவர். ஆனால் அண்ணனிட்டைக்கேட்டு இன்னும் களத்திலை இருக்கிறார். கண் வெளிச்சம் இல்லாட்டிலும் எந்த ஆயுதத்தையும் விரலால் தொட்டுப்பார்த்தே அதிலை உள்ள பிழையைச் சொல்லி சரியாகத் திருத்தி விடுவார்.........”
பெருமை பரிமளித்தது அவளது குரலிலே. வாஞ்சை பொங்க தியாகுவைப் பார்த்தாள். பெருமிதத்தோடு “ஒரு மெல்லியசத்தம் கேட்டாலே போதும், அந்த இடத்திலே என்ன இருக்குதென்று சரியாகச் சொல்லிவிடுவார்....” என்றாள்.
அப்போது சரோஜினி வெளியே வந்தாள். மாணிக்கவாசகரைக் கண்டு முகமலர்ந்தாள்.
“எப்படி இருக்கிறியள் தம்பி......?”
“இருக்கிறன்..... அக்கா......”
“இப்ப நாட்டு நிலைமை எல்லாம் மெல்ல மெல்லச் சரியாகிக்கொண்டு வருகுது. நீர் இனி என்ன செய்யப் போகிறீர்?”
“இன்னும் அதைப்பற்றி முடிவு செய்யேல்லை....”
சொல்லியவாறு நெற்றியை வருடிககொண்டான் மாணிக்கவாசகர்.
“பொறுங்க..... குடிக்க ஏதாவது கொண்டு வாறன்.....” என்றவாறே பரபரப்பாக உள்ளே போனாள் பத்மா.
“பத்மாவோட கதைக்கவே ஆசையா இருக்கு...... எவ்வளவு அறிவும் கெட்டித்தனமும் உள்ள பிள்ளை. எங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு......
“தம்பி எலுமிச்சம் பழத் தண்ணீர்..... குடியுங்கோ.....”
“கொஞ்சநேரத்தில் முக்கியமான ஒருவரை நாங்க இரண்பேரும் போய்ச் சந்திக்கவேண்டும். பின்னேரம் வீட்டுக்கு வாருங்க.....”
பம்பரமாய் தியாகுவோடு வெளியே போனாள் பத்மா.
“தியாகு ஏறிவிட்டீங்களோ? மோட்டர் சைக்கிள் குதிரையாய் உறுமிக்கொண்டே புறப்பட்டது. கம்பீரமாக மோட்டர் சைக்கிள் ஓட்டியவாறே சென்றாள் பத்மா.
“பாருந்தம்பி என்ன வீச்சாகப் போறா, இவ்வளவுக்கும் வலது காலிலை முழங்காலுக்கு கீழ் இல்லை. பொய்கால் கட்டியிருக்கிறா என்றால் ஒருத்தரும் நம்பமாட்டினம்....” என்றாள் சரோஜினி.
மாணிக்கவாசகர் பேச்சற்று நின்றான்.
|