புலத்தில் அடித்த சுனாமிகவி நாடகம்:

முல்லைத்தீவு பட்டுமணலில் கால் புதைய தலைவிரி கோலமாய் நின்ற தாயவள் இருகைகளையும் நீட்டியபடி கடல் தாயை வெறித்துப் பார்த்துக் குழறியழுதபடி கேட்டாள் 'அம்மா எங்கள் உயிர்க் கடலம்மா எங்களை ஏன் அழித்தாய்; உன் மடியில் தவழ்ந்த மக்களை ஏன் பறித்தாய்

எங்களை ஏன் பொங்கியெழுந்து விழுங்கினாய்; இன்றோடு எங்கள் வாழ்வு முடிந்ததர் இல்லை, இனிமேல்தான் எங்கள் வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகின்றதா?." உயிர் மூச்செடுத்து ஈழத்துக் கடல் வெளியெங்கும் எதிரொலிக்கக் கத்தினாள்;;. கடல் அலைகளின் தாளம் ஒரு முறைக்குப் பல முறை ஸ்தம்பித்துப் போனது....2004 மார்கழி 26 ம்நாள் ஆழியின் பேரழிவு விதைத்த தாக்கத்தில். முல்லைத்தீவில் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பத்துச் சங்கதியை நாட்டுப் பாடலில் இழையோட விடுகிறேன்... தாயானவள் சுனாமியில் தன் கணவனையும்..இளைய மகனையும்..இரண்டு பெண் குழந்தைகளையும்...சொத்துக்களையும் இழந்த
நிலையில் பத்து வருடங்களுக்கு முன் பிரான்சுக்கு போன தனது மூத்தமகனோடு தொலைபேசியில் உரையாடப் பலமுறை முயன்று கிடைத்த ஒரு நாளில்...

 

ஓடிவரும் தண்ணீரிலே
துடித்தெழும் மீனதுபோல்
பதறிவந்தேன் என் மகனே தங்கராசா -உன்
சுகத்தைக் கேக்கவேண்டி
பாசத்துக்குரிய தங்கராசா
ரோசத்துக்குரிய தவபால
புத்திரா மகனே தங்கராசா

கலமேறிப் போனதந்தை
கடலாடி கரைவந்ததும்
கலகலக்கும் வளவுச்சனமடா
முற்றமுமில்லை சுற்றமுமில்லை
சுனாமியால் சுறுண்டுபோனமடா
ஒடுங்கும்குடிலும் யேசுகுடிலானதடா
தண்ணீருக்கும் பஞ்சமடா

‘அம்மா....அம்மா’ என்று மதுவெறியில் பசப்புகிறான.;
(மறுபடியும் மறுபடியும் பொய் பேசிக்கொண்டும்.போலி நாடகம் ஆடிக்கொண்டும் நிற்கிறான். தாயவள் மறுபடிமறுபடி சகித்துக்கொள்வது சுனாமி அனர்த்தத்தில் தனிமரமாய் துயரேறி துணையிழந்து வம்சமிழந்து வாழ்வே பாலையாகிப்போன தாயிடம் ஆடும் பொய் வேடத்தை இந்திரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை)

'அம்மா அழாதேயம்மா ரெலிபோன்வழி
உந்தனது வெள்ளைமுகம் கறுத்துத்
தெரியுதம்மா....என் நெஞ்சு பதறுதம்மா
பட்சமிருக்கு பறந்துவர ஏரோபிளேன்
இருக்கம்மா- எண்ணமும் இருக்கம்மா
பொன்னான நேரம்தான் மண்ணாகும்

என்ர கண்ணான கண்கள் நீயம்மா
கடற்கரையில் பிறந்த கதைகளெல்லாம்
சுனாமி அடியோடு கனக்க இருக்கம்மா
அலைகள் இருந்தால்தான் அம்மா
படகு ஆடித் தவழ்ந்து வருமம்மா

துயரம் இருந்தால்தான் அம்மா
சுகங்கள் இணைந்து வருமம்மா
ஐயா தம்பிதங்கை விதிமுடிந்ததம்மா
என்விதிதான் இப்படிக் கிடக்கம்மா
இங்கு நான் படும்பாடு தெரியுதாம்மா ?"

(தாயவள் மேலும் குளறியழுதபடி நிற்கிறாள். வைன்கோஸ்டி தங்கராசாவின் நடிப்பைப் பார்த்து இந்திரன் கொதித்தெழுகிறான்!
நாடக மேடையில் எத்தனை கோடிப் பாவங்கள் இத்தனையில் எத்தனையைத் தாயவள் அறிவாள்.) அறியாதவள் அக்கினி மிதிகதியில் பாடுகிறாள்...

ஒரு நாள் ஒரு பொழுது உன்னை நினையாவிட்டால்
எந்தன் உசிர் மெழுகாய் உருகுதடா
மாலையிட மாமா மகளிருந்தாள் --மகராணியையும்
சுனாமி அள்ளிக்கொண்டு போனதடா
அவளோ பொரியரிசி நிறத்தானவள்--அவளையும்
சுனாமி கொண்டிழுத்துப் போனதடா--என் மகனே
தங்கராசா உன்னைநம்பி வாழ்வாடுதடா

(தாயவள் குரலை தொலைபேசி வழிகேட்டுக் கவலையால் மனம் கனத்த இந்திரன் தங்கராசாவின் றிசிவரைப் பறித்து பேசுகிறான்)தாயவள் புலம்புகிறாள்..

நேற்றிருந்த எங்களது
மணிமாட மாளிகைகள்
சொல்லாமல் வந்தசுனாமி
அள்ளிக்கொண்டு போனதாலே
அல்லலுறும் விதியாச்சு
சின்னவனும் மாண்டான்
மார்பணைத்த பிள்ளைகளும்
மார்கழி ஆழியில் மாண்டனர்
மணவறை காணவளர்ந்த
உன்னவளும் மாண்டாள்

(தாய் அழுவதைக் கேட்டு மனம்; துடித்த இந்திரன்)

அம்மா நீங்கபட்டபாடுகள் போதுமம்மா
புலம்பெயர்ந்த வாழ்வைவிட
தாய்நிலத்து வாழ்வு மேலம்மா-- புலத்தில்
சுனாமி தினம்தினம் அடிக்குதம்மா
சுறுக்காய் பணம் வந்து சேருமம்மா
சொல்வதைக் கேட்டு
அமைதி கொள்ளுங்க தாயே !!

ஆருக்காக்கும் பணம் அலட்சியமாக சிரித்தாள்.
(தாயின் தொனியில் சற்று மாறுதல்) அவள் தன் நினைவலையில் கிடந்தவற்றை அள்ளிக் கொடுக்கிறாள். தங்கராசாதான் கேட்டு நிற்கிறான் எனும் போக்கின் ஆவல் மிகுதியில் கனவில்கண்ட கல்யாணக் கோலத்தை பாடுகிறாள்.

தங்கக் கிளியானவள்- என்
அண்ணன் பெற்றபெண்ணானவள்
தாமரைப்பூ அழகானவள்- என்
அண்ணன் பெற்றபெண்ணானவள்

கட்டுத் திருக்கையெல்லாம்
கல்யாணம் பேசி வருமடா
ஆடாத்திருக்கையெல்லாம்
ஆள் சேர்த்து வருமடா
மணல் திருக்கையெல்லாம்
மண மேடை கட்டிவருமடா
புளியந் திருக்கையெல்லாம்
புல்லாங்குழல் ஊதிவருமடா
பூவாத் திருக்யெல்லாம்
பூமாலை கோத்துவருமடா
கனாக் கண்டேனடா மகனே!

(இதைக் கேட்ட இந்திரன் நெஞ்சம் பிளந்த துயரத்தில் றிஸீவரைத் தூக்கி எறிந்துவிட்டுவைன் போத்தலைக் கொஞ்சிக்கொண்டு தங்கராசா வாழ்ந்து---வளர்ந்த நிலையையும்--இப்போது உவன் கையில் அகப்படாமல் சுனாமி அள்ளிக்கொண்டு போன அந்த மங்கை மாதவப் பெண்ணையும் நினைந்துருகி இந்திரன் பாடுகிறான்....)

தவபாலனும் ரோகினியும்- உன்னைத்
தவமிருந்து பெத்தாங்க
தாளம்பாய் நோகுமென- உன்னை
தூளியிலே ஆடவைத்தாங்க

ஏலக்காய் வாசனைபோல்- கோட்டை
நல்லெண்ணய் தேய்த்தாங்க
கூர்மூக்கும் ஈழத்தேக்குமாய்- உன்னை
உருவாக்கி வைச்சாங்க

முல்லைத்தீவு கடற்கரையில்- உன்னை
விளையாட விட்டாங்க
தாளையடிக் கரையோரம்- உந்தன்
தாய்மாமன் பெண்வளர

கேட்டதெல்லாம் அள்ளித்தரும்- அந்த
கிளிமொழியும் கண்வளர்ந்தாள்
புண்ணியங்கள் செய்தமகராசி- உந்தக்
கெட்டழிவான் கைசிக்காமல் போனாளே

சுனாமியில் போனவளே- உந்தச்
சீரழிவான் வசம்வராமல் போனாயே
பாட்டெடுத்துப் பாடினால்- பரலோக
பூலோக ராசாவுக்கே வெளிச்சம்

மண்ணாடும் கடலோடு நீகலக்க- மா
தவங்கள் செய்த மகளே
உவன் கைபட்டுக் கசங்காமல்- உந்தன்
ஆயுள் சுனாமியில் போனதும் நன்றே

சம்மாட்டி உன் தகப்பன்- அங்கு
குத்தகைக்காரன் உன்மாமன்
செல்வப் புகழ்படைத்தமகன்- ராசா
பாரிசில் தீண்டத்தகாதவன்!

இலட்சமாய் வைத்திருந்த- இவன்
குடும்பம் சுனாமியால் ஏழையனார்
அண்டை அயல் அடுத்தவர்- தினம்
ஆச்சரியப்பட்ட குடும்பமது

குலக்கொழுந்து பாரிசில் 'சீதூ"- உவனை
அதிசயமாய் பார்ப்பவரே
இதிகாசம் இனிப்பாடுவது- புலத்து
இழிவான குடிவாழ்வைத்தான்

கடல் அள்ளிக்கொடுத்ததை- அந்தக்
கடல் அள்ளிப்போன காலம்
ஆழிப்பேரலை அழிவினாலே -- உந்த
அவலவாழ்வும் நேர்ந்ததே

(தங்கராசாவைப் பார்த்துப் பாடிய இந்திரனை நெஞ்சில் இடிச்சுத் தள்ளிய தங்கராசா தாளம் தப்பிப் பாடுகிறான்...இந்திரன் நின்று நோக்குகிறான்!)

குப்பையில்தான் ஆமணக்கு
சேத்திலதான் செந்தாமரை
பாத்துக்காது படியளக்கிறான்
பாரிஸ்மகன் 'ஆர்.எம்.மி" தான்
மாதக்காசு வரும் வரைக்கும்
ஊரென்ன உறவென்னடா
குடிகார இராச்சியம்தான்
வைன்போத்தல் கும்மாளம்தான்
அட அடா தங்கராசா
எட எடா லாச்சப்பல் மெற்றோ
போறண்ட... போறண்ட...

தங்கராசா கேட்டும்- கேட்காதவனாக தள்ளாடி நடந்து படிகள் இறங்கினான்...

செல்லடிச்சான் குண்டு போட்டான்
ஆனசனத்தைக் கொன்றுவிட்டான்
நஞ்சுவிட்;டான் கொளுத்திவிட்டான்

தப்பிவந்தான் பிழைக்கவந்தான்
கிருசகெட்ட வாழ்வுகண்டான்
பந்தமெல்லாம் செத்தழிஞ்சு
கடல்மிதத்தல் கண்டான்
கெட்டழிஞ்சு போவானே
தங்கராசா குடிகார ராசாவே
இன்னுமேன்ரா உசிரோடு நிற்கிறாய்?

இந்திரன் பாடியது தங்கராசாவின் காதில் விழுந்ததோ தெரியவில்லை அவன் வெளியேறிவிட்டான்... நாட்கள் உறுண்டன

ஒரு நாள் இரவு நடுச்சாம வேளை இந்திரன் வீட்டுக்கதவு பெலத்துத் தட்டும் சத்தம் கேட்டு துடித்துப் பதைத்தெழும்பினான்.
கதவைத் திறந்தான்.

பிரெஞ்சுப் பொலிஸ்காரர் இருவர்...அவர்கள் சொன்ன செய்தியில் இடிவிழுந்தவனாய் செற்றியில் ஆடாது அசையாது சடலமாய் சாய்ந்திருந்தான்....!நேரம் கடந்திட தொலைபேசி மணிச் சத்தம் இந்திரனைத் தட்டி எழுப்பியது மாதாவின் மணிக்குரல்தான் இதயத்தில் தைத்தது!உடலையே உலுப்பியது!!

என்வாயால் எப்படிச் சொல்வேனடா
உன்தயவில் வாழும் காலம்வந்ததடா
ஓரா மீனடா ஒடியல் புட்டடா
வாளை மீனடா சம்பாச் சோறடா
என்னென்ன வகைவகையாக ஆக்கி உண்டோமடா

உள்ளதை விற்று உல்லனை வாங்கினோம்
பலதையும் விற்று பாரையை வாங்கினோம்
சீலையை விற்று சீலாவை வாங்கினோம்
சிறந்ததைத் திண்டு உயர்ந்தவர் நாங்களடா
சுனாமியின் பின்னர் கடல்மக்கள் நாங்கள்
பிணத்தினை எண்ணிச் சவமாய்ப் போனமடா

ஆறாத் துயரம் ஆறுபோல் வருகுதடா
தீராத துயரம் திரண்டோடி வருகுதடா
எம்மைப் போல் செல்வரும் இல்லையடா
சுனாமியின் பின் கண்ணீரும் இல்லையடா

எங்களைப் போல் ஏழையும் இல்லையடா
எங்காச்சும் காணவும் முடியாதடா -- மகனே
எங்களுக்காய் அழுதாராம் உலகமெல்லாம்
அள்ளிக் கொடுத்தாராம் சீமாட்டி சந்திரிக்காவிடம்
பதுக்கிக் கொண்டதையும் வாய்விட்டழவாடா

கண்ணுக்கு இனியவனே கற்கண்டுச் சொல்லழகா
எங்கள் குடிவாழ நீயிருக்காய் தங்கராசா
எங்களுக்கு அள்ளிப்பணம் கொடுப்பாய் தங்கராசா
என் மவனே எங்கே உன் குரலைக் காணோம்?

(இப்படித் தாயவள் கேட்டபோது இந்திரனின் இதயம் இரண்டாகப் பிளந்தது! எப்படிச்
சொல்வான் பொலிஸ்காரன் வந்து சொன்ன பேரிடியை? தங்கராசா திறந்த வெளிச் சத்தைச் குப்பைத் தொட்டிக்குப் பக்கத்தில் இறந்து கிடக்கக் கண்ட புலத்துச் சுனாமி அதிர்ச்சியை.)

'அம்மா கதைப்பது யாரெனக் கேளுங்கோவன்
அம்மா நான்தானம்மா பெர்ணபேத்தின் பேரன் பேசிறன்.

தங்கராசா சிங்கநடையோடு வெளியபோனான்
தங்கமகன் தங்கராசா இனிமேல்....

இந்திரனால் பேரிடிச் செய்தியைத் தாய்க்குச் சொல்ல முடியவில்லை றிசிவரைப்பொத்திப்
பிடிச்சபடி மயிர்கால்கள் சிலிர்த்திட -- கண்களில் மாரி பெருகிட -- சர்வாங்கம் நடுங்கக் குளறிக் குளறியழுதான்....
யாருக்காக அழுதான்? சுனாமியில் சகல செல்வத்தையும் இழந்த மாதாவிற்காக அழுதான் ! ரெலிபோனை அடித்து வைத்துவிட்டு தங்கராசாவைப் பாடுகிறான்....

சட்டைமேல் சட்டை போட்ட உங்கமகன்
கயிறளவு சங்கிலி போட்ட உங்கமகன்
மேகவண்ணத் தொட்டிலில் வளர்த்தமகன்
ஊர்ச்சனம் அறியாமல் உற்றாரும் இல்லாமல்
உடன் மரணம் வந்ததென்றா சொல்லத்தாயே

சுனாமி பேரிடியில் நிற்கும்தாயிடம் சொல்ல
தங்கராசா சாவினை எப்படிச் சொல்வேன்
தலையில் எழுதியதை தாயவள் அறிவாளா
சுனாமி விதைத்ததில் விம்மியழும் மாதாவிடம்
மண்டையில் எழுதியபடி மாண்டான் என ....
மதுவில் மூழ்கி குப்பையில் கிடந்தான் என
தங்கராசா சரித்திரம் தரித்திரம் ஆனதே
அம்மா!தாயே! மாதாவே! புண்ணியவதி.

(ரெலிபோன் வழி குரல் கேட்காத கணத்தில்; தாயவள் புலம்புகிறாள்! இந்திரன் அனலிடைப் புழுப்போல் துடிக்கிறான் ...திரும்பவும் தொலைபேசி வழியாக...)

பெர்ணபேத் பேரா அயல்வீட்டு ராசா
எந்தன் செல்வத் திருவிளக்கு எங்கே
எந்தன் செம்பொன் சுடரொளி எங்கே
எந்தன் மாணிக்கத் தூணோன் எங்கே

தனிய நின்று புலம்புறேனே பேரா
பொழுதுபட இங்கிருப்பானா பேரா?
வாய்விட்டுச் சொல்லடா எந்தனது
நோய்விட்டுப் போக பெர்ணபெத் பேரா!

மௌனத்தில் புதையாத மனசாட்சியின் குரல் நீண்ட பிரசங்கமாகத் தொனித்தது.
புலத்திலடிச்ச சுனாமியில் மீண்டு தாயவள் தனித்து நின்று இரு கைகளையும் விரித்துப் புலம்பினாள்.

-மா.கிறிஸ்ரியன்
14.06.2005