கவிதை
இலவசம் இந்த வாழ்க்கை
நெட்ட நெடுநாளாய்
என் முன்னோருக்கு முன்னோரையும்
ஏற்றிப் போன தொடரூந்தில்
பொன்னாங்காணியும்,
முருங்கைக்காயும் கொண்டு
பயணச் சிட்டையின்றிப் புறப்பட்ட
புதிய கள்வன் நான்.
பழைய கள்வர்கட்கு
பழகிப்போன பயணமிது
புதிய கள்வன் நான் ஒவ்வொரு தரிப்பிடத்திலும்
உயிர் பிதுங்க.
இறங்கும் இடம் வரை
இறந்திறந்து பயணிக்கின்றேன்.
என் முன்னோர்
எப்படி இந்தத் தூரத்தைக் கடந்தனர்!
எண்ணிப் பார்க்க முடியவில்லை.
எதிர்பாரா நேரமொன்றில்
ஏறிக் கொள்ளலாம்
எனைப் பிடிப்பவர்கள்.
சிட்டையின்றி வந்த தூரத்தின் கூலியிலும்
இரெட்டிப்பாகலாம் தண்டனைக் கூலி.
கையிருப்புகள் முழுவதையும்
கொடுத்துவிட்டு
இன்னொரு நாளிலும்
ஏறிக் கொள்வேனோ
பழைய கள்வனுக்குரிய
பக்குவத்தோடு?
- கள்வர்களுக்குள்ளும்
கள்வன் போல
கருதத்தோன்றிய
ஒருவன் கேட்டான்
சுதந்திரகாலத்தின்
விடுமுறை நாளில்
அழகிய உலகை ஏன்
அச்சத்தோடு பார்க்கின்றாய் என.
ஏங்கிப் போனேன்!
எனது பாதையெங்கும்
எத்தனை அழகுகளை
ரசிக்கத் தவறினேன்!
எந்த மரத்திலிருந்து
எந்தக்குயில்
எனைப் பார்த்துக் கூவியதோ!
அருகில் அமைந்த
தண்ட வாளங்களின் நடுவில்
அரங்காமல் முகம் கறுத்த
கற்களையெல்லாம் அள்ளி
சமுத்திரங்களில் வீசியெறியத் தோன்றிற்று.
ஆயினும் அவைகள் கற்கள்
இன்னொரு இடத்திலும்
இப்படித்தான் கிடப்பன.
இனிவரும் தரிப்பிடத்துக்காய்
காத்திருக்கின்றேன்
அச்சத்தின் எச்சங்கள்
இன்னமும் ஒட்டிக் கொண்டு
அழகின் இன்னொரு பரிமாணத்தை
எனக்குச் சொல்லலாம்.
-மெலிஞ்சிமுத்தன்
|