எனது கரையை எண்ணி

'சிப்பத்தா" என்றழைக்கிறான்
சின்னவன்- அவன்
அண்ணன் மகன்

இப்படித்தான் நானும்
'அவ்வா" என்றழைத்தேனாம் - என்
அப்பாவைச் சிறுவயதில்.

பிழையான தமிழிலும் அழகிருக்கும்
பிஞ்சுகளின் வாயுதிர்த்தால்.

அந்தப் பருவத்தில்
அம்மாவின் சேலை
போர்த்துப் படுக்கையில்,
கூரையில் மழை
கொட்டும் ஓசையில்
எத்தனை பேரின்பம்!

மடிச்சேலைக்குள் பலகாரங்களை
மறைத்து வைத்துத் தீத்துவாளே 'ஆச்சி"
அந்த உணவில்தான்
எத்தனை ஊட்டம்!

கள்ளுக்குடிலில் அப்புவாங்கிய
நண்டுகளை - காய்ந்த
புல்லுகளுக்குள் போட்டுச்சுடுவோம்.
கணைச்சூட்டுக்கு நல்லமென்று
கள்ளுக்பருகையிலே - நண்டுக்
காலுடைத்துத் தின்போம்.

எந்தத் தீனிக்கு
அந்தச் சுவையிருக்கு?
வெல்வேற் சேலைகள்
விரித்து வளத்தி - என்தலையை
விரல்களால் உணாவுவாள் ஆச்சி.

ஆச்சி உறங்கியதும்
நான் துயின்ற மெத்தை
அப்புவின் மார்புதானே
அந்த உடலின் வியர்வை வாடையில்தான்
எத்தனை ஈர்ப்பு!

இவையெல்லாம் அறிவானோ
இந்தச் சிறுவன்?
இந்நாளை எனைப்போல
இனி வரும் நாளில் நினைப்பானோ?

என் தமிழில் சந்திப்பானோ?
என் தமிழை சிந்திப்பானோ?

ஓ நான் வேர்விட்ட என் கிராமமே
நீ போர்த்திருக்கும் பூவரசமரங்களில்
இலை பிடுங்கி குழல் சுருட்டி
பீப்பீ என்று நான் ஊதவேண்டும்
உன்னுள் புதைந்த -என்
உறவுகளின் கல்லறைகளில் இருந்து
கதறி நான் அழவேண்டும்

அந்த நிமிடங்களை
அந்த நிமிடங்களை
எந்த வரிகளால்
என்னால் பூரணப்படுத்தமுடியும்?

-மெலிஞ்சிமுத்தன்