எழியவன் இரைவுகள்

மனுசர்கள் வாழும் குகைகளில்
உள்முகத்தை
நம்பிக்கையாய் சாய்த்து
இளைப்பாற மடி தேடி
தோற்றுப் போனவன்.
காலாற நடந்த வெளிகளில்
புல்லுகள் நசிந்து போனதை
காணாது போனேன்.

மிருகத்தின் தோலில் பாதணியணிந்த
எனது ஒவ்வொரு அடியிலும்
இரத்தக் கசிவுகள்.

மனம் குறுகி
புல்லுகளின் கால்களில் வீழ்ந்தேன்.

ஓ- எனது நடப்பில்
நசிந்த புல்லுகளே
என்னை மன்னிப்பீர்களாக.....
...அதோ காத்துக்கிடக்கும்
எனது சவக்குழியில் - நீங்கள்
மறுபடியும் உயிர்க்க
உயில் எழுதிவைக்கிறேன்

சிவப்பு இரத்தம் சிந்தப்படும் மண்ணில்
பச்சை இரத்தத்தை பார்க்கத்தவறியவன்
சிறுமை கொண்டேன்.
இதோ-
பட்டுப் பூச்சிகளைக் கொன்று
நான் நெய்த ஆடைகளை கிழித்துக்கொண்டு
நிர்வாணியாகின்றேன்...

என் இதயத்தையும் - அதனுள்
இருப்பவளையும் - உங்கள்
கொத்தடிமைகள் ஆக்குகின்றேன்.

வேறொன்றும் தேவையில்லை புல்லுகளே
பனித்துளிகளையும் உடையாது குடையும்
உத்தியை சொல்லித்தாருங்கள் - ஏனெனில்
நான் இன்னமும்
மனுசர்களுக்குள்வாழ
நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.

-மெலிஞ்சிமுத்தன்