ஓவியர் புகழேந்தியின் படைப்புலகும்
தூரிகையின் மொழியும்

ஓவியர் புகழேந்தி தஞ்சை மாவட்டம் தும்பத்திக்கோட்டைகிராமத்தில் பிறந்தார். கும்பகோணம் ஓவியக்கல்லூரியில் மாணவனாக இணைந்து அவர் ஓவியம் பயின்றார். அந்தக் காலத்திலேயே அதாவது 1983ஆம் ஆண்டளவிலேயே இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிரான இனக்கலவரம் வெடித்துக் கிளம்பியது. அந்த சம்பவம் ஓவியரின் மனதை ஆழமாக துயர்கொள்ளவைத்தது. ஆவணி; மாதம் அளவில் ஓவியக்கல்லூரியில் இணைந்திருந்த அவர் ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் கலந்து கொண்டார். பெரிய அளவில் எழுச்சியுடன் நடைபெற்ற அப்போராட்டத்தில் அவரும் துடிப்புடன் கலந்து கொண்டு உழைத்தார். தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக அக்காலத்தில் நிகழ்ந்த போராட்டம் அது. நீண்ட நெடிய போராட்டமாக விளங்கியது. ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவில் அப்போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 1965களில் எதிர்ப்பு போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டதற்கு பிறகு நிகழ்ந்த நீண்ட நெடிய ஒரு போராட்டமாக அது விளங்கியது.

அப்போது ஓவியத்தின் ஊடாகவும் இப்போராட்டத்திற்கு உதவ முடியும் என அவரது மனதில் எண்ணிக்கொண்டதாக கூறுகிறார். அவர் முதலில் கல்லூரியில் இணையும் போது விளம்பரப் பகுதியில் இணைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அதுவே வருமானத்தை ஈட்டித்தரும் எனவும் பலர் கூறி இருந்ததையும் அவர் கருத்தில் கொண்டிருந்தாலும் பின்னர் அத்தகைய கருத்து நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய ஓவியப் படைப்புலகம் ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல பரிசில்களையும், விருதுகளையும் வென்று மிகவும் குறிப்பிடத் தக்க
ஓவியராக உயர்ந்துள்ளார். இன்று வரை அவரது ஓவியப் படைப்புலகமானது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இவர் அண்மையில் தாயகத்திற்குப் பயணம் செய்து ஓவியக் கண்காட்சிகளை நிகழ்த்தினார்.

இந்த ஓவிய பயணத்தின் மூலம் அவர் பல பயிற்சிப் பட்டறைகளையும் நிகழ்த்தினார். இச் சந்தர்ப்பத்தின் போது எரிமலை சஞ்சிகைக்காக புலிகளின் குரல் பிரதம செய்தியாளர் தவபாலன் அவர்கள் ஓவியர் அவர்களை நேர்கண்டார்.

ஓவியம் மீதான ஈடுபாடு தங்களுக்குள் எவ்வாறு எழுந்தது ?

தமிழீழ விடுதலை போராட்டம் என்னை சிந்திக்கக்தூண்டியது. ஒரு படைப்பாளனாக இருந்து இந்த போராட்டத்திற்கு உதவவேண்டும் என என்னை உந்தித்தள்ளியது. அப்பொழுது நிறைய புகைப்படங்கள் செய்திகள் நாள் தோறும் என்னை வந்து அடையும். அவற்றையெல்லாம் கேட்கின்ற பொழுதும் படிக்கின்ற பொழுதும் புகைப்படங்களையெல்லாம் பார்கின்ற பொழுதும் அதை நான் உள்வாங்கிக் கொண்டு அப்படுகொலைகளையெல்லாம் கலவரங்களையெல்லாம் வைத்து நிறைய ஓவியங்களை வரைந்தேன். அங்கு தமிழகத்திற்கு இவ் ஊர்வலங்களையெல்லாம் பார்க்கும் போராளிகளுக்கு இவ் ஓவியங்களை காண்பிப்பேன். அப்போது அவர்கள் அவ் ஓவியங்களையெல்லாம் பார்த்து ஈர்த்து மேலும் சில வீடியோக்காட்சிகளையெல்லாம் எனக்குத் தந்தார்கள். நீண்ட நாட்கள் அந்த வீடியோ படங்களையெல்லாம் போட்டுப் பார்த்து மேலும் என்னை அந்த உணர்வுகளோடு ஒன்றினைந்து உள்வாங்கிக் கொண்டு மேலும் மேலும் என்னுடைய படைப்பினை அந்த திசையை நோக்கி செலுத்தினேன். அந்த நேரத்திலேயே என்னுடைய படிப்பு சம்பந்தமாகவும் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். விளம்பர கலைப்பிரிவில் சேர்ந்து ஒரு விளம்பர நிறுவனத்திலே ஓவியனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலே இருந்த நான், ஒரு படைப்பாளானாக இருக்க வேண்டும் அப்படி இருந்து - ஒரு சமூகப்படைப்பாளானாக வேண்டும் என்ற முடிவுக்கும் நான் வந்தேன். அத்தோடு ஒரு வண்ண கலைப்பிரிவில் சேர்ந்து நான் படிக்க வேண்டும் என்று கல்லூரியில் சேர்ந்த 2,3மாதங்களிலேயே முடிவுசெய்து விட்டேன். இப்படி எனது முடிவுகள் மாற்றுவதற்கும் எனது சிந்தனைகளை வளர்த்து கொள்வதற்கும் இவ் ஈழப்போராட்டம் மிகவும் துணைநின்றது. அந்த அடிப்படையில் தான் நான் ஒரு ஓவியனாக ஒரு படைப்பாளனாக இன்று உலகத்தின் முன் படைப்புகள் ஆக்கிக்கொண்டு ஒரு சமூக பொறுப்புள்ள சமூகப்படைப்பாளனாக இன்று இருக்கின்றேன். ஒரு படைப்பாளன் ஒரு சமூக விமர்சனாக இருக்க வேண்டும் என்கின்ற அடிப்படையிலேயே இன்று உலகில் எது நடந்தாலும் அவற்றை எதிர்த்து குரல் கொடுக்கின்றவனாக எனது படைப்புக்கள் என்னை ஆக்கி இருக்கின்றது இதற்கு இந்த ஈழப்போராட்டம் முக்கிய காரணம்.

கேள்வி: இப்பொழுது நீங்கள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக உங்களது படைப்புகளை கொண்டு வருகின்ற போது ஒரு சிக்கல் ஏற்படும் அதாவது நீங்கள் தமிழுணர்வாளர்களுடன் இணைந்து தமிழுணர்வுத்தளத்தினுடாகத்தான் நீங்கள் செயற் படக்கூடடிய நிலமை இருக்கின்றது. இந்த வகையிலே தமிழ் உணர்வாளர் முற்று முழுதாக கலையின் நவீனத்துவதத்தை உள்வாங்கியவர்களாகவும் இல்லை. அதிலும் ஒரு மரபுத்திடம் அவர்களிடம் வந்துவிட்டது. இந்தச் சூழலில் நீங்கள் ஓவியத்தில் மரபுகளை உடைத்து தேறியிருக்கிறீர்கள் இதற்கு எவ்வாறு ஆரம்ப கட்டத்திலே வரவேற்பு இருந்திருக்கும் இது ஒரு பிரச்சனைக்குரிய விடயம் ஒரு சவால்?

பதில்: குறிப்பாக நான் திராவிட சிந்தனை உள்ள ஒருவன்தான். திராவிட இயக்கம்தான் என்னை வளர்த்தது. திராவிட இயக்கம் ஒன்று இல்லை என்றால், இன்றைக்கு தமிழ் சிந்தனையே இருந்திருக்காது. அவ்வடிப்படையிலேயே நானும் ஒரு திராவிட சிந்தனையுள்ளவன். நீங்கள் சொல்வதைப்போல் திராவிடசிந்தனை உள்ளவர்களுக்கு ஒத்த மரபு சார்ந்ததிலேயே அதிகமான ஈடுபாடும், நவீனம் சார்ந்ததில் ஒரு புரிதலும் அதைப்பற்றி ஒரு அக்கறை இல்லாத நிலை இருந்தது உண்மை. ஆனால், இப்போதைய காலகட்டத்தில் திறமை மாற்றம் இருக்கிறது. அதனால் நான் இந்த நவீனம் சேர்ந்து இயங்கிய காலத்தில் நான் பல்வேறு வகையான இந்த புரிதல் சிக்கல்களை எதிர்கொண்டேன். தமிழீழ சிந்தனை கொண்டவர்கள் குறிப்பாக இந்த நவீனம் சார்ந்து ஒரு அண்மித்த தன்மை கொண்டிருந்ததை நான் அப்பொழுது உணர்ந்தேன். ஆனால் அவர்களிலும் பலர் குறிப்பாக இலக்கியத்தில் நிற்பவர்கள். இன்றைய நவீனம் சார்ந்து சிந்திக்க கூடியவர்களாக இருந்தார்கள். நிறைய இலக்கியங்களில் நவீன கவிதைகளையும், புதுக் கவிதைகளையும் எழுதக் கூடியவர்களாக திராவிட இயக்கத்தில் இருந்தார்கள். நிறைய மாற்றத்தை புதுக்கவிதை தோற்றுவித்திருந்தது. புதியமாற்றத்தை தொடக்கி வைத்து விட்டார்கள். அப்படி ஒரு தொடக்கம் ஒரு அறிமுகம் இருந்தகாரணத்தினால் எனக்கு சற்று ஓவியத்திலே எளிதாக இருந்தது எனலாம் அப்படி உரு ஓவியங்களை நான் செய்து காட்சிக்கு வைக்கின்ற பொழுது என்னுடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள் என்னுடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள் என்னுடைய வடிவத்திலே சற்று மாற்றம் தேவை என்று கருதியதால் நான் அவர்களுடன் விவாதித்து கலந்துரையாடி எனது கருத்துக்களை வலியுறுத்தினேன். வெறும் மரபு என்று மட்டும் இருந்து விட்டு அதுவே ஒரு தன்மையாக மாறிவிட்டது என நான் திராவிடஇயக்க கருத்தாளர்களிடம் கவிஞர்களிடம் எழுத்தாளர்களிடம் சொன்னேன். புதிய மாற்றங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நவீன சிந்தனைகளை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் அவ்போதுதான் நாம் புதிய புதிய வடிவங்களை கையாள்வதற்கு வாய்ப்புக் கிட்டும் என நான் அவர்களிடம் வாதாடினேன்.

பிறகு, காலம் செல்லச் செல்ல நான் அதில் வெற்றி பெற்றேன். அவர்கள் மட்டும் அல்ல பொதுவாக நவீன ஓவியங்கள் என்ற அடிப்படையிலேயே மிகவும் ஒரு அந்நியத்தன்மை தமிழக சூழலில் இருந்தது மக்களுடன் ஒட்டாமல் அந்நியப்பட்டு இருந்ததிலேயே நான் இவ் ஓவியங்களைச் செய்து கண்காட்சிகளுக்கு அனுப்புகின்ற சூழல் - பலரும் அதைப்பார்த்;து விட்டு அதற்கு வைக்கின்ற விமர்சனங்கள் பாராட்டுக்கள் இப்படி நிறைய வந்தது. இப்படி ஓவியங்களுக்கு தேசிய விருது மாநில விருது என பல விருதுகள் கிடைத்த சந்தர்ப்பங்களில் பல்வேறு இதழ்கள் அவ் ஓவயங்களைப் பிரசுரித்தன. கட்டுரைகள் எழுதின. (அந்தக்காலகட்டம் 1987) அந்த 87ல் ஒரு நவீன ஓவியம் மக்கள் மத்தியில் பரவலாக வெளிவந்தது. அந்தச்சந்தர்ப்பத்தில் பல்வேறு தரப்பும் அவ் ஓவியத்தைப் பார்த்து விட்டு அவ் ஓவியத்தில் இருக்கின்ற ஆழம், கருத்து இவைகளையெல்லாம் பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு எனக்கு எளிதாக இருந்தது. அது ஒரு சாதகமான சூழலாக மாறியது. அதன் பிறகு ஈழ போராட்ட ஓவியங்கள் மேலும் வரையத் தொடங்கினேன். மாநில விருது, தேசிய விருது, வாங்கிய ஓவியங்கள் கூட ஈழம் சம்மந்தப்பட்ட ஓவியங்கள்தான.; அப்போது அவ் ஓவியங்களிற்கு “பாதிக்கப்பட்டவன்” எனத் தலைப்பிட்டேன். அதன் பிறகு பல்வேறு ஓவியங்களை நான் செய்தேன். அவ் ஓவியத்தில் இருக்கக் கூடிய உள்ளடக்கம் வெகுவாக மக்களை ஈர்த்தது. கண்காட்சிகளாக வைக்கின்ற பொழுது நிறைய மக்கள் அதைப்பார்த்துவிட்டு எளிதாக புரிந்துகொள்கின்ற அந்த நிலையை எட்டின.

அப்பொழுதுதான் நான் உணர்ந்து கொண்டேன் மக்களிடம் சொல்லுகின்ற பொழுது நிச்சயமாக ஒரு வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என நான் கருதினேன். இவ் ஆதரவுகளின் பின் பல்வேறு பத்திரிகைகள் அதைப் பற்றி எழுதினன் இவ்வாறு நான் அதை மக்கள் மத்தியில் நவீன மயப்படுத்தும் பொழுது மிகப் பெரிய சவால்களையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. முதலில் மக்கள் மத்தியில் வைக்கும்பொழுது ஒரு குழப்பமான சூழல் உருவானது ஏன் என்றால் இதை ஒரு அந்நியத்தனமான மொழியாக இவ் ஓவியத்தை கருதினார்கள். ஆனால் நின்று நிதானித்துப் பார்த்து அவ்ஓவியங்களை உள்வாங்கிக் கொண்டார்கள். அதற்கான பயிற்சியை அவர்கள் பெற்றார்கள். அதன் பிறகு அவ் ஓவியத்திற்கு கிடைத்த வரவேற்பு என்பது அதிகம்.

கேள்வி: உங்களுடைய ஓவியங்களில் மரபு சார்ந்த ஓவியங்கள் அல்லது ஓவியத்தின் வர்ணங்களிற்கு குறிப்பிடப்படுகின்ற மனநிலை அல்லது அதற்கான சூத்திரங்களிற்கு அப்பால் நீங்கள் முறியடித்து இவ் ஓவியங்களை வரைகிறீர்களா?

பதில் : மரபு நவீனம் என்னைப் பொறுத்தவரையில் நான் இவ் இரண்டிலுமே மரபில் இருந்துதான் நான் நவீனத்தை கையாளுகிறேன். எனக்கு மரபு எதிரி அல்ல. மரபுதான் எமக்கு சொல்லித்தருகிறது. மரபை நாம் சரியாக உள்வாங்கிக் கொண்டால்தான் நவீனத்தைப்பற்றி வெளிப்படுத்த முடியும். மரபு என்பது நமக்கான மிகப்பெரிய அடிப்படை என நான் கருதுகிறேன்.

ஐந்து ஆண்டு நான் படித்த படிப்பும் அவ் அடிப்படைதான். அது இலக்கியமாக இருந்தாலும் ஓவியாமாக இருந்தாலும் சரி நவீனம் என்று உடனடியாக முளைத்து விடுவதாக நான் கருதவில்லை. அப்படி ஒன்று இருக்கவும் முடியாது சிலபேர் கூறுகிறார்கள் நவீன கவிதை எழுதுவது எப்படி என்று சொல்லித்தரமுடியும் என்று. அதேபோல் நவீன ஓவியம் வரைவது எப்படி என்று சொல்லித்தரமுடியும். எனவும் நான் கருதவில்லை. மரபை நாம் அறிந்துகொண்டு புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொண்டு அதனால் கிடைக்கின்ற அனுபவத்திலே நாம் புதிய ஒன்றைப் படைக்கலாம். அப்படித்தான் நான்; நவீனத்தைப் படைக்கிறேன். எடுத்த உடனேயே ஒரு படைப்பாளன் நவீன ஒவியத்தைப் படைக்க முடியும் என நான் கருதவில்லை. அப்படி என்றால் ஒரு குழந்தை மிகப் பெரிய நவீன ஒவியத்தை வரைகிறது என கூறலாம். இவ் மரபுசார்ந்த அடிப்படை மிகப்பெரியதொரு ஆழத்தைத் தருகிறது. அதுதான் இவ் ஓவியத்தில் வெற்றி பெற்றிருப்பதாக கருதுகிறேன். மனித உருவங்களை படைக்கின்ற பொழுது உடற்கூறுகளைப் படைக்கின்ற பொழுது அவ்வுடற்கூறுகள் சரியான அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் மாற்றங்கள் செய்து உணர்வுகளுக்கு ஏற்றாற் போல். அவ் உடற் கூறுகளை சற்று நவீனத்துவமாக்கி வெளிப்படுத்துகிறேன். நிறங்களை ஒத்த கருத்தை சொல்ல வருகிறோமோ அந்தக் கருத்துக்கு ஏற்ப கையாள்கிறேன். அங்கே எனக்கு மரவு குருகிடவில்லை மரபையும் கையாளவில்லை மரபு ஓவியங்களைச் செய்யும் போது மரபு சார்ந்த ஓவியங்களை கையாள்கிறேன். நவீன ஓவியங்களை செய்யும் போது எந்த கருத்தை எடுத்தேனோ அதற்கு தேவையான நிறங்களை நான் கையாள்கிறேன்.

கேள்வி: ஈழத்தமிழர்களுடைய போராட்டத்தை மைய்யமாக வைத்து நீங்கள் வரைந்த ஓவியங்களில் இரண்டு முக்கியமான ஓவியங்கள் இருப்பதாக கருதுகிறேன். ஒன்று போராளி அடுத்து தியாகதீபம் தீலிபனுடைய வீரச்சாவு ஓவியம். இதில் தியாகதீலிபனுடைய ஓவியம் மிகச் சிறந்ததாக அந்த உணர்வை வெளிப்படுத்துவதாக அமைகிறது உண்மையில் ஒரு புகைப்படத்தில் கூட அந்த உணர்வை நாங்கள் பார்த்ததில்லை அதனை எவ்வாறு உள்வாங்கி வெளிப்படுத்தினீர்கள்?

பதில். அதாவது ஒரு புகைப்படத்திற்கும் ஓவியத்திற்க்கும் வேறுபாடு என்னவென்றால் இருக்கின்ற உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது புகைப்படம். எப்படித்தான் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தினாலும் இல்லாத ஒன்றை புகைப்படத்திலே கொண்டுவரமுடியாது. அது ஒளி நிழல் சார்ந்து கூட்டமைவு சார்ந்து எப்படி எடுத்தாலும் ஒரு அளவோடு மட்டுப்படுத்தப்பட்டுவிடும். ஆனால் ஒரு ஓவியம் என்பது அதற்கு இருக்கும் தளம் என்பது இன்னொருவகையான விரிந்து பரந்துசெல்கின்ற ஒரு தளமாக இருக்கின்றது. அங்கேதான் ஒரு படைப்பாளனாக நான் பல்வேறுவிடயங்களை உள்வாங்கிக் கொள்கிறேன். அதை அப்படியே என்ன சொல்ல வருகின்றமோ அதற்கு தகுந்த மாதிரி வெளிப்படுத்துகிறேன்.
அப்படித்தான், நான் திலீபனுடைய உண்ணாவிரத நிகழ்வையும் பன்னிரண்டு நாள் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரமிருந்து இறந்ததையும் ஒவ்வொருநாளும் நான் தமிழகத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அதாவது கண்ணால் அல்ல ஒவ்வொருநாளும் செய்திகளில் வரும் நிகழ்வுகள் எம்மை உறங்கவிடாது செய்து கொண்டிருந்தன.
ஒவ்வொருநாளும் இந்நிகழ்வு மிகபெரிய வேதனையைத் தந்தது. யாராவது தலையிட்டு அவ்வுண்ணாவிரதத்தை நிறுத்துவார்களா என நான் ஏங்கி இருக்கிறேன். இவரது கோரிக்கைகளை நிறைவேற்றி அவ்வுண்ணாவிரதத்தை தடுத்து நிறுத்துவார்கள் என நான் ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் 12வது நாள் மிகப் பெரிய சோகம் நிறைந்தது. அவர் உயிர்தீத்தார். நீண்ட நாட்களாக என் மனதை அழுத்திக் கொண்டிருந்த நிகழ்வு அந்த நிகழ்வு உடனடியாக அவ்ஓவியத்தை நான் செய்யவில்லை. பல்வேறு ஓவியங்களை நான் படைத்தேன். பல்வேறு வகையான நிகழ்வுகளை இடையிடை நான் படைத்தேன். திலீபன் உண்ணாவிரமிருந்ததை நான் செய்யவில்லை. எனக்கு அவ்வளவு வலி இருந்தும் நான் உடனடியாக அதை வரையவில்லை. இருபதாம் நூற்றாண்டைப்பற்றி உலகம் நகர்ந்து கொண்டு இருக்கையிலே நான் இந்த இருபதாம் நூற்றாண்டை ஒரு ஓவியத்திலே மீள் பார்வை பார்க்க வேண்டும். என்று எண்ணி ஒரு ஓவியத்திலே ஒரு வரலாற்றைப் படைக்க வேண்டும் என்று எண்ணி அந்த திலீபனுடைய ஓவியத்தையும் இருபதாம் நூற்றாண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையிலே திலீபன் ஓவியத்தையும் நான் படைத்தேன். படைத்தேன் என்றால் என்மனதில் நீண்டநாட்கள் குமுறிக்கொண்டிருந்த உணர்வு ஒன்று வெளிப்பட்டது. பல்வேறு ஓவியங்கள் இன்றைக்கு வரையப்படாத ஓவியங்கள் என்னிலே அழுத்திக் கொண்டிருக்கின்றது. அப்படித்தான் 87ல் இருந்து அதாவது திலீபன் உண்ணாவிரதம் இருந்த ஆண்டிலிருந்து இவ்வுணர்வு என்னை அழுத்தி அழுத்தி ஒவ்வொரு நிகழ்வுகளைச் செய்யும் போதும் அதைப் பற்றிய தரவுகளை நான் எடுப்பேன். ஆனால் திலீபன் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி நான் எந்தக் தகவல்களும் எடுக்கவில்லை. காரணம் இவ் ஈழப்போராட்டத்தைப்பற்றி எந்தச் செய்தியும் எனக்கு அத்துப்படி. நான் எல்லா வகையான தகவல்களையும் மனதிலே வைத்திருப்பேன். அது ஆண்டுகளாக இருந்தாலும் சரி, நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் மனதிலே அழுத்தி வைத்திருக்கும் நிலைதான் இன்னும் இருக்கிறது. அப்படி அந்த சிக்கலிலே எனக்கு நீண்டதொரு அனுபவம் இருப்பதினால் இந்த ஓவியத்தை எந்த ஒரு தகவல்களையும் எடுக்கலாம். அதைச்செய்ய வேண்டும் என்று நினைத்து அந்த கித்தானுக்கு எதிரே அமர்ந்து கொண்டு வழக்கமாக நான் ஒரு ஓவியத்தைப் படைக்கின்ற போது நான் அதற்குத் தேவையான முன்தயாரிப்பு ஓவியங்கள் என்று பல்வேறு ஓவியங்களை வரைவது வழக்கம் ஒரு இருபது அல்லது முப்பது முன் தயாரிப்பு ஓவியங்களை வரைவேன். ஆனால் திலீபன் ஓவியத்திற்கு அப்படியும் நான் வரையவில்லை. நேரடியாக கித்தானோடு என்னுடைய தூரிகை உறவு கொண்டது அப்போது தான் நான் அந்த ஓவியத்தை முடித்து என்னுடைய ஆழ்மனதில் இருந்தவைகளையெல்லாம் ஒவ்வொரு துளியும் அந்த உயிர் பிரிகின்ற அந்த தருணத்தைக்கொண்டு வரவேண்டும் என்றுதான் நினைத்தேன்.அந்தக் கடைசி நிமிடத்தில் அதாவது அந்த உயிர் பிரிந்த போது என்ன வலியை இங்கு நேரடியாகப் பார்த்த மக்கள் பெற்றோர்களோ அந்த உணர்வை அவ் ஓவியத்திலே கொண்டுவர வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கு முன் நான் திலீபன் ஓவியத்தை நான் மிகவும் எளிமையான ஒரு படைப்பாக - ஆனால் அது எந்தச்சிக்கல்களும் இல்லாத,ஒரு எளிமையாக வெளிப்படுத்தப்பட்ட, அந்த உயிர் பிரிந்த நிலையிலும் அதில் ஒரு உணர்வு வெளிப்படுத்தக் கூடிய ஒரு ஓவியமாக இருந்தது. - இன்று அனைத்துத் தரப்பு மக்களாலும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓவியமாக இருக்கின்றது.

கேள்வி : அடுத்தது ஒரு போராளியினுடைய ஓவியம் வழமையான போராளிகளினுடைய ஓவியங்களிலே இருக்கின்ற குறியீடுகள் சீருடைகள் இராணுவச்சப்பாத்துகள் துப்பாக்கிகள் இவை எவையுமே இல்லாமல் ஒரு மனிதன் இறந்திருக்கின்றதையும் அவனுடைய உடையில் மிகக் குறைந்தளவு உடை இருக்கின்றன பக்கத்தில் இரண்டு செருப்புக்கள் இருக்கின்றன இதனை எவ்வாறு போராளி என்று குறிப்பிடுகின்றீர்கள்.

பதில்: அதாவது போராளி என்பதற்கான ஒரு பொதுக்குறியீடு அந்த ஓவியம். ஒரு போராளி என்பவனுக்கு சீருடை அவசியம் என்று நான் கருதவில்லை. ஒரு போராளி என்பவனுக்குத் துப்பாக்கி தேவை என்று நான் கருதவில்லை. சீருடை இல்லாமலும் துப்பாக்கி இல்லாமலும் ஒருவன் நிச்சயமாக போராளியாய் இருந்திருக்கலாம். ஒருவன் நிச்சயமாக போராளியாய் இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். அந்த அடிப்படையில்தான் அவ்ஓவியத்தை நான் அப்படிச் செய்தேன். என்னைப் பொறுத்தவரையிலே பொதுவாக ஓவியங்களிலே உடல் மொழியும் பேசும். என்னுடைய ஓவியங்களிலே அதிகமாக நிறங்கள் எப்படிப் பேசுகிறதோ வடிவங்கள் எப்படிப் பேசுகிறதோ அதேபோல் உடல் மொழியும் பேசும். அவ் உடல் மொழிக்கும் பல்வேறு தன்மைகள் இருக்கின்றன. வெளிப்படுத்துவதற்கு அதன் அடிப்படையில்தான் இன்றைக்கு என் ஓவியங்களிலே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அப்படித்தான் அந்தப் போராளி என்ற ஓவியத்திலும் ஒரு போராளி இறந்து விட்டால் அடுத்த ஒரு போராளி என்ற ஓவியத்திலும் அவன் அங்கே மடிந்து கிடக்கிறான். ஒரு போராளி இறந்துவிட்டால் அடுத்த ஒரு போராளி, நிச்சயமாக இன்னோரு போராளி அப்பயணத்தைக் தொடர்வான். இதுதான் ஒரு போராட்டத்தினுடைய உண்மைத்தன்மையாக இருக்கிறது.

அந்த அடிப்படையிலேதான் அந்தக் செருப்பை, அந்த மிதியடிகளை ஒரு தொடரும் பயணத்தின் குறியீடாக அவ்செருப்பை அங்கு வைத்தேன். அப்பொழுது அந்தக்காலத்தில் இவ் ஓவியங்களைக் கண்காட்சி வைக்கின்ற நிலையிலே பார்வையாளார்களிடையே மிகப் பெரியதொரு வரவேற்பை பெற்றதாக அமைகிறது. அகில இந்திய அளவிலே பேசப்பட்ட ஓவியம் அது. அப்போது பல்வேறு இதழ்களும் அவ் ஓவியத்தை அவ் ஓவியம் வெளிப்படுத்துகின்ற பொருளைச் செய்திகளை கூறுகளை ஆராய்ந்து இருக்கின்றன. பல்வேறு தரப்புப் பத்திரிகைகளும் அவ் ஓவியத்தை வெளியிட்டு இருக்கின்றன. அப்படித்தான் அவ் ஓவியத்தின் கரு இருப்பதாக நான் நினைக்கின்றேன். இன்றைக்கு இந்த மண்ணிலே நின்று கொண்டு இவ் ஓவியத்தைப் பார்ப்பதற்கும் போராட்டம் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இவ் ஓவியத்தை பார்ப்பதற்கும் எந்த வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக அவ் ஓவியத்தை நிறையப் பார்வையாளர்கள் உள்வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: அதாவது சாதாரணமாக தமிழகத்திலும் சரி எங்களுடைய இடத்திலும் சரி புலம் பெயர்ந்த நாடுகளிலும் சரி உங்களுடைய ஓவியங்களை அதாவது நவீன ஓவயிங்கள் தொடர்பான பரீட்சயம் இல்லாதவர்கள்கூட விரும்பிப் பார்ப்பதற்கான அடிப்படைக்கூறாக என்ன இருக்கின்றது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நிச்சயமாக நான் பயன்படுத்துகின்ற உடற்கூறு மொழி என்றுதான் நான் கருதுகிறேன். நான் நவீனத்துவ வெளிப்பாடுகளை செய்யத்தொடங்கிய உடனேயே நான் உருவம் சார்ந்துதான் பேசவேண்டும் என முடிவு செய்து கொண்டேன். உருவம் சார்ந்துதான் பேசவேண்டும் என்று சொன்னதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. அதாவது நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நானும் விவசாய இல்லங்களிலே வேலை செய்திருக்கிறேன். விவசாயிகளோடு தொழிலாளியோடு தொழிலாளியாக நின்று வயல்களிலே வேலை செய்திருக்கின்றேன். அவர்களோடு இருக்கின்ற அந்த நேரத்திலே அவர்களுடைய அந்த உடற்கூறு உடற் கட்டுக்கள் என்னை மிகவும் வசீகரித்தது. அவைகளை நான் உள்வாங்கிக் கொண்டேன். ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகு வழக்கமாக எல்லோரும் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குப் பிறகுதான் நவீன ஓவியத்தை தொடங்குவார்கள். ஆனால் நான் மரபு ஓவியங்களை செய்து கொண்டிருந்தேன். உள்ளது உள்ள படியே இருக்கின்ற அந்த மாதிரிகளைப் பார்த்து வரைந்து கொண்டிருந்த அந்த நிலையிலேயே நவீன ஓவியத்தையும் படைக்கத் தொடங்கி விட்டேன். அதற்கு காரணம் மிகமுக்கியமானதாக இருந்தது நான் கல்லூரியில் மரபு சார்ந்தும் கல்லூரியில் பெறுகின்ற அறிவை வைத்து வெளியில் அதிகமாகப் பெறுகின்ற அனுபவங்களும் நான் செய்கின்ற ஓவியங்களும் என்னை நவீன சிந்தனை நோக்கி நகர்த்தியது. அந்த வேளையிலே நான் என்னுடைய விவசாய நிலங்களில் வேலை செய்கின்ற அந்த மனிதர்களைப் பார்த்து நிறைய வரைய ஆரம்பித்தேன். அப்படி வரைய ஆரம்பித்த நிலையிலே ஒரு படைப்பாக்;கத்தை படைக்கவேண்டும். என்று நான் முடிவு செய்தபோது அந்த உடற்கட்டுக்கள் அவ் ஓவியத்தில் கொண்டு வந்தேன். அப்பொழுது அந்த உடற்கட்டுகள்; நம் மண்சார்ந்த ஒன்றாக இருந்தது. நிறையப் பேர் இன்று சொல்வார்கள் உலக அளவில் இவ் ஓவியம் காட்சிப்படுத்தப்படுகின்ற போது பல்வேறு தரப்பு மக்களும் அதைப் பார்த்து விட்டு இந்த விவசாயம் சார்ந்த தன்மை இருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். அந்தளவிற்கு அவ் உடற்கூறுகள் பேசுகிறது.

பலரும் அதை உள்வாங்கிக் கொள்கிறார்கள,; பேசுகிறார்கள், ஆனால் அவ் ஓவியங்களை நான் படைக்கின்றபொழுது இந்த தன்மையோடுதான் தொடங்கினேன.; பிறகுதான், அது மண் சார்ந்த விடயம் என நான் நினைத்தேன.; அவற்றை வளர்த்துக் கொண்டேன். அதேபோல் நிறங்களைப் பயன்படுத்துக் கொண்டேன். அதேபோல் நிறங்கனைப் பயன்படுத்தும் போது பழுப்பு நிற (டீசழறn)வர்ணங்களை நான் பயன்படுத்துகின்றேன். அதுவும் நம்முடைய நிறம் அந்நிய நிறம் அல்ல பார்வையாளர்களும் கருத்துப் பதிவு செய்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே வருகின்ற கட்டுரைகளில் கூட அதைப்பற்றி எழுதி இருக்கின்றார்கள். ஒவ்வொரு முறையும் இவ் ஓவியங்களை நான் படைக்கின்ற பொழுது இதில் கவனமாக இருப்பேன். இந்த உடற்கட்டு நிறங்கள் போன்றவற்றிலே கவனம் செலுத்துவேன். அதிக கவனம் செலுத்தி அது நவீன ஓவியமாக இருந்தாலும் சரி அதன் வெளிப்படையாக இருந்தாலும் சரி நம்முடைய தமிழ் அடையாளத்தோடு அந்த ஓவியம் இருக்க வேண்டும் என்று நான் தொடர்ந்தும் இருக்கிறேன்.

கேள்வி: உங்களுடைய ஓவியங்களில் அல்லது உங்களுடைய இரசனையில் யாருடைய பாதிப்பாவது இருக்கின்றதா?

பதில்: எனக்கு அந்த நவீன ஓவியத்தைச் செய்யத் தொடங்கிய காலத்திலே எனக்கு யாருடைய பாதிப்பும் இல்லை, பாதிப்பு என்று சொன்னால் என்னுடைய மக்கள்தான் என்னுடைய நிலத்திலே வேலை செய்து கொண்டிருந்த ஒரு தொளிலாளிதான் எனக்கு பாதிப்பு. ஏன் என்றால் அதுதான் எனக்கு மிகப்பெரிய உள் உணர்வைத் தோற்றுவித்தது. அவர்களிடம் அந்த அவ்உடற் கூறுகளைப் பெற்று அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும்.

என்று நினைக்கத் தோன்றியது அவர்களையேதான் சில நேரங்களில் மாதிரிகளாக வைத்து நான் ஓவியங்களாக வரைந்து அதை அப்படியே என் ஓவியங்களிலே பயன் படுத்தி இருக்கிறேன். அதன் பிறகுதான் நான் பிக்காசோவை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்த பொழுது இந்த உருவச்சிதைப்பு என்கின்ற நிலையிலே சில ஓவியங்களை என்னை அறியாமலே என்னுடைய ஓவியங்களில் பயன்படுத்தி வந்துள்ளேன் என்பது தெரிந்தது. அதைப்பார்த்த சிலர் பிக்காசோவைப் போன்று சில வெளிப்பாடுகள் இருப்பதாக சொன்னதின் அடிப்படையில் நான் நிறைய ஓவியங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படித்தான் அந்த பிக்காசோவினுடைய தன்மைகள் எனக்கு அவருடைய ஓவியங்களிலே பார்க்காத நிலையிலுமே என்னை அத்தன்மையோடு செய்திருக்கிறேன். என்று எனக்குப்புரிந்தது. பிறகு அவரது ஓவியங்களைப் பார்த்த பிறகும் முறையாக இன்னும் சில செழுமைகளைச் செய்வதற்கு எனக்கு அது பயன்பட்டது.

கேள்வி: ஓவியம் தொடர்பாக தமிழ் சார்ந்த ஓவியம் தொடர்பாக இளைய தலைமுறையினருக்கு ஈழத்தமிழர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்.

பதில்: ஒவியம் நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடையது. இலக்கியம் எப்படி நம்மோடு நம்முடைய வாழ்க்கையோடு தொடர்புடையதோ போராட்டம் போராட்டத்தோடு தொடர்புடையதோ அதேபோல் ஓவியமும் தொடர்புடையதாக கருத வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஒருகவிதை ஒரு சிறுகதை அல்லது நாவல் ஒரு மொழியைக் கற்று அறிந்த பிறகுதான் வெளிப்படும் ஆனால் ஓவியம் என்பது குழந்தையாக இருக்கும் பொழுதே வெளிப்படும் ஒரு வடிவம். குழந்தை பேசுகின்ற மொழியே இவ் ஓவிய மொழிதான்.

அது வெளிப்படுத்துகின்ற மொழி சுதந்திரமாக எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெளிப்படுத்துகின்ற ஒன்றாக ஓவியம் தான் இருக்கின்றது. காலப்போக்கில் வளர்ந்து வெவ்வேறு துறைக்குப் போகின்ற போது அதை மறந்து விடுகிறார்கள். அல்லது அதைத் தடுத்து விடுகிறார்கள். ஆனால் ஒரு குழந்தைக்கு முதல் மொழியாக ஓவியம் இருக்கிறது. தமிழ் என்றால் அது அனைத்து இன மொழி மக்களுக்கும் அப்படித்தான். ஆக வாழ்க்கையினுடைய ஆரம்ப தொடக்க காலத்திலேயே இவ் ஓவியம் எமக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. அப்படி இருக்கின்ற அந்த ஓவியத்தை நாம் வளர்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக ஈழத்தமிழர்கள் இந்த ஓவியம் சாரந்து நிறையச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நிறையப் படைப்பாளர்கள் உருவாக்கக்கூடிய ஒரு மண்ணாக ஈழம் இருக்கிறது. முறையான ஒரு பயிற்சியும் முறையான வழிகாட்டுதலும் இம் மண்ணிற்கு வழங்கப்பட்டால் நிறையப் படைப்பாளர்களை உருவாக்கமுடியும் என நான் நம்புகிறேன். அந்த ஒரு தன்மையை நான் உணர முடிகிறது. இந்த மண்ணிலே யாரும் வழிகாட்டுவதற்கு இல்லை என ஏக்கம் இந்த மாணவர்களிடம் இருக்கிறது மக்களிடம் இருக்கிறது. இவ் ஓவியங்களை அவர்கள் பார்த்தபின்பு எங்களிலேயே யாருமே இல்லையே என்கிற ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் நிச்சயமாக இதைவிட வலிமையாக வெளிப்படுத்தக்கூடியவர்கள் இம் மண்ணிலே தோன்றமுடியும் காரணம் மிகப் பெரிய வலியைச் சுமப்பவர்கள் இம்மண்ணிலேதான் இருக்கிறார்கள். ஆக அந்த ஒரு வழிகாட்டுதலை கொடுப்பதற்கு நாம் இன்று ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி : ஓவியம் உட்பட படைப்பாளிகளின் படைப்புகளிற்கான அங்கீகாரம் என்பது ஒரு முக்கிய சிக்கலாக இருக்கிறது. அங்கீகாரம் இல்லாமல் போகின்றபோது படைப்பாளி சோர்ந்து போகின்ற அதாவது அடுத்தகட்ட படைப்பை நோக்கி நகர்வது என்பது சிக்கலான விடயமாக இருக்கின்றது இந்த வகையில் அங்கீகாரம் என்பது எந்த வகையில் உங்களை அழுத்திச் செல்ல உதவியது நீங்கள் அங்கீகாரம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

பதில்: அங்கீகாரம் என்பதை நாம் இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது புரிந்து கொள்ளலாம். என்னுடைய ஆரம்ப காலத்திலே(எனது 19ஆவது வயதிலே) எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதோடு தமிழ்நாடு மாநில விருதும் கிடைத்தது. அதே ஆண்டில் தேசிய அளவில் இன்னொரு விருதும் எனக்குக் கிடைத்தது. அதை பெரிய அங்கீகாரமாக நான் நினைத்தேன். அடுத்த சில நாட்களிலேயே அந்த ஓவியங்கள் செய்தித்தாள்களில் இந்திய அளவில் பிரசுரமாயின அதைப்பற்றி கட்டுரைகள் வெளிவந்தன அதைப்பற்றிக் கடிதங்கள் நூற்றுக்கணக்கில் எனக்கு வந்தது.

நான் விருதிற்காக பெற்ற தொகையை விட அந்தக் கடிதங்களை அதிகமாக மதித்தேன். அந்தக்கடிதங்களை எழுதியவர்கள் சாதாரண நிலையில் இருக்கக்கூடிய மனிதர்கள் முதல் மாணவர்கள் பெண்கள் முதல் தொழிலதிபர்களாக இருக்கக் கூடியவர் வரை அக்கடிதங்களை எழுதினார்கள். உண்மையிலேயே நான் விருது கிடைத்த பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட இவ் ஓவியத்தை பத்திரிகைகளிலும் இதழ்களிலும் பார்த்த பிறகு கிடைத்த ஓரு பாராட்டு அல்லது வரவேற்பு என்பதை இட்டுத்தான் நான் பன்மடங்கு மகிழ்ந்தேன். ஏன் என்றால் சரியாக அந்த ஓவியத்தை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். விருது கிடைத்த ஆண்டிற்கு அடுத்த ஆண்டு ஈழத்து நிகழ்வுகளை வைத்து படைத்த ஓவியத்தை அனுப்பினேன.; அனுப்பிய பிறகு முதல் ஆண்டில் எந்த இடத்தில் எனக்கு மாநில விருது வழங்கினார்களோ, அதே இடத்தில் அவ்ஓவியத்தைப் புறக்கணித்தார்கள். காரணம் அந்த நடுவர் குழுவில் இருந்த மூன்று பேரில் இருவர் இந்த சிந்தனைக்கு எதிரானவர்கள். ஒருவர் இந்த சிந்தனையை ஏற்றுக்கொள்பவர் அவர் இவ் ஓவியத்திற்கும் இந்த ஆண்டு விருது தரலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இது மிகவும் ஆக்ரோசமாக இருக்கிறது என்று தடுத்திருக்கிறார்கள். அதன் பிறகு சென்ற ஆண்டு விருது பெற்ற ஓவியர் இவர் இவருடைய ஓவியத்தைப் புறக்கணிக்கமுடியாது இவ் ஓவியத்தை காட்சிக்காவது வைக்க வேண்டுமென கேட்டிருக்கிறார். அதற்க்கும் அவர்கள் மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவ் ஓவியத்தைக் காட்சிப்படுத்தினால் விருது பெற்ற ஓவியத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படும் என்ற பயம் என்று நான் பல வருடங்கள் கழித்து அந்த நடுவர் மூலம் அறிந்து கொண்டேன்.

இதனுடைய சிந்தனைகளை சில செய்திகள் அடுத்த ஆண்டே நான் நுகர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. நூற்றிற்கு மேற்பட்ட தனிநபர் கண்காட்சிகளை நடத்தி இருக்கிறோம். ஆயிரக்கணக்காண மக்கள் இக் கண்காட்சிகளைப் பார்த்திருக்கின்றாhர்கள.; இந்த மிகப் பெரிய அளவிலே அவ் ஓவியங்களை பார்த்தார்கள். தமது கருத்துக்களை பதிவாக்கியுள்ளனர். மக்கள் அவ் ஓவியங்களைப் புரிந்து கொள்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள். என்கின்றபொழுது இன்றைக்கு நான் ஒரு தெரிந்த முடிவிற்கு வந்துள்ளேன் இன்றைக்கு அல்ல பலவருடங்களுக்கு முன்பு நான் அந்த முடிவுக்கு வந்துவிட்டேன். அதாவது 1990ஆம் ஆண்டே நான் அந்த முடிவிற்கு வந்து மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று முடிவுசெய்து பலரும் கூடுகின்ற அந்த இடங்களிலே காட்சிப்படுத்துகின்றோம். அப்படிக்காட்சிப்படுத்துகின்ற பொழுது மக்களிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கின்றது.

நேர்கண்டவர்: தவபாலன்