நம் எண்ணங்களை மீட்டிசைக்கும்
வர்ணங்கள் கரைந்தவெளி்
-மு.பொ-
இன்று ஈழத்தமிழர் வாழ்க்கை என்பது புலம் பெயர்தலையும் போராட்டத்தையும் அதன்
விளைவாய் கவியும் அவலத்தையும் உள்ளடக்கிய வாழ்க்கையாகவே மாறியுள்ளது. தம் தாயகத்தை
தக்கவைப்பதற்காக போராடும் போராளிகள் ஒரு பக்கமாகவும்
அதே வேளை பேரினவாத ஆக்கிரமிப்பாலும் அதன் வழிவந்த ராணுவ அழிப்புகளாலும் அடாவடித்தனங்களாலும் தம் சொந்த மண்ணைவிட்டு அந்நிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்தும், தம் மண்ணிலேயே வேற்றிடங்களுக்கும் சிங்களப் பிரதேசங்களுக்கும் இடம் பெயர்ந்தும் சதா தம் உயிரை
கையில் பிடித்தபடி வாழ்வோடு போராடிக் கொண்டிருக்கும் தமிழ் ஈழமக்கள் ஒரு புறமாகவும் அல்லல்படுவது நமக்கு இதையே பறை சாற்றுவதாய் உள்ளது.
புலம் பெயர்ந்தும் சொந்த நாட்டிலேயே இடம் பெயர்ந்தும் வாழும் மக்களிடையே ஓர் இனந்தெரியாத துயரின் புரையோடல். அத்துயர் அவர்கள் விட்டு வந்த மண்ணையும் மக்களையும் அவர்களும் தாமும் படும் அவலத்தையும் சுற்றி மையங்கொள்கிறது.
~என்று நாம் எம் மண்ணுக்கு திரும்புவோம்? என்றெமக்கு நிம்மதி ஏற்படும்? என்ற கேள்விகளே திரும்பத் திரும்ப அவர்களைளத் துளைக்க அவர்கள் துயரில் வீழ்கின்றனர்.
இந்தப் பின்னணியில் சூழ்கொண்டு, ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் எண்ணிறந்த
கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், கட்டுரைகள் நூல்களாக அச்சடிக்கப்பட்டு மழைக்காலப்
புற்றீசல்கள் போல் வந்து விழுகின்றன. ஆனால் இவற்றில் எத்தனை தமது தரத்தைப் பேணி இலக்கியமாய் மிளிர்கின்றன?
இது முக்கியமான கேள்வி.
"இலக்கியம்" என்று தேங்கிக் கிடக்கும் இந்தச் சேற்று நீர்ப்பரப்பில், திடீரென மொட்டவிழ்த்து
நீரின்மேல் தலை நீட்டும் தாமரையாய் ஒன்று இரண்டே நிகழ்கின்றன.
அத்தகைய ஒரு நிகழ்த்தலை அல்லது மலர்த்தலை தா.பாலகணேசனின் "வர்ணங்கள் கரைந்தவெளிறு செய்துள்ளது என்றே சொல்லவேண்டும்.
நான் ஏற்கனவே குறிப்பிட்ட புலம் பெயர்ந்து வாழும் மக்களின் துயரத்தை ஏனைய
கவிஞர்கள் போலல்லாது. கட்டங்கட்டமாக, அதன் பல்வகைப் பரிணாமங்களை, பரிணாம வளர்ச்சியை ஓர் கருத்தியல் பின்னணியில் நம்முன் வைக்கிறது - வர்ணங்கள் கரைந்த வெளி கவிதைத் தொகுப்பு.
புலம் பெயர்ந்த ஒருவன் முதலில் தான் விட்டு வந்த
"கத்தும் கடலை
காற்றுப் பெருவெளியை
கரும்பனைக் கூடலை"
நினைத்து மனம் ஏங்குகிறான். இன்னும் அவனது அப்பாட
அப்பா நட்ட முற்றத்து வேம்பும், அவன் காதல் சின்னம் பொறித்த பூவரசும் அவன் நினைவில் வர, அவன்
பொங்கும் மனதில் எழுங்காட்சிகள், யாழ்ப்பாணத்து கிராமங்களின் அழகையும் அங்கு நிகழ்ந்த துயரங்களையும் எம்முன் அள்ளி வருகின்றன.
நானும் என் பூவரசும் விதை இப்படி எம்மோடு உரையாடுகிறது.
"கன்னங்கரிய இருளில்
புதைந்த பூவரசே
காற்றோடு நீ பேசுகிற
கதைதான் என்ன?......
கனவுகளில் மீதும்
காற்றாடும் சிறு பொழுது தன்னிலும்
ஏங்கிட வைக்கின்ற
காதலை
என் நெஞ்சுள்
எட்டடிப் புதைத்தாய்?
என்னவளின் முதல் எழுத்தும்
என் பெயரின் முதல் எழுத்தும்
உன் முதுகில் பொறித்;தேன்
வாழி என்றாய்!
தாழ்ந்த நின் சடை
பூமியின் நிழலாய் விழ,
தணிந்த மாலைப் பொழுதினில்
முதுகைச் சாய்த்து
முடிவிலா வெளியைப் பற்றிக்
கலந்திருந்த உறவின் பிரிவால்
உழல்வது நீ மட்டுமா? என்று
இங்கே இக் கவிதை யாழ்பாணத்தின் அழகை சொல்லி வருகிறதென்றால் தூங்காத இரவு அதன் துயரத்தை அள்ளி வருகிறது.
"காற்று கரும்பனைகளை
அசைந்து உயிர்ப்பித்தபடி
சூரியனும் முகஞ்சிவந்து
சீற்றத்தோடு
வேலிக் கதியாலிருந்த
துயர் உரைக்கும் ஒற்றைக் காகம்
அண்ணனின் சைக்கிள்
ஈச்சமரத்துப் பற்றைக்குள்
முட்கள் நெருடியபடி
இறுதிக் கணத்திலும்
ஓங்கியெழும் எண்ணங் கொண்டு அவன்
கைகள் தாய் மண்ணை இறுகப் பற்றியபடி
காற்றில் மந்தமாக ஒலித்த
துப்பாக்கி சுடு குரல்
வீட்டின் சாளரங்களையும் உதைத்தது.
விசாரணைக்கென
அழைத்துச் செல்லப்பட்ட
அப்பாவின் சாய்மனைக் கதிரை
வீட்டுத் திண்ணையில்
தனித்துக் கிடந்தது.
முகரித்தழும்
திண்ணை முற்றத்தில்
ஏற்றிவைத்த விளக்கின் சுடர்காத்து
தூங்காத இரவுகளுடன் அம்மா......... இன்னும்
நம்பிக்கையோடு காத்திருக்கிறாள்."
போர்க்கால தமிழீழ நிலவரத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவருகிறது இக்கவிதை. எத்தனையோ
பக்கங்களில் விபரிக்கப்படும் சிறுகதையால் கூட சொல்லமுடியாத விஷயத்தை, இச் சிறுகதை மிகத் தத்தரூபமாக எடுத்தியம்பிச் செல்கிறது.
இவ்வாறு தான் விட்டுவந்த மண்ணின் துயர உதைப்புகளை, அங்கொன்றாய் இங்கொன்றாய்
மீட்டுவரும். இத்தொகுப்பில் உள்ள 37 கவிதைகளும், வித்தியாசமான முறையில் ஒன்றுக்கொன்று
தொடர்புடையனவாக, ஒன்று காட்ட முயன்றதை அடுத்து வரும் கவிதை இன்னோர் கோணத்தில் புதுமைப்படுத்துவதும் அதற்கடுத்து வரும் கவிதை வேறோரு பரிமாணத்தில் முன்வந்தவற்றை விளக்கிச் செல்வதுமாக, ஒரு குறு நாடக முகந்தரித்து நிற்கின்றன. அதாவது புலம்பெயர்ந்து வந்த ஈழத்து மனிதனொருவன் மேற்குலகின் யந்திர வாழ்க்கையில் சிக்கியவாறே, அதிலிருந்து விடு பட முடியாத
நிலையில் தன் தாய்நாட்டையும் தன் கிராமத்தையும் சிறு வயதில் அங்கு வாழ்ந்தனுபவித்த இன்பங்களையும் மீட்டுப்பார்த்து அதை ஒரு தங்குமிடமாக்கி ஒதுங்கியவாறே, இன்றுள்ள துயரங்கெளுக்கெல்லாம் காரணத்தைத் தேடுகிறான். அங்கே அவனுக்கு இனம், மதம், நிறம், சாதி, அந்தஸ்து என்னும் வர்ணப்பிரிவுகளே இத்தனைக்கும் காரணமாகப் படுகிறது.
ஆகவே இந்த வர்ணப்பிரிவுகளை உடைத்து தெறிந்து வர்ணங்கள் கரைந்த வெளியில் சஞ்சரிக்க அவாவுகிறான். அதே வேளை ஒவ்வோர் மக்கள் குழுக்களுக்கும் உரித்தான மானிட நேயத்தை
வலுப்படுத்தும் உயர்ந்த மனித விழுமியங்களை, கலை, பண்பாடுகள் என்னும் வர்ணங்களின் முற்போக்கு அம்சத்தையும் பேணவிரும்புகிறான். இங்கே "வர்ணங்கள்" என்ற வார்த்தை, பிற்போக்கு - முற்போக்கு ஆகிய இரட்டைத் தன்மைகளை வெளிப்படுத்துவனவாகப் பாவிக்கப்படுவது அழகு தருகிறது.
இதோ அவரின் முதல் கவிதையான "யந்திரன்" எடுத்த எடுப்பிலேயே புலம் பெயர் மக்களைச்
சூழ்ந்துள்ள யந்திர "கலாசாரத்தை" மிக அழகாக வெளிப்படுத்துகிறது.
வாழ்வின் நற்கனித் தோட்டத்திலிருந்து
துரத்தின நச்சுச் சர்ப்பங்கள்
நாம் யந்திரராயப் பிறந்தோம்.
மேற்குலகின் பண்பாட்டு விழுமியங்களைத் தழுவிய சொற்களைக் கொண்டே புலம் பெயர்ந்த ஈழத்தமிழரின் அவல நிலையை விளக்கிச் செல்கிறார் கவிஞர். சொந்த தாயகத்தை நற்கனித் தோட்டமாக உருவகித்த கவிஞர், அவர்களை அங்கிருந்து விரட்டிய இனவாதத்தை, நச்சு சர்ப்பமாகவே
மிகுந்த பொருத்தப்பாட்டுடன் உருவகிக்கிறார். இன்னும் மேலே சென்று. இரும்பின் துண்டொன்றாலா
என்னை இறைவன் படைத்திருக்கக் கூடும்
என் விலா எலும்புருவியா இயந்திரனி பிறந்திருக்கக் கூடும்
ஏதும் அறிகிலேன் பராபரமே என்று அங்கலாய்கிறார்.
இங்கே, மேற்குலகிற்கு புலம்பெயர்ந்தவன் யந்திர வாழ்க்கைக்குள் சிக்கப்படவில்லை,
யந்திரமாகவே மாறிவிட்டான் என்பதே சுட்டப்படுகிறது. அதனால்தான் "இரும்பின் துண்டொன்றாலா எனை இறைவன் படைத்திருக்கக் கூடும் " என்றும் "என் விலா எலும்புருவியா இயந்திரனி பிறந்திருக்கக் கூடும்".ன்றும் கவிஞர் கேட்கிறார். யந்திர வாழ்க்கை இவனையே இரும்பு கொண்டு செய்த யந்திரமாக
மாற்றிவிட்டது. இவன் யந்திரமென்றால் இவனது துணை - இவனது விலா எழும்புருவிச் செய்யப்பட்ட துணை - யந்திரனியும் யந்திரந்தானே? உண்மை. ஆனால் கவிஞர் இத்துடன் நிற்கவில்லை.
பாம்பின் வாய்த்தவளை போலும்
இயந்திரப் பற்களிடை இருக்குண்டோம் பார்
என்று அடுத்தவரிகள்
இதன் காட்சிப் பரிமாணத்தை இன்னும் அதிகரிக்கிறது. இப்போ மேற்குலகமே தனது யந்திரமயப்பட்ட
நாகரிகத்துள் வீழ்ந்து கிடக்கும் அவலத்தை.
இதென்னயிது?
யந்திரப் பிறப்பெடுத்த
இந்த மனிதனையும்
சர்ப்பமா மோசம் செய்தது, சர்வேசா?
என்று கூறி யந்திரமயமாகிப்போன இந்த மனித உருவாக்கத்துக்கும் பழைய இதிகாச சர்பந்தானா காரணம்
என ஓர் எள்ளலோடு கேட்கிறார் கவிஞர். மொத்தத்தில் புலம் பெயர்ந்த அகதியாக இருந்தாலும் சரி
இந்த அகதிகளையெல்லாம் மேய்க்கும் மேற்குலக எஐமான்களாய் இருந்தாலும் சரி, யந்திர வாழ்க்கை
என்னும் சர்ப்பத்தின் வாய்ப்பட்ட தவளையின் அவலத்துக்குள்ளே வீழ்கின்றனர்.
"நிலச் சுரங்க ஓவியங்கள்" என்னும் கவிதை, மேற்குலக நகரையும் அங்கு மனித வாழ்க்கையை உறைய வைக்கும் யந்திரத்தன்மையும் மிக நேர்த்தியாக விபரிக்கிறது.
"சூரியனைச் சாப்பிட்டு விட்டு
தினவெடுக்கிறது
அடங்கித் துயிலாப் பேய் நகர்.
அசுரப்பசி எடுத்து நிற்கும்
இருளின் திடலென
எரியும் சுரங்கத் தீவாய்
பகல், இரவு உணவு விடுதிகள் ஒவ்வொன்றும்.
பந்தயக் குதிரைகள் போல்
அடிமைச் சுரங்கத் திடலில்
மனிதர்கள் எனப்படுவோர் ஓடுவர்.
இருளின் திட்டிறங்கிச் சென்று
எல்லைக் கயிறு பிடிக்கப்
போவாரைக் காணவில்லை
இரவின் மீட்டற் சுதியுமறியாது
நாற்பதையுங் கூட நாமிழந்து போகலாம்.
உயிர்களை இழந்த ஓவிய நிழல்கள்
கற்குகைப் படிவென உறைந்து போகலாம்."
இது சூரியனைச் சாப்பிட்டு விட்டு தினவெடுக்கிற~ மேற்குலகப் பேய் நகர் ஒன்றின் காட்சி. ஒவ்வொரு காட்சி விபரிப்பிலும் அதன் பிசாசுத் தன்மை வெளிவருகிறது.
"அசுரப்பசி எடுத்து நிற்கும்
இருளின் திடலென
எரியும் சுரங்கத் தீவாய்
பகல், இரவு உணவு விடுதிகள்"
என்று கூறிச் செல்லும் கவிஞர், அடுத்த காட்சியில்
பந்தயக் குதிரைகள் போல்
அடிமைச் சுரங்கத் திடலில்
மனிதர் எனப்படுவோர் ஓடுவர் என்று இன்றைய மேற்குலக நாகரிகச் சுழலில் அமுங்குண்டு "பந்தயக் குதிரைகள் போல்" யந்திரமாக இயங்கும் மனிதர் பற்றிச் சொல்கிறார். எவ்வாறு மேட்டுக் குடிகளினதும், சூதாடிகளினதும் வேட்கையின் பரிதாபத்துக்குரிய குறியீடுகளாய் பந்தயக் குதிரைகள் நிற்கின்றனவோ, அவ்வாறே வேலைப்பழுவில் சிக்குண்ட மக்கள், யந்திரங்களாய் "நான் முந்தி, நீ முந்தி"
என வேலைகளுக்காக ஓடுகின்றனர். என்பதை இது மிக அழகுற எடுத்துக்காட்டுகிறது.
ரி. எஸ். எலியட் தனது "தரிசு நிலத்தில்" காட்டும் மேற்குலக நகரின் வெற்றுபடாடோபம் இங்கே நம் தமிழ் கவிதையிலும் மிக லாகவத்தோடு வந்துவிழுகிறது.
இந்நிலைப்பட்ட புலம் பெயர்ந்த, அகதி வாழ்க்கை மேற்கொள்ளும் மனிதனுக்கு ஓய்வெங்கே, நிம்மதி எங்கே ஏற்படப் போகிறது?அவன் ஆசையுடன் அணைக்கும் பிள்ளைகள் கூட அவனை யந்திரமாகக் காணும் போது அவனுக்கு எங்கே நிம்மதி ஏற்படப் போகிறது? இதோ "அப்பாவின் ஓவியம்" அதைத்தான் நமக்கு அறிவுறுத்துகிறது.
"
வர்ணச் சோக்கட்டிகளால்
குழந்தை ஓவியமொன்று வரைந்திருந்தான்
அவனது தந்தையின் பிறந்த நாளின் பரிசாக.
ஒடுக்கப்பட்டவனுக்கான ஆடையை
வாணங்களினால் செய்த அந்தச் சின்னக்கையை
தாய் முத்தமிட்டாள்.
அவ்வோவியத்தில் மூன்று கால்களும்
இரண்டு இதயமும் இருந்தன .............
முகமற்றவனாகவும்
இயந்திரமானவனாகவும் அவன் வரைந்திருந்தான்
ஓவியத்தின் அடியின் எனது அப்பா எனத்தலைப்பிட்டிருந்தான்."
இந்நிலையில் அவனுக்கு எங்கே நிம்மதி வரப்போகிறது?
அதனால் அவன் மீண்டும் மீண்டும் பழைய ஊர்நினைவுகளில் தொங்கியவாறு சஞ்சரிக்கிறான் "அகதியின் கடிதம்" கவிதை நமக்கு அதைத்தான் சொல்கிறது.
எத்தனை நாளைக்கு தானம்மா
சவாரி மாடென நிற்பது?
நுகத்தடி கண்டிய காயங்கள்
கழுத்தில் மாலைபோல்
மேலே "பந்தயக் குதிரைகள்ற" எனக் குறிக்கப்பட்ட அவனது வாழ்க்கை இங்கே "சவாரி மாடாக" காட்டப்படுகிறது. ஊரின் நினைவு அவனுக்கு ஊருக்கேற்ற ஒப்புவமைகளையே கொண்டுவந்து அவன் சொல்லவந்தவற்றுக்கு வலுவேற்றுகிறது.
வீட்டு நினைவு அவனுக்கு தன்னோடு அகதி வாழ்கைவாழும் தன் குழந்தைகளைப்பற்றி எண்ணவைக்கிறது. அவன் தன் குழந்தைகளுக்கு ஊரில் உதிக்கும் சூரியனைக் காட்டுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால் காட்டமுடிகிறதில்ல. ஊரில் அவன் பார்த்த சூரியனைக் காட்ட முடியுமா ? அந்த அழகை அவர்களுக்கு அவனால் அள்ளிக் கொடுக்க முடியுமா?
"சேற்றுக்குளத்திலே கிடந்து
கும்மிருட்டு கலைய
மலரும் பொற்றாமரை போலும்
மகிழ்வினை எப்படி பிள்ளைகளுக்கு
பூத்துக்காட்டுவது?
வானுக்கும் பூமிக்கும் நடுவே
வலியகருங்கோடாய் நிற்கும்
பனையின் உச்சியில் செந்தனாலாய் சிரிக்கும்
சூரியனைப் பிரிந்தகதையை
பிள்ளைகளுக்கு எந்த
மூகத்தோடு சொல்லுவேன்...? என்று
அவன் மனம் அலைபாய்கிறது. "
குளத்தில் கும்மிருட்டுக் கலைய மலரும் பொற்றாமரையையும் பனையின் உச்சியில் செந்தனலாய் சிரிக்கும் சூரியனையும் அவன் ~பூத்துக~; காட்ட முடியுமா? அவன் மனம் துயரில் வீழ்கிறது.
ஏன் இந்த கொடுமை?
அவர்களை அகதியாய் திரிகவென யார் சபித்தார்?
யார் செய்த பாவம் இது?
எல்லாவற்றுக்கும் காரணம் மனிதனே தான் நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டு விட்டதாகப் பீற்றிக்கொள்ளும் மனிதன் இனவாதம், நிறவாதம், மதவெறி, சாதியம், சுரண்டல்,
பதவிமோகம் என்று தனக்குள் இருந்து வெளிக் கிளம்பும் சாத்தானின் பிடியிலிருந்து தன்னை மீட்டெடுக்காத வரை இதுதான் தொடரப்போகிறது. நிம்மதி எவருக்கும் கிட்டப்போவதில்லை. இங்கே தான் கவிஞர் வர்ணங்கள் கரைந்த வெளியை கூவியழைக்கிறார். தான் இழந்த கிராம வாழ்க்கைக்காக ஏங்கியவர், தன் தாயகம் அடிமைப்பட்டுக் கிடப்பதையிட்டும் துன்பத்தில் வீழ்ந்தவர், தன் புலம் பெயர்ந்த வாழ்க்கை யந்திரப்பட்டுப் போனதையிட்டு துயருற்றவர், இவற்றுக்கெல்லாம் அடியோடிய காரணமாக நிற்கும், சமதர்மத்துக்கெதிரான மனிதனுக்குள்ளே இருந்து கிளம்பும் "வாதங்களை" கண்டு கொண்டு அவற்றின் களைதலிலேயே
"பூமிக்கனியின் சாறருந்திப்
பிழைக்க வழி ஏற்படும" என்று
அவர் நினைக்கும் போது அவர் சர்வதேசியாக வரிகிறார்.
இதோ வர்ணங்கள் கரைந்த வெளியில் அவர் இப்படிச் சொல்கிறார் :
"வன்முறைப் பேய்தாங்கி
கீழே விழுந்து கிடக்கிற மனிதனின்
தீரா அழுகையையும்
தீரா சோகத்தையும்"
ஓவியன் தன் கலைவர்ணக் குழையலிட்டுக் காட்டுகிறான்.
ஏன் இவற்றைக் காட்டுகிறான்? நிச்சயமாக இந்தவர்ணப் பிரிவுகளைக் கடப்பதற்கே. அதனால்தான்
"தீர்ந்த வெற்றுக்கலமாய்
நிற்கும் ஓவிய மனதுள்
தீரா வெளியின் பாய்ச்சல் நிகழும" என்று கவிஞர், வர்ணங்கள் தீர்ந்த, ஏற்றத் தாழ்வுகள் இல்லாத வெளியை அவாவி நிற்கிறார். அடுத்து வரும் ~இருள் வெளி~ என்னும் கவிதை இதை மேலும் தெளிவுபடுத்தும்
"ஏன் அம்மா பூமி மௌனமாய் இருக்கிறது.
சதா அவனின் கேள்வி
என்னைத் தொளையிடும்
வர்ணங்கள் கரைந்த வெளியின்
வசந்த காலத்தை
வரவேற்கத்தான் பூமி
நீண்ட நாளாய்
பெருமனதோடு காத்திருக்கிறது என்று
சொல்லி வைத்தேன்" என்று தன் பிள்ளைகளுக்கு சொல்லும் அவன்
~ஏன் அப்பா
எல்லோரும் சண்டை செய்கிறார்கள்? " என்ற தன் பிள்ளைகளின் கேள்விக்கு
~மனிதர்களுள் வர்ணாச்சிரமப் பிசாசுகளை
யாரோ ஏவி விடுகிறார்கள்
என்ற பேய்களின் கதையைச் சொல்ல நினைத்தேன்
மதம் பிடித்த யானையின் பிளிறல் போன்ற படிமக் கதை
குழந்தைகளின் தூக்கத்தைக் கெடுத்து விடுமோ
என்ற பயத்தில்
அதையா, சும்மா என்றேன்." என்று சொல்லிவரும் கவிஞர் தனக்குள் பின்வருமாறு சொல்லி முடிக்கிறார்.
"மனிதர்கள் எனப்படுவோர் இன்னும்
தங்களது சொர்க்கம் பற்றிய கனவில்
பூமியை நரகமாகவே ஆக்கி விட்டார்கள்
அவர்கள் குரூரமாய் எழுந்து
வர்ணங்களால் வாழ்க்கைக்கு சமாதி கட்டுகிறார்கள்
பூமி குருதியில் தெப்பமாய் நனைய
வர்ணங்களால் கோடுகள் கிழிக்கிறார்கள்.
இவ்வாறு வர்ணங்களை வவ்வேறு கோணங்களில் உருமாற்றிக் காட்டிப் போகும் கவிஞர் "இசைச் சுழல்" என்னும் கவிதையில்
"குழந்தையின் மகிழ்ச்சியைக் கொட்டித் துளிர்க்கிறது பூமி
மெல்லிய வர்ணப் பட்டாடை சூடி
மழலை பொழிகிறது"
என்று சொல்லும் போது கலையின் உன்னத நிலையை வர்ணங்களில் காட்டும் அவர் இறுதியில் அக்கவிதையை முடிக்கும் போது,
"காலமும் வெளியும்
ஒரு புல்லாங் குழலாய் இசைக்கிறது
பின்
எல்லா வர்ணங்களும் சிந்திக் கரையும்
மரங்களின் கீழ்
பயணம் ஒன்றிற்காக
காத்திருக்கின்ற முதியவரின் இடுப்பில் போய்ச் செருகி
இளைப்பாறுகிறது
இன்னுமொரு கால இசைப்பிற்காக"
என்று
எல்லா வர்ணங்களும் சிந்திக் கரையும் நிலையில் பயணம் ஒன்றிற்காக காத்திருக்கிறார்.
அந்தப் பயணம் எப்படிப்பட்டதாக அமையும் என்பதை நாம் யூகிக்கலாம்.
அந்தப் பயணம் அவர் அவாவி நிற்கும் வர்ணங்கள் கரைந்த அடுத்த இசைப்பை
நோக்கியதாக அமையாதா? இதோ அவர் "ரயில் பயணம்" கவிதை அதை நோக்கித் தான் ஓடுகிறது.
"கட கட கட கட கட கட
இருண்ட கரும் கோட்டையை
தகர்த்துக் கொண்டு
தாவியே ஓடுது" என்று தொடங்கும் இக் கவிதை மனிதனால் உண்டாக்கப் பட்ட அத்தனை சுயநலக் கோட்டைகளையும் தகர்த்துக் கொண்டு ஓடத்தான் போகிறது.
தா.பாலகணேசனின் "வர்ணங்கள் கரைந்த வெளி" தனித்துவமான கவிதைத் தொகுப்பென்பதில் ஐயமில்லை. இயல், இசை, நாடகம் என்னும் தமிழின் முப் பிரிவுகளையும் தன் கவிதைகள் மூலம் மீட்டியும் கோடி காட்டியும் செல்வதன் மூலம்
இத் தொகுப்பிற்கு ஆழத்தையும் தனித்துவத்தையும் ஏற்படுத்துகிறார்.
பல கவிதைகள் நாடகத் தன்மை கொண்டு நிற்கின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் நடனப் பாடல், நாடகன், கும்மிப்பாட்டு, அகதிக் குழந்தைகளும் சூரியனும், ரயில் பயணம் போன்ற கவிதைகள் இதற்குதாரணம்.
பாலகணேசன் கவிஞன் மட்டுமல்ல நாடகாசிரியனும், நாவலாசிரியனும் கூட இவர் முதன் முதலில் நாவலாசிரியனாகவே அறியப்பட்டவர். இவரது இருபது வருடங்களுக்கு முன்
வெளிவந்த "விடியலுக்கு முந்திய மரணங்கள்" எனும் நாவல், களத்தில் நின்ற ஒருவனின்
போர் அனுபவங்களின் வார்ப்பாக வந்த கலைத்துவமான படைப்பு என்று பலராலும் பாராட்டப்பட்டதாகும். எழுதியவரின் பெயர் இன்றி வெளிவந்த அந் நாவல் இன்று எழுதியவர்
யாரென்று அறியப்படும் போது அதன் கலைக் கனதிக்குரிய காரணம் உணரப் படுகிறது
போர்க் காலச் சூழலில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவே. அவ்வாறே இப்போது வெளிவரும் "வர்ணங்கள் கரைந்த வெளி" போர்க் காலச் சூழலையும், புலம் பெயர்தலையும்,
அங்குள்ள மனிதநேயம் வரண்ட யந்திர வாழ்க்கையையும் இவற்றுக்கெல்லாம் காரணமான
மனிதருள் குடிகொண்டிருக்கும் பல்வகைப்பட்ட ஆதிக்க வெறியையும் இணைத்துக் காட்டும்
முதல் கவிதை நூலாக இது நிற்கிறது. கவிதை நூலைத் தந்த கவிஞருக்கு எமது வாழ்த்துக்கள்.
|
|