
ஆழிப்பேரலையிற்குப் பின்னான நடவடிக்கை முகாமைத்துவ கட்டமைப்புக்கான (P - TOMS) புரிந்துணர்வு உடன்பாடானது சிறீலங்கா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்டுவிட்டது. நீண்ட காலதாமதத்திற்கும் - இழுபறி நிறைந்த திரைமறைவுப் பேச்சுக்களுக்கும், பகிரங்க தேசியவாத பிரகடனங்களுக்கும் மத்தியில் இந்த மனிதாபிமானப் பணிகளுக்கான கட்டமைப்பு கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் தீவிர ஆதரவையும், புலிகளின் சம்மதத்தையும் பெற்ற இந்த உடன்பாடானது சிங்கள தேசியவாத அமைப்பினுள் குழப்பத்தையும், அதன் தலைமைகளினுள் இழுபறிச் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
வெறும் மனிதாபிமான நிர்வாக கட்டமைப்புடன் தொடர்புபட்ட இந்த விடயத்திற்கு ஏன் இத்தனை எதிர்ப்பு?
இந்தகைய தேசியவாத எதிர்ப்புக்கள் தமிழீழ மக்களுக்கு பரீட்சயமானவையாயினும் இலங்கைத்தீவின் சூழல்பற்றிய ஆழமான பார்வையில்லாத பெரும்பான்மையான அனைத்துலக தரப்பிற்கு இது வியப்பையும், விரக்தியையும் கொடுத்திருக்கும். நீண்டகாலப் போர் அழிவுகளையும், பொருண்மியச் சுமைகளையும் சுமக்கும் சிங்கள சிறீலங்கா வெறும் மனிதாபிமானக் கட்டமைப்புக்குக் கூட எதிர்ப்பினை தெரிவிப்பது பரீட்சயமற்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டுவது இயல்பானதே.
எனினும், சிங்கள தேசியவாதத்தின் அகப்புற இயல்பு பற்றிய பார்வை கொண்டவர்களுக்கு சிங்கள தேசியவாதத்தின் இந்த கூக்குரலை புரிந்து கொள்ள முடியும். இந்த கூக்குரலுக்குப் பின்னால் உள்ள வியூக நோக்கினையும் (Strategic Concern) புரிந்து கொள்ள முடியும்.
இலங்கைத்தீவின் இனச்சிக்கலினை ||சிறுபான்மை|| தமிழ் சமூகத்தின் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு நிர்ப்பந்தமாகவே சிங்கள தேசியவாதம் புரிந்து வைத்துள்ளது. பௌத்த சிங்கள தேசியவாத சிந்தனைகளும், வரலாறுபற்றிய தப்பிதமான கருத்துக்களும் நிறைந்த இந்த உட்கிடக்கையை முன்னாள் சனதிபதி வீரதுங்காவின் |ஆலமரத்தில் படர்ந்துள்ள கொடி| என்ற உவமையும், சந்திரிகா தென்னாபிரிக்காவில் தெரிவித்த தமிழரின் வருகை பற்றிய கொச்சைப்படுத்தப்பட்ட விபரிக்களும் வெளிப்படுத்தின.
இடதுசாரிகளாகவும், வலதுசாரிகளாகவும், தராளவாதிகளாகவும் பிரிந்து நின்றாலும் சிங்கள தேசியவாதிகள் வடக்குக்கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசிய இனத்தின் (சிறுபான்மை என்கின்ற சொற்பதம் முற்றிலும் தவறானது) தேசியத்தையும், உரிமைகளையும் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, இந்தச் சிந்தனைகளை சிங்கள தேசியவாதம் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கின்றது. போர்நிறுத்த உடன்பாட்டில் கையொப்பமிட்டு தன்னை உயர்வான சிங்களத் தலைவனாக வெளிக்காட்டிட முற்பட்ட ரணில் விக்கிரமசிங்க கண்டியில் வைத்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழர் தாயகம் என்கின்ற கோட்பாட்டை பகிரங்கமாக நிராகரித்தமையை எவரும் மறந்திருக்க முடியாது. வடக்குக்கிழக்கு பிராந்தியத்தின் தற்காலிக இணைப்பை பிரிப்பதற்கான பிரேரணைகளை சந்திரிகா காலத்திற்குக் காலம் பரிசீலித்து வந்துள்ளார்.
அவர்களின் சிந்தனைப் புலத்தினுள் ஒரு மாகாணசபை தீர்வே அதிகபட்சமான உரிமைகளைக் கொண்டதாகும். அதற்கு மேல் சிந்திக்கும் அரசியல் விசாலம் அந்த சிங்கள தேசியவாதத்தினுள் முளைவிடமைக்கு பலவித சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணிகள் உண்டு.
இத்தகைய பின்புலத்தினுள் தமிழர்களின் ஆயதம் தரித்த எதிர்ப்பியக்கத்தின் வளர்ச்சி தாக்கம் செலுத்தியது. போர்நிறுத்த உடன்பாடு, பேச்சுவார்த்தைகள் மற்றும் சர்வதேச தரப்புகளுக்கும் தமிழர் தலைமைகளுக்குமிடையேயான தொடர்பாடல்கள் என்பன சிங்கள தேசியவாதத்தின் இறைமை பற்றிய சிந்தனைகளை மிகுதியாக வேதனைப்படுத்தின. ஆயினும், வளர்ச்சிகண்ட ஆயுத எதிர்ப்பியக்கம் காரணமாக விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்த சூழல் சிங்களதேசியவாதிகளுக்கு ஏற்பட்டது.
இந்த சமரசம் தமிழ்தேசியத்தினை மதித்து உரிமைகளைப் பகிரும் எண்ணத்தின் அடிப்படையில் தோற்றம்பெறவில்லை. மாறாக, ஒருவித வியூகவகுப்பின் வெளிப்பாடாக (Strategic Concern) தோன்றியது.
தமிழர்களின் ஆயுத எதிர்ப்பியக்கத்தினை வெற்றிகொள்வதற்கான புதிய வியூகங்களை சிங்கள தேசியவாதம் தேடியது. இந்த தேடல்களுக்காக பெரும் இராஐதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்கள் மற்றும் சிந்தனைகளுடன் தனது சிந்தனைகளை பொருத்திப் பார்க்க முற்பட்டது. அமெரிக்கா, சீனா போன்ற முரண்படும் அனைத்துலக தரப்புகளுடன் தனித்தனிக் காரணங்களைக் கூறித் தன்னை இணைத்துப் பார்க்க முற்பட்டது. பயங்கரவாதம் போன்ற சர்வதேசப் பொதுக்காரணிகளின் பின்னால் போய் பதுங்கிக் கொள்ள முயன்றது. புலிகளையும், தமிழர்களையும் பிரித்துப் பார்ப்பது போன்று பாவனை பண்ணியது. தமிழர் தரப்புக்கு மாற்றீடான புதிய தலைமையைக் கொழும்பில் வைத்து உருவாக்குமொரு ஒன்றிணைந்த சதி முயற்சிகளில் ஈடுபட்டது. தமிழர் தரப்புடனான நேரிடையான போரை நிறுத்திக் கொண்டு நீண்டகால நோக்கும், சிந்தனையும் கொண்ட சர்வதேசப் பாதுகாப்பு வலையைப் (iவெநசயெவழையெட ளயகநவல நெவ) உருவாக்கிட ரணில் விக்கிரமசிங்க - மிலிந்த முறகொட முன்னிறுத்திய விபரிப்புக்களை உற்றுப் பார்ப்பது முக்கியமானது. அதேபோன்று புலிகளுக்கு எதிரான சந்திரிகா அரசு நடாத்தும் நிழல்போரும் அவதானிப்புக்குரியது.

மறுபுறம், இந்தப் புதியவியூக வகுப்புக்கள் ஏற்படுத்தும் தவிர்க்க முடியாத இடைவெளிகள் ஊடாக தமிழர்களின் தேசிய விடுதலைப் போர் சர்வதேச அங்கீகாரத்தையோ, ஏற்றுக்கொள்கையையோ எட்டிவிடக் கூடாது என்பதில் சிங்களத் தேசியவாதம் தீவிரம் காட்டியது. தாயகக் கோட்பாட்டை ரணில் முற்கூட்டியே நிராகரித்தமையும், இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கு எதிரான சந்திரிகாவின் போர்கொடியும் இத்தகைய வகைப்பட்டது.
இந்த வியூகத்தின் நோக்கினை தெளிவாகப் புரிந்து கொண்ட தலைமை தமிழர்களிடமிருந்தது. தமிழீழ தேசிய தலைவர் தெளிவாகவே காய்களை நகர்த்தினார். ஒருபுறம், போரில் பெற்ற வெற்றிகளை விட்டுக் கொடுக்காத எல்லைக் கோட்டைப் போட்டுக் கொண்டு சிங்கள தேசியவாத்துடன் இராஐதந்திரரீதியில் மோதினார்.
2003ம் ஆண்டு வாசிங்டனில் நடந்த இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளின் கூட்டத்திற்குப் புலிகள் அழைக்கப்படவில்லை. இது அனைத்துத்தரப்பும் ஏற்றுக்கொண்ட சமநிலை நிலைப்பாடுகளுக்கு முரணானது. அதுவரை மென்மையாக நகர்ந்த பிரபாகரன் தீர்க்கமான முடிவினை எடுத்தார். நேரடியான பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டது. டோக்கியோவில் இடம்பெற்ற உதவிவழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்கவில்லை. இதனால் அதன் சமச்சீரில்லாத பிரகடனங்களுக்கும் புலிகள் பொறுப்பாளிகள் அல்ல என்பதை பிரபாகரன் கோடிட்டுக் காட்டினார். இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைபு புலிகளினால் 2003 கடைசிப்பகுதியில் முன்வைக்கப்பட்டது. இதுவொரு முக்கியமானதொரு வரலாற்று ஆவணமாக வெளிவந்தது.
இந்த ஆவணம் தமிழர்களின் தேசிய சுயநிர்ணய கோட்பாடு, தேசிய இறைமை மற்றும் தமிழ் மக்கள் போரினால் இழந்து பெற்ற வெற்றிகளின் தளத்தில் நின்று எழுதப்பட்டது என்பதை முதற்பார்வையில் அனைவரும் புர்pந்து கொண்டனர். ஆனால், இதன் பின்னால் பிரபாகரன் நகர்த்திய காய் மிகநுட்பமானது. சிங்களம் புதிதாக வகுத்துச் செயற்பட்ட வியூகத்திற்கு வைக்கப்பட்ட பொறியாக அது விளங்கியது. தமிழர்களின் அடிப்படையான கோட்பாடுகளை அங்கீகரிக்காது சர்வதேச வலைவிரிப்புக்குள் தமிழர்களை வீழ்ந்த முனைந்த சிங்களத்தின் தலைமைகளுக்கு புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான வரைவு சவாலாக விளங்கியது. இதனால் சிங்களத்தின் நவீனவியூகத்திற்கு தலைமையேற்ற ரணில் விக்கிரமசிங்க அரங்கிலிருந்து அப்புறப்படுத்தப்பட சந்திரிகா விடயத்தைக் கையிலெடுத்தார். கடும்தேசியவாத போக்கும் - தனக்கான நிகழ்ச்சித்திட்டமும் கொண்ட Nஐவிபியும் சந்திரிகாவுடன் இணைந்து தலைமைக்கு வந்தது.
புலிகள் தொடர்ந்தும் இராஐதந்திர நெருக்குதலைக் கொடுத்தனர். இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவின் அடிப்படையில் பேசவருமாறு நெருக்குவாரம் செய்தனர். இது ஒரு அரசியல் இராஐதந்திரப் போராக வலுவுடன் புலிகளால் முன்னெடுக்கப்பட்;டது. புலிகளின் சர்வதேசப் பயணங்களின் பின்னால் உள்ள அரசியல் இதுவென்பதை பலதரப்பும் ஊகித்துக் கொண்டது.
மறுபுறம், தமக்கான நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கைத்தீவின் இனமுரண்பாட்டினை கையாளும் சர்வதேச சக்திகளுக்குப் புலிகள் ஏற்படுத்தும் அழுத்தம் போராக வெடிக்குமோ என்கின்ற பயம் ஏற்பட்டது. சிங்கள தேசியவாதத்தின் பலவீனமான புள்ளிகளில் புலிகளின் அடிவிழுவதை கணித்துக் கொண்ட உலக சமூகம் ஒருவித இடைவெளியைத் தேடியது.
தமிழர்களின் நெருக்குவாரம் தமது வியூகத்தின் மீது விழுவதை கணித்துக் கொண்ட சிறீலங்கா, இராணுவ நடவடிக்கைகளினை முடுக்கிவிட்டது. இடைக்கால நிர்வாக அமைப்புக்கான வரைவு வெளிவந்த சில மாத காலத்தில் நிழல்யுத்தம் புலிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டது. ஆழ ஊடுருவித் தாக்கும் படைகள் மீள செயற்படத் தொடங்கின. ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளின் பகிரங்கமான பதிலடியை எதிர்பார்த்து சிறீலங்கா பொறிவைத்தது. புலிகள் இந்த ஆட்டத்திலும் பங்கேற்றனர். சர்வதேச நிகழ்ச்சித்திட்டத்துடன் நேரிடையாக முரண்படும் போரினை தவிர்த்தனர் அல்லது பின்போட்டனர். நிழல் போரினை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் 2004ம் ஆண்டு மாவீரர் நாளில் தமிழீழ தேசிய தலைவர் நிகழ்த்திய கோட்பாட்டு விளக்கவுரையில், தமிழர்களின் அரசியல் சூன்ய நிலையை கோடிட்டுக் காட்டப்பட்டது. ஒரு போரின் விளிம்புக்குள் இலங்கைத்தீவு இருப்பதை வெளிச்சம் போட்டார். இந்த அறிவிப்பும், விபரிப்பும் சர்வதேச சமூகத்தின் முன்வைக்கப்பட்ட அரசியல் - இராஐதந்திர வினாவாகவே அமைந்தது.
ஆழிப்பேரலை இந்த வினாவுக்கானதொரு தப்பிக்கும் வாயிலை சர்வதேச தரப்புக்கு திறந்து வைத்தது. மக்களின் மனிதாபிமானத் தேவைகளுக்கு உதவிட வேண்டிய அதேவேளையில், தமது முரண்பாட்டு தீர்வு முயற்சிகளுக்கானதொரு வாய்ப்பாகவும் இதனை சர்வதேச தரப்புப் பாவித்தது. சிறீலங்காவிற்கும், தமிழீழத்திற்குமானதொரு உறவுபரிமாற்றத் தளத்தை ஆழிப்பேரலை நிவாரண முயற்சிகள் ஊடாக அனைத்துலக சமூகம் முன்னிறுத்தியது. இது இணக்க முயற்சிகளை மீள ஆரம்பிக்க உதவும் என நம்பியது.
புலிகள் இந்த விடயத்தில் மற்றுமொரு காய்நகர்த்தலை செய்தனர். சர்வதேச சமூகத்தின் நோக்கினைப் புரிந்து கொண்டாலும், தமது அடிப்படை நிலையில் நின்றவாறு இந்த முயற்சிக்கு முழுமையாகவே ஆதரவை வழங்கினார்கள்.
பொதுக்கட்டமைப்பினை வரைவு செய்த நோர்வே தரப்பினர் தமது அனுபவங்கள் மற்றும் தமிழ் தலைமையின் நிலைப்பாட்டின் உறுதியைக் கணக்கில் எடுத்து சிங்கள அரசமைப்புக்குள் அடங்காத கட்டமைப்பை முன்வைத்தனர். வடக்குக்கிழக்குக்கான பிராந்திய நிர்வாகம், சர்வதேச நிறுவனம் ஊடான நிதிக்iகாயள்கை என்பனவற்றினை சர்வதேச தரப்பு முன்வைத்தது. சிங்கள வியூகத்துக்கு இது அச்சுறுத்தலாக இருந்தது.
ஆயினும், சிறீலங்கா தலைமையினால் இதனை நிராகரிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சிங்கள வெளிவிவகாரத்துறை சில பரப்புரை முயற்சிகளை எடுத்தது. சில சர்வதேச சந்திப்புக்களை நடாத்தியது. எனினும், உலக சமூகத்தின் பிடி வலுவாக இருந்தது.
இதனால் மற்றுமொரு விட்டுக்கொடுப்புக்கு சந்திரிகா தலைமையிலான சக்திகள் உடன்பட்டன. மற்றுமொரு சர்வதேச சக்திகளின் தயவுநாடும் சக்தியான ரணில் தரப்பினர் இந்த நிலைப்பாட்டுடன் முரண்படவில்லை.
எனினும், அடிப்படையில் சிங்கள தேசியவாதத்திற்கு இந்தக் கட்டமைப்பு ஏற்புடையதல்ல. பிரதமர் மகிந்த ராஐபக்சவின் மௌனமான எதிர்ப்பும், ரணில் தரப்பு முன்வைக்கும் ஆதரவு போன்ற எதிர்ப்பும் இவற்றிற்கு வெளிப்படையான சான்றாகும். இந்தப் பொதுக்கட்டமைப்பின் இரண்டாவது தளமான பிராந்திய குழுவுக்குப் புலிகளினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதி தலைமை ஏற்பதை ஐதேக எதிர்ப்பதாக நாசுக்காகப் பேசும் பேராசிரியர் பீர்pஸ் பேரினவாதி போன்று விபரித்தமையை வியப்பானதல்ல.
பொதுக்கட்டமைப்பு பற்றிய தமது எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது Nஐவிபியும், சிங்கள தேசியவாத சிந்தனையாளர்களின் ஒருபகுதியினரும் மொன்றிவீடியோ (ஆழவெiஎனைநழ ஊழnஎநவெழைn - 1933 ) உடன்படிக்கையின் பிரிவு ஒன்றின் கீழ் சொல்லப்படும் விடயத்தினை எடுகோள்களாக்கினார்கள். இந்த உடன்பாடு புதிய தேசங்களை அங்கீகரிப்பதற்கான நிபந்தனைகளை எடுத்துக் காட்டி அச்சப்பட்டமை சுவராசியமானதாக இருந்தது. பொதுக்கட்டமைப்பின் கீழ் வருவது 2 கிமீ கரையோரத்திற்கான நிர்வாகமே ஆயினும் இது தமிழீழத்தை ஏற்றுக்கொள்வதற்கான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று இவர்கள் கருதுகின்றனர்.
சிறீலங்காவின் அரசமைப்புக்கும், பாரளுமன்றத்திற்கும் பதிலளிக்காத கட்டமைப்பு, திறைசேரிக்குக் கட்டுபடாத நிதிப்பங்கீடு என்பனவற்றினை ஏற்றுக் கொள்வது சிங்கள தேசியவாத்தினைப் பொறுத்தவரை ஏதோ ஒன்று உண்மையாகவே கைநழுவிப் போவதைப் போன்றுள்ளது. அது உண்மையாகிவிடுமென நம்புவோம்! |