|
குரல் 01 :- உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றது. விஞ்ஞானத்தில் மட்டுமல்ல அனைத்திலும் அனைத்திலுமே.........
குரல் 02 :- உலகம் என்று யாரைக் கருதுவது? உலகம் என்பதற்கு உயிர் கொடுத்ததே அதில் வாழ்கின்ற ஒவ்வொரு உயிரியும் தானே? அப்படிப் பார்த்தால் உலகம் இன்னும் முன்னேறவில்லை. ஏனென்றால் தன்னிறைவடைந்த நாடுகளை விடவும் வளர்முக நாடுகளே பெரும்பான்மையாக உள்ளன.
குரல் 01 :- தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த செகத்தினையே அழிக்க நினைத்தார் எங்கள் புரட்சிக் கவிஞர். ஆனால் இங்கே தனியொருவருக்கல்ல ஒரு கண்டத்தின் குறிப்பிட்ட நாடுகளுக்கு.......அந்த நாடுகளின் இலட்சக் கணக்கான மக்களுக்கு.....உணவில்லை. எங்கள் தேசத்தின் வறிய கிராமங்களின் தெருநாய்களைப் போன்ற விலாவென்புகள் வெளித்தள்ளியவாறான அந்த உணவற்ற தேசத்து மக்களின் படங்கள் நவீன மயப்படுத்தப்பட்ட ஊடகப் பக்கங்களில் இடைக்கிடையே வந்து போகின்றன திருநீற்றுப் பூசணிக்காய்கள் போல.........
குரல் 02 :- ஆனாலும் உலகம் முன்னேறி விட்டதாம் நம்ப முடியவில்லை என்றாலும் பரவலாக எங்கும் இப்படித்தான் கதைக்கின்றார்கள்.
(கடற்கரும்புலிகள் பாகம். 04 - மனமே........மனமே...........)
உண்மையில் முன்னேறியது யார்? என்று பார்த்தால் காலெடுத்து முன்னால் வைக்க வலுவுள்ளவர்கள் முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார்கள். பசித்துக் கிடக்கின்ற அப்பாவி மனிதர்களின் மீது பசி தீர்த்தவர்கள் நடந்து போகின்றார்கள். பாதை அமைத்து.....பாதம் பதித்து.......பசித்தவர்களால் எதுவும் செய்ய முடியாதுள்ளது ஏனென்றால் அவர்களுக்கு இப்போது அதிகமாகப் பசிக்கின்றது.
குரல் 01 :- தங்களது சகோதரர்களின்; மேலே ஏறிப் போவது பற்றி பசிதீர்தவர்களுக்குக் கவலை இல்லை. அவர்களது பாதங்கள் கூசவேயில்லை. அவர்களுக்கு இப்போது வேறு பசிகள். சமுத்திரத்தின் அடியாழம் வரை ஊடுருவும் ஊடுகதிர் கண்டு பிடிப்பது
பற்றி.......... உலகை முழுவதுமாய்க் கண்காணிக்கக் கூடிய ஓரேயொரு செய்மதியைச் செய்வது பற்றி.....வேற்றுக் கிரகங்களை அறிவது
பற்றி...பூமியை விட்டு இன்னும் எவ்வளவு தூரம் சென்று வாழலாம் என்பது பற்றி.....
குரல் 02 :- கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கிரகத்தில் அக்கிரக வாசியொருவருக்கு மாலைச் சிற்றுண்டி இல்லையெனில் நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு உணவுகளைத் தாங்கிய செய்மதிகளை அனுப்பும். அந்தப் புதிய கிரகமே நிறைந்து போகுமளவிற்கு.....அதே நேரம் இங்கே பசித்த தேசத்து மனிதர்கள் இலையான்களுக்கு உணவாகி கொண்டிருப்பார்கள். காரணம் புதிய கிரகத்தில் புதிய கனிய வளங்கள் இருக்கும். இங்கே செத்துக் கொண்டிருப்பவர்களின் தேசத்திலோ பழகிப் போய்விட்ட சிலிக்காவும் தங்கம் வெட்டி எடுக்கப்பட்ட பள்ளங்களும் தான் இருக்கும்.
குரல் 01 :- உலகம் இப்படித்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றது. வசதி படைத்தவர்களின் சுயநல, வக்கிர தேவைகளுக்கு ஏற்றவாறே கண்டுபிடிப்புக்களும் நடைபெறுகின்றன. அதிசயம் என்று வியக்கப் படுகின்றவற்றின் வரலாறுகளை ஆராய்ந்தால் அவை அழகானவையாகவே இல்லை.
குரல் 02 :- என்ன தான் இருந்தாலும் உலகம் முன்னேறிக் கொண்டேதான் இருக்கின்றது.
குரல் 01 :- பசித்தவர்களையும், நோயுற்று நலிந்தவர்களையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு உலகம் தன்பாட்டில் முன்னேறுகின்றது.
குரல் 02 :- பசித்வர்களும் பாதிக்கப்பட்டவர்களும் இதிலிருந்து உணர வேண்டியது யாதெனில் ஒவ்வொருவரும் தத்தமது தேவையைத் தீர்க்க தாங்களே முயற்சிக்க வேண்டுமென்பதே.
குரல் 01 :- பசித்தவர்கள் தங்களது வலுவற்ற கைகளால் மண்ணைக் கிண்டிக் களையை எனினும் விதைத்து பசியாறித் தெம்பினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் விதை தரப் பலபேர் வருவார்கள். நோயுற்றுச் சீழ் வருகின்றவர்களும் கூட அந்தக் கைகளாலேயே மருந்தைக் கண்டுபிடித்து பூசிக் கொண்டு குணமாகினால் போதும் பின்பு தோல் நிறத்தை அழகுபடுத்த உதவவும், தழும்புகளை அழிப்பது பற்றி வகுப்பெடுக்கவும் அனேகம் பேர் அவசரமாய் வருவார்கள்.
குரல் 02 :- அவர்களது இந்த அவசரத்தின் காரணம் சக மனிதர்கள் மீதான பாசமல்ல. அடுத்தவன் தங்களை விடவும் ருசியாய்ச் சாப்பிட்டு விடக்கூடாது என்ற துடிப்பு. மற்றவன் தங்களை விடவும் அழகாக ஆகிவிடக் கூடாது என்ற தவிப்பு.
ஆகவே உலகம் இப்படித்தான் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
குரல் 01 :- இந்த உலகத்தில் தான் எங்களது தேசமும் வாழ்வா, சாவா என்ற போரில் வென்று வாழ்வே என்ற உறுதியுடன் தலை நிமிர்ந்துள்ளது.
இந்தத் தலைநிமிர்வுக்காகத்
தலைமறைவாக வாழ்ந்தவர்கள் பலர்.
தம்மை ஈந்தவர்கள் பலர்.
எங்களுக்காக தாங்களேதான்
செயலாற்ற வேண்டும் என்ற சத்தியம்
தெரிந்து தெளிந்த மனிதர்கள் அவர்கள்.
குரல் 02 :- இன்றைய இந்த வேட்டற்ற பொழுதுகள் விடிய வேண்டும் என்பதற்காய் தங்கள் இரவுகளை அவர்கள் தொலைத்து செயலாற்றத் தொடங்கியது எப்பொழுது என்பதை அவர்கள் மட்டுமே அறிவார்கள்.
குரல் 01 :- பசிக்காமல் எங்கள் சந்ததி வாழ
அவர்கள் பசித்திருந்தார்கள்
நிம்மதியாய் எங்கள் மக்கள் தூங்குவதற்காக
அவர்கள் விழித்திருந்தார்கள்
எங்கள் தேசத்தின் சிலுவையை இறக்க
அவர்கள் தங்கள் மீது ஆணியறைந்து கொண்டார்கள்.
குரல் 02 :- அழகான இலட்சியங்களை மனதில் கொண்ட அந்த இளைய மனிதர்களின் பாதங்கள் பதிந்துபோன தடம் மறைந்த இடத்திலிருந்தே இன்றைக்கு சமாதானமும் பயணித்து வந்திருக்கின்றது.
குரல் 01 :- சண்டையின் அதியுச்ச விளைவு இதுவென்று திசைகள் அதிர இவர்கள் உணர்த்திய பொழுதுதான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அவசியம் புரிந்து கொள்ளப்பட்டது.
குரல் 02 :- உலகம் என்று கருதப்படுகின்ற முடிவெடுக்கக்கூடிய சக்திகளனைத்துமே அவர்கள் காற்றாகிப் போன இடம் வரை வந்து கை குலுக்கிக் கொள்கின்றன.
குரல் 01 :- தன் பாட்டில் முன்னேறிக் கொண்டிருந்த உலகத்தின் முன்னால் போய் எங்கள் தேச வாழ்வு பற்றிய கேள்விக் கொத்தை தங்கள்உதிர மையினால் அவர்கள் எழுதி தீட்டியபொழுது உள்ளுக்குள் உறைந்து போனது உலகம். அந்த உறைதலில் உந்துதல் தான் இன்றைய சமாதானத்தில் அவர்களை உத்வேகம் காட்டி ஓடித்திரியச் செய்கிறது.. உதவி வழங்கியாவது சமாளித்து விடலாம் என்று நினைக்க வைக்கின்றது.
குரல் 02 :- இன்றைக்குள் சரியாய் இரண்டு வருடங்களின் முன் இறுதியாய் அவர்களின் பாதங்கள் நடந்தன. கடைசியாய் அவர்கள் கலகலத்துக் சிரித்தார்கள். பிரிவின் பாடலை மனதிற்குள் இசைத்தபடி வெளியே அவர்கள் வேடிக்கையாய்ப் பாடினார்கள். தங்களது இறுதி இரவுணவினைக் கூட அவர்கள் ரசித்துத்தான் சாப்பிட்டார்கள். எல்லாமே இறுதியாய்........ஆனால் உறுதியாய்.........
குரல் 01 :- சாகப் போகிறோம் என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அதனைத் தமது முடிவு என்று நினைக்கவில்லை. ஒரு
அராஜகத்திற்கு அட்டூழியத்திற்கு தாங்கள் எழுதும் முடிவுரை என்றே நினைத்தார்கள்.
குரல் 01 :- இலக்கு நோக்கி ஒவ்வொரு அடியாய் முன்னேறுகையில் அவர்களது மனதிற்குள் ஆயிரம் கேள்விகள்.
குரல் 02 :- வழியில் ஏதும் தடைகள் வருமா?
குரல் 01 :- இலக்குகள் எல்லாம் நினைத்தபடி இருக்குமா?
குரல் 02 :- எம்முடன் கூடவரும் இந்த வெடி பொருட்கள் இறுதிக் கணங்களில் செயற்பாட்டில் பிசகுமா?
குரல் 01 :- இந்த மருந்துகள் இலக்கினை முழுமையாகத் தகர்க்கப் போதுமா?
குரல் 02 :- இன்னும் அதிகமாய் இலக்குக் கிடைத்தால் வெடிபொருளுக்கு என்ன செய்வது?
குரல் 01 :- ஆகக்கூடியதாய் எவ்வளவைத் தகர்க்கலாம்?
குரல் 02 :- தாக்குதலின் விளைவு எப்படி இருக்கும்?
குரல் 01 :- இவை போனால் உடனே புதிய உபகரணங்களின் கொள்வனவு நடைபெறுமா?
குரல் 02 :- உள்ளே யாரும் அப்பாவிகள் இருப்பார்களா? அவர்களுக்கு ஆபத்தை விளைவித்து விடுவோமா?
குரல் 01 :- எதிர்பார்ப்பை மிஞ்சுகின்ற கேள்விகள்.........
கேள்விகளை மீறிய பரபரப்பு.....
பரபரப்பை மீறிய பகை மீதெரியும் கோபம்.......
கோபத்தால் விளைகின்ற வேகம்..........
வேகத்தின் உள்ளிருக்கும் வெற்றி.......
அந்த வெற்றியை எண்ணும்பொழுது வரும் உற்சாகம்.....
குரல் 02 :- நாளைய விடியலில் கதிர்களில் விரியப் போகும்
தங்களது செயலின் விளைவுகள்.......
எதிரி அடையப் போகின்ற அதிர்ச்சி......
மக்கள் அடையப் போகின்ற மகிழ்ச்சி.........
ஆராரின் பிள்ளைகளோ என்று தெரியாது
தெய்வத்தைக் கைதொழப் போகின்ற அம்மாக்கள்........
குரல் 01 :- அம்மா..........
எப்படியும் உணர்ந்து கொள்ளும் ஒரு ஜீவன்
அப்பாவுக்கும் நெஞ்சிற்குள் வலிக்கும்
அக்கா விழிநீரைத் துடைத்துக் கொள்வாள்
அண்ணா பல்லை இறுகக் கடிப்பான்.
தம்பி அதிர்ந்து போவான்
தங்கச்சி பாவம் அவள் சின்னப் பிள்ளை
பாட்டி உடனே பேரனை விசாரிப்பாள்
தாத்தாவும் பாவம் தவித்துப் போவாள்
குரல் 02 :- அவர்களை விடவும் இதோ கட்டியணைத்துக் கையசைக்கின்ற இவர்கள் மிகவும் பாவம். எங்களுக்காக மௌனமாய் நிற்கின்ற இவர்கள் மனதிற்குள் இப்பொழுதே அழுகிறார்களோ? என்ன செய்வது? இழப்புகளில்லாமல் வெற்றிகளுமில்லை. எப்படியும் வெற்றி பெறவே வேண்டும். துன்பங்கள் இனிமேலும் தொடரக்கூடாது.
அவர்களது மனதின் சிந்தனைகள் விரிந்துகொண்டிருக்க அவர்களின் பாதங்கள் இலக்கின் எல்லையைத் தொட்டன. இனி விசைவில்லின் அழுத்துகைக்கு உட்படும் பிரதேசம் நின்று நிதானித்த அவர்களின் சிரங்கள் இறுதியாய் வட கிழக்கை நோக்கித் திரும்பின.
குரல் 01 :- எம் இனிய தேசத்து உறவுகளே!
நீங்கள் உங்களை மறந்து உறங்கிக் கொண்டிருந்த
அந்தக் காரிருள் பொழுதினில்
அவர்களின் கரங்கள் உங்களை நோக்கி அசைந்தன
நேற்றுப் பிறந்த மருமகனிடமும்
இன்று நிலம் பார்க்கும் பெறாமகனிடமும்
நாளைக்கு வரப்போகின்ற பேரக் குழந்தைகளிடமும்
அதன் பின்னரான சந்ததிகளிடமும்
இறுதி விடை கேட்டு அவர்களின் கரங்கள் அசைந்தன
நீங்கள் யாருமே அதை உணரவுமில்லை
அவர்களுக்கு விடை கொடுக்கவுமில்லை
விடைகிடைக்குமென்று அவர்கள் காத்திருக்கவுமில்லை.
குரல் 02 :- அவர்கள் போய் விட்டார்கள்
இன்றைய நாட்கள் அவர்களுடையவை
இந்த அமைதி அவர்களால் வந்தது
புரிந்து உணரும் திறன் எல்லோருக்கும் வேண்டும்
அது இல்லாவிட்டால்.........
குரல் 01 :- அது இல்லாவிட்டால்...
மீண்டும் தேசம் சிவக்குமெனின்
இதே பாதை புதுப்பிக்கப் படலாம்
தேசம் தேவை என்று எதிர்பார்க்கையில்
எதுவும் செய்யப் பலர் தயாரகவே உள்ளார்கள்.
'எம் தேசத்திற்காய் எங்கெங்கும்"
துளசிராம் வட்டம்.
|